பொதுமக்களை உயர்த்துங்கள்! - த. ஸ்டாலின் குணசேகரன்

2012ஆம் ஆண்டிற்கான ஈரோடு புத்தகத் திருவிழாவின் பூர்வாங்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' இதழில் ஒரு வித்தியாசமான கட்டுரை வெளிவந்திருந்தது.
 பொதுமக்களை உயர்த்துங்கள்! - த. ஸ்டாலின் குணசேகரன்

இளைய பாரதமே...எழுக!-23

 2012ஆம் ஆண்டிற்கான ஈரோடு புத்தகத் திருவிழாவின் பூர்வாங்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' இதழில் ஒரு வித்தியாசமான கட்டுரை வெளிவந்திருந்தது. மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த பாபர் அலி என்ற மாணவன் நடத்திவந்த பள்ளிக் கூடம் பற்றிய கட்டுரை அது.
 கல்கத்தா அருகிலுள்ள முர்ஷிதாபாத் எனும் பகுதியில் பள்ளிக்கூடமே இல்லை. அப்பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் கல்வி பற்றிய விழிப்புணர்வற்றவர்களாக விளங்கினர். இத்தகைய காரணங்களினால் அப்பகுதியில் வாழும் சிறுவர்கள் அனைவரும் சிறுசிறு வேலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
 இச்சூழலிலும் கூட தனக்குக் கல்வியறிவு இல்லாவிட்டாலும் தனது மகனுக்குக் கல்வி வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று கருதிய நசிருதீன், தனது மகன் பாபர் அலியை தொலைவிலுள்ள பள்ளியொன்றில் சேர்த்தார்.
 போக வர பத்து கிலோ மீட்டருக்கும் மேல் சென்று பாபர் அலி அப்பள்ளியில் படித்து வந்தான்.
 ஒரு நாள் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது வழியில் வேலை செய்து கொண்டிருந்த தனது வயதையொத்த சிறுவர்களைப் பார்த்தவுடன் தனக்குக் கிடைத்த கல்வி தனது பகுதியில் வாழும் பிறருக்குக் கிடைக்கவில்லையே என்று கருதி வருந்தினான் பாபர் அலி. வீட்டுக்கு வந்ததும் தனது வீட்டிற்குப் பின்புறத்திலுள்ள ஓர் இடத்தில் அப்பகுதியிலுள்ள எட்டுச் சிறுவர்களை அமர வைத்து தனக்கு தெரிந்தவற்றை விளையாட்டாகச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினான். வந்த சிறுவர்கள் இவன் சொன்னதை ஆர்வமாகக் கேட்டார்கள். அடுத்தடுத்த நாட்களிலும் அவ்வாறே செய்தான். மாலை நான்கு மணிக்குப் பள்ளியை விட்டு வீட்டுக்கு ஓடோடி வந்து அந்தந்த நாள் வகுப்பைத் தொடங்கினான் பாபர் அலி.
 தனக்கு வகுப்பறையில் ஆசிரியர்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டதை ஆர்வமாக சக சிறுவர்களுக்குக் கதை சொல்வது போல் சொல்லிக் கொடுத்து வந்தான். நாளுக்கு நாள் பாடம் கேட்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
 பக்கத்து ஊர்களிலிருந்தும் பாடம் கேட்க வரத் தொடங்கினர். பாபர் அலி ஒருவனால் மட்டுமே சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தன்னுடன் படிக்கும் சில சேவை மனப்பான்மையுள்ள மாணவர்களிடம் இத்தகவலைக் கூறி அவர்களில் ஆர்வமுள்ள 4 , 5 பேரை அழைத்து வந்து அவர்களையும் ஆசிரியர்களாகப் பணியாற்ற வைத்தான்.
 வீட்டுக்குப் பின்னால் இருந்த வகுப்பறை அருகிலிருந்த மரங்கள் அடங்கிய அரசுப் புறம் போக்கு நிலத்திற்கு மாற்றப்பட்டது. மரங்களே வகுப்பறைகளாகின.
 மழை வந்தால் மட்டுமே பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இப்படியாக எட்டுப் பேரைக் கொண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி படிப்படியாக வளர்ந்து ஒன்பது ஆண்டுகளில் சுமார் 800 மாணவர்களைக் கொண்ட பள்ளியாக உருவெடுத்தது.
 சாதாரண மக்களின் குழந்தைகளுக்கு , அவர்களுள் ஒருவனாக விளங்கிய பாபர் அலியின் கல்விச் சேவையைப் பாராட்டி லண்டன் - பி.பி.சி வானொலி நிறுவனம் 2009 ஆம் ஆண்டு " யங்கெஸ்ட் ஹெட் மாஸ்டர் ஆஃப் தி வோர்ல்ட்' என்ற விருதை வழங்கியது. அப்போது பாபர் அலிக்கு பன்னிரண்டு வயது. அதேபோல சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனம் " ரியல் ஹீரோ' என்ற விருதை வழங்கியது.
 பாபர் அலியைப் பற்றிய இத்தனை செய்திகளையும் அக்கட்டுரையில் வாசித்த பிறகு எப்படியேனும் இந்த இளைஞனிடத்தில் பேசிவிடவேண்டும் என்று கருதி அவனின் தொலைபேசி எண்ணை அரிதின் முயன்று பெற்றுப் பேசினோம்.
 அவனது பணிகளை எல்லாக் கோணங்களிலும் பாராட்டிவிட்டு, "இத்தகைய வித்தியாசமான கல்விச் சேவை சாமானியர்களுக்குச் செய்யவேண்டுமென்று முதன் முதலில் எப்படிப் பொறி தட்டியது?' என்று அவனிடம் ஒரு கேள்வி கேட்டோம்.
 ஒரு நிமிடம்கூட யோசிக்காமல், ""சுவாமி விவேகானந்தர் இஸ் மை லீடர்'' என்று பதிலளித்தான். "என்ன சொல்கிறாய்?'' என்று அவனது ஒருவரி பதிலை விரித்துச் சொல்லத் தூண்டும் விதத்தில் இன்னொரு கேள்வி கேட்டோம்.
 "ஆம்... விவேகானந்தரின் கருத்துக்கள்தான் எனக்குக் கல்விச் சேவை செய்யக் காரணமாக இருந்தது'' என்று சொன்னதோடு அதற்கான விரிவான விளக்கமும் அளித்தான் பாபர் அலி.
 பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டு கடைசியில், "நீ இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வரவேண்டும்'' என்று கூறினோம். ""புத்தகத் திருவிழாவிற்காகவா? எதற்கு?'' என்று கேட்டான். ""திருவிழாவில் ஒவ்வொரு நாள் மாலையும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். அதில் ஒரு நாள் நிகழ்வில் நீ பங்கேற்க அழைக்கிறோம்'' என்று பதிலளித்தோம்.
 "அய்யய்யோ நான் ஒன்றும் பேச்சாளன் அல்ல. எனக்கு மேடையில் பேச வராது. தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்'' என்றான்.
 அதற்கு, "நீ பேசாவிட்டால் பரவாயில்லை... உன்னை மேடையில் அமர வைத்து உன் சேவையைப் பற்றியும் உன்னுடைய கல்விச்சிந்தனை குறித்தும் நாங்கள் மக்களிடம் பேச வேண்டும். உன்னை அழைக்கிற நாளில் எங்கள் மாநிலத்தின் சிறப்பு மிக்க அரசுச் செயலாளர் வெ. இறையன்பு அதே நிகழ்வில் தனித் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்'' என்றெல்லாம் நிகழ்ச்சி பற்றி விளக்கிச் சொன்ன பிறகு வருவதற்கு ஒப்புதலளித்தான்.
 கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பாபர் அலியை மக்கள் சிந்தனைப் பேரவை மாணவத் தன்னார்வலர்கள் ஐந்து பேர் வரவேற்று ஈரோட்டிற்கு அழைத்து வந்தார்கள். அவர்கள் அனைவருமே பாபர் அலியின் வயதை ஒத்தவர்கள்.
 ஈரோட்டிற்கு வந்த பிறகு விடுதி அறைக்கு அழைத்துச் சென்று காபி கொடுத்தோம். ""வேண்டாம்'' என்று பணிவாக மறுத்தான். டீ, பால், ஹார்லிக்ஸ் என்று தெரிந்தவற்றையெல்லாம் சொன்னோம். புன்முறுவலுடனும் கூச்ச சுபாவத்துடனும் ""வேண்டாம்'' என்றான். வரும் விருந்தினர்களுக்கு உடன் தண்ணீரும் இதுபோன்ற ஏதேனும் ஒரு பானமும் கொடுப்பது தமிழ்நாட்டின் வழக்கம் என்று நகைச்சுவையுடன் நண்பர்கள் தெரிவித்தனர்.
 அதற்கு "எங்கள் ஊரிலும் இதுதான் வழக்கம். ஆனால்... இன்று காலை நான்கு மணியிலிருந்து மாலை ஆறரை மணிவரை ஒரு சொட்டுத் தண்ணீர்கூட குடிக்க மாட்டேன். ஏன்... என்னுடைய எச்சிலைக்கூட இயன்றளவு விழுங்க மாட்டேன்... நான் ரம்ஜான் நோன்பிருக்கிறேன்'' என்று பதிலளித்தான். இது விவரம் தெரியாமலிருந்த அங்கிருந்த அனைவருக்கும் ஓர் இனம் தெரியாத நெகிழ்ச்சி ஏற்பட்டது.
 ஆம்... பாபர் அலி ஓர் இஸ்லாமிய இளைஞன் என்பதோடு இஸ்லாமிய மதக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் முழுமையாகப் பின்பற்றும் அளவுக்கு அம்மதத்தின் மீது பிடிப்புள்ளவன் என்பதையும் உணர்ந்துகொண்டோம்.
 அத்தகைய மாற்று மதத்தினரின் மனதில் கூட கல்விச் சிந்தனையையும், சேவை மனப்பான்மையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் ஏற்படுத்தும் ஆற்றலும் ஆளுமையும் விவேகானந்தரின் கருத்துகளுக்கு இருந்துள்ளது என்ற செய்தி மேலோட்டமாய் பார்க்கிறபோது சாதாரணமாகத் தோன்றினாலும் சமூக உணர்வோடும் ஆய்வுச் சிந்தனையோடும் இதனை ஊன்றிப் பார்க்கிறபோது இதன் அர்த்தமும் ஆழமும் நமக்குத் தெளிவாகத் தெரிய வருகிறது.
 பாபர் அலி நடத்தும் பள்ளியின் ஆண்டு விழா மலர்ப் பிரதியொன்றை எங்களுக்கு அளித்தான். அதன் அட்டைப் படத்தில் விவேகானந்தரின் படமே இடம் பெற்றிருந்தது.
 விவேகானந்தர் மறைந்து 110 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவிற்கு விடுதலை கிடைத்து முக்கால் நூற்றாண்டுகள் உருண்டோடிய பின்பும் அவரின் தாக்கம் ஓர் இந்திய இஸ்லாமிய இளைஞனிடத்தில் இந்த அளவுக்கு இப்போதும் இருக்கிறதென்றால், எந்த வசதியும் இல்லாத காலத்தில், விடுதலைப் போராட்ட இயக்க உணர்வே துளிர் விட்டும் விடாமல் இருந்த இருண்ட சூழலில், ஆங்கிலேய ஆட்சிக் கெதிராக எழுந்த விவேகானந்தரின் போர் முழக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் நன்கு உணர முடிகிறது.
 "இந்தியாவை வெல்வது ஆங்கிலேயருக்கு அவ்வளவு எளிதாக இருந்தது ஏன் ? அவர்களிடம் சமுதாய உணர்வு இருந்தது. நம்மிடம் இல்லை. நமது தலைவர்களுள் ஒருவர் இறந்து போனால் மற்றொருவரை பெற நாம் நூற்றாண்டுகளாகக் காத்திருக்க வேண்டும். அவர்களோ, உடனடியாக வேறு தலைவர்களை உருவாக்கக் கூடியவர்கள்... நமது நாட்டில் தலைவர்கள் இல்லாத பஞ்சம். ஏன் இப்படி ? மேலை நாட்டினர் தலைவர்களை உருவாக்குவதற்கான தளம் பெரியது , நம் விஷயத்தில் அது மிகச் சிறியது. மூன்று, நான்கு அல்லது ஆறு கோடி மக்களே உள்ள நாட்டின் களத்தை ஒப்பிடும் போது, முப்பது கோடி மக்களையுடைய ஒரு நாட்டினருக்கு தலைவர்களை உருவாக்குவதற்கான களம் மிகச் சிறியதாக உள்ளது. ஏனெனில், அந்த நாடுகளிலெல்லம் கல்வி பெற்ற ஆண் - பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
 நமது நாட்டினரின் பெருங்குறை இதுதான். இதை அகற்றியே தீர வேண்டும். பொதுமக்களுக்குக் கல்வியூட்டி அவர்களை உயர்த்துங்கள். இந்த ஒரு வழியில்தான் சமுதாய உணர்வு கொண்ட நாடு உருவாக முடியும்'' என்று கூறியுள்ளார் விவேகானந்தர்
 "நமக்கு இப்போது வேண்டியது என்ன தெரியுமா ? அன்னியரின் கட்டுப்பாடுகளின்றி, நமது பல்வேறு துறை அறிவுகளுடன் ஆங்கிலமும் விஞ்ஞானமும் கற்பதே. தொழிற்கல்வி வேண்டும். தொழில் வளம் பெருகுவதற்கான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். மக்கள் வேலை தேடி அலைவதை விட்டுவிட்டு கைத்தொழிலில் ஈடுபட்டு நாலு காசு சம்பாதிக்கத் தகுதியுடையவர்களாக உருவாக வேண்டும்'' என்று கல்வி பற்றியான தனது கண்ணோட்டத்தைத் விளக்கியுள்ளார் விவேகானந்தர்.
 ஆன்மிகம் , நாட்டுப்பற்று , கல்வி ஆகிய மூன்றையும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்த்தவர் விவேகானந்தர். அவரின் கல்வி, மனப்பாடக் கல்வியல்ல... மனிதனை உருவாக்கும் கல்வி.
 (தொடரும்)
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com