தன்னிலை உயர்த்து! - 14

கி.மு.490 ஆம்  ஆண்டு, அழகாக கட்டமைக்கப்பட்ட  நகரத்து வீதிகளைக் கொண்ட  பாடலிபுத்திரத்தின் ஒரு  வீதியில் வறுமையின் பிடியில் ஒரு சகோதரனும், சகோதரியும் இருந்தனர்.
தன்னிலை உயர்த்து! - 14

கி.மு.490 ஆம்  ஆண்டு, அழகாக கட்டமைக்கப்பட்ட  நகரத்து வீதிகளைக் கொண்ட  பாடலிபுத்திரத்தின் ஒரு  வீதியில் வறுமையின் பிடியில் ஒரு சகோதரனும், சகோதரியும் இருந்தனர். சகோதரியின் கையில் ஒரு கைக்குழந்தை. அந்த சகோதரர், சகோதரியிடம், ""சகோதரி, நமது பசிப்பிணிக்கு ஒரு தீர்வு சொல்கிறேன். உனது கைக் குழந்தையை வசதியாக வாழும் ஒரு செல்வந்தரின் வீட்டில், அவர்களுக்கு தெரியாமல் வைத்துவிட்டு வந்துவிடு. இந்த அழகிய குழந்தையை வளர்ப்பதற்கு யாரும் தயங்க மாட்டார்கள். இதனால், உனது குழந்தையும் நல்ல இடத்தில் பசியின்றி வளரும். உன் பாரமும் குறையும்'' என்று யோசனை கூறினார். அதன்படி தனது குழந்தையை ஒரு செல்வந்தரின் பசு மாட்டுத் தொழுவத்தில் அழுகையுடன்  வைத்துவிட்டு வந்தார் அப்பெண். பசுக்களின் சொந்தக்காரர் அவ்வழகிய ஆண் குழந்தையை மகிழ்ச்சியோடு எடுத்து வளர்த்தார். பின்னர், சற்று பெரியவனானதும் ஒரு வேட்டுவனுக்கு அச்சிறுவனை விற்றார். அங்கு அச்சிறுவன் கால்நடைகளை மேய்த்து வந்தான். மாலை நேரத்தில் அச்சிறுவன், மற்ற சிறுவர்களுடன் விளையாடும் போது, தன்னை ஒரு மன்னனாகவும், மற்றவர்களை படைவீரர்களாகவும் பாவித்து விளையாடினான். ஒரு மணல் மேட்டை சிம்மாசனமாக மாற்றினான். செடி, கொடிகளால் தனது உடம்பில் அரச வேடம் பூண்டான்.  பிரச்னைகளோடு வருபவருக்கு நியாயம் வழங்கினான்.

" அலகிலா விளையாட்டுடையான் அவர்
தலைவர்;   அன்னவர்க்கே சரண் நாங்களே' 

என்று இராமனிடம் மற்ற குழந்தைகள் எல்லாம் சரண் அடைந்தது போல் அச்சிறுவனோடு விளையாடியவர்கள் அனைவரும் மெய்மறந்து அவனிடம் சரணடைந்திருந்தனர். 

ஒருநாள் அவ்வழியாக  ஓர் அந்தணர் வந்தார். அவர் தட்சசீலத்தைச் சேர்ந்தவர். விஷ்ணுகுப்தர் அவரது இயற்பெயர். சிறுவர்கள் விளையாடும் விளையாட்டினை ரசித்தார். அதில் மன்னர் வேடமிட்ட இளைஞனின் தலைமைப் பண்பினைக் கண்டு அதிசயித்தார். இவனுக்கு கற்றுக்கொடுத்தால் தலைமையின்றி தவிக்கின்ற பாஞ்சால மக்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினார். அவ்விளைஞனுக்கு, ஏழு ஆண்டுகள் கல்வியும், போர்க்கலையும் கற்பித்தார். பின்னர் பாஞ்சால வீரர்களுக்கு படைத்தலைவனாக்கினார். ஒரு சிறந்த படைத் தலைவன் கிடைக்கவே, வீர பாஞ்சாலகாரர்களுக்கு உற்சாகம் பீறிட்டது.  திறமை வாய்ந்த அந்தப் போர்ப்படை,  நந்த மன்னரை வென்று, மகத சாம்ராஜ்யத்தையும் கைப்பற்றி, மெளரிய சாம்ராஜ்யத்தை நிறுவியது. மக்கள் அனைவரும் அத்தலைவனை விரும்பினர். இந்திய வரலாற்றில் கிழக்கே வங்கத்தில் இருந்து மேற்கே இந்துகுஷ் மலை வரையிலும், வடக்கே  இமயத்தில் இருந்து தெற்கே நர்மதை நதி வரையிலும் உள்ள பரந்த நிலப்பரப்பை ஆண்ட அந்த இளைஞன்தான் சந்திரகுப்த மெளரியர். திறமைகளைப் பாய்ச்சி, அவ்விளைஞனைத் தலைவனாக்கியவர் கெளடில்யர் என்ற சாணக்கியர். 

தலைமைப் பண்பு என்பது மண்ணிற்குள்ளே பொதிந்துள்ள நிலக்கரி போன்றது. அது சந்திரகுப்தனிடமிருந்தது போல் எல்லோரிடமும் பொதிந்துள்ளது. கெளடில்யரைப் போல், அறிவினாலும், ஆற்றலினாலும் பட்டை தீட்டும்போது  சாதாரண மனிதன் சாதிக்கும்  தலைவனாக உருவெடுகின்றார்.  

தலைமைப் பண்பு மனிதனின் தலையாய பண்பு. இது உண்மையினால் உருபெற்றெழுந்தால் உலகம் அழகு பெறும். ஓர் அரசனுக்கு வாரிசு இல்லை. அதனால், அவர் தனது நாட்டிற்கு ஒரு சிறந்த இளவரசனை தேர்ந்தெடுக்க திட்டமிட்டார். அந்த வாய்ப்பினை அந்த நாட்டு இளைஞர்களுக்கு முரசு கொட்டி அறிவித்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரண்மனை முன் திரண்டனர். அவர்களிடம், போட்டி ஒன்றினை மன்னர் அறிவித்தார். அனைவருக்கும் விதை ஒன்று வழங்கப்படும்.  அந்த விதையை யாரொருவர் மூன்று மாதத்தில் நன்கு வளர்த்து செடியாக்குகிறார்களோ அவர்தான் இந்த நாட்டின் இளவரசன் என்று அறிவித்தார். மூன்று மாதம் நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும்  கைகளில் தொட்டிகளோடு வந்திருந்தனர். எல்லாருடைய தொட்டியிலும் வளர்ந்த செடிகள் இருந்தன. ஒரே ஓர் இளைஞனின் தொட்டியில் மட்டும் செடியே இல்லை. அவர்  நட்ட விதை முளைக்கவில்லை என்று கூறினார். அவரை மன்னர் மேடைக்கு அழைத்தார். எல்லோரும் அவரைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தார்கள். ஒரு விதையை வளர்க்கத் தெரியவில்லை என்பதை விட, அவனுக்கு பிழைக்கத் தெரியவில்லை என்ற அர்த்தம் அந்த சிரிப்பில் தெரிந்தது. மன்னர் அவரை அரியாசனத்தின் அருகே வரவழைத்து, ""இளைஞர்களே! இவர்தான் இந்த நாட்டின் எதிர்கால அரசன், இன்று நம் இளவரசர். ஏனென்றால், நான் உங்களிடம் கொடுத்தவை அவித்த விதைகள். அது எதுவுமே முளைக்காது. ஆனால் நீங்கள் எல்லாரும் விதை முளைக்கவில்லை என்று தெரிந்ததும், பதவிக்கு ஆசைப்பட்டு நேர்மையற்ற விதையினை நட்டு, அழகற்ற எண்ணங்களை செடியாக வளர்ந்து வந்துள்ளீர்கள். மனதில் உண்மையான, செயலில் நேர்மையான இவ்விளைஞனே நாட்டுக்கு தலைமை ஏற்க தகுதியானவர்'' என்றார்.

உண்மையான தலைமை என்றும் உயர்ந்து நிற்கும். தலைமை உண்மையின் உருவாய் இருக்கவேண்டும் என்கிறது மகாபாரதம்.

உண்மையில், தலைமை வேறு. தலைமைப் பண்பு வேறு. பொறுப்பிலும், நிர்வாகத்திலும் உயர்ந்த நிலையிலிருந்தால் அது தலைமை. ஒரு நல்ல பொது நோக்கத்திற்காக ஒரு குழுவை வழி நடத்தினால் அது தலைமைப் பண்பு. தலைமை தனது குழுவினை நிர்வகிக்கும். தலைமைப் பண்பு, குழுவினை நிர்வகிப்பதோடு, வழி நடத்தும். தலைமை தனது பணியினைச் செய்யும். தலைமைப் பண்பு தனித்தன்மையை வெளிக்காட்டும். ஓர் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கும். புதுமை செய்யும்.

"ஜெனரல் ஸ்ட்ராங்' என்பவர், சிப்பாய் கலகத்தின் போது இந்தியாவில் இருந்தவர் ஒரு முறை சுவாமி, விவேகானந்தரை சந்தித்தார். சுவாமிஜி அவரிடம், ""சிப்பாய்களுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் ஆயுதங்கள், வெடிமருந்துகள் எல்லாம் இருக்கின்றன. அப்படியிருந்தும், இந்தியாவில் சிப்பாய் கலகம் ஏன் வெற்றியடையவில்லை?'' என்று கேட்டார். அதற்கு ஜெனரல்  ஸ்ட்ராங்,  ""சிப்பாய்கள் பலம் வாய்ந்தவர்கள். பயிற்சி பெற்றவர்கள். ஆனால் அவர்களின் பழக்கம் உத்தரவுக்கு கீழ்படிவது. அதனால், அவர்கள் போரினை முன்னெடுத்தபோது, அதன் தலைவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு, "வீரர்களே!  போரிடுங்கள்; முன்னேறுங்கள்' என கத்தினார்களே தவிர, அவர்களை முன் நடத்திச் செல்லவில்லை. போர் எனில் அதில் முன்னிற்பவர் போர்ப்படைத் தளபதி. அவர் இறப்பையும் எதிர்கொள்ளத் தயங்கமாட்டார். விழுப்புண் பெறுவதையே வீரமென்பார்.  அத்தகைய தலைமையில்லாததால் தான் சிப்பாய் கலகம் வெற்றிப் பெறவில்லை'' என்றார் ஜெனரல் ஸ்ட்ராங்.  தலைவர் என்பவர் ஆயிரம் வீரர்களோடு அவரும் ஒருவராக இருப்பினும், அவர்களுக்கு முன் நிற்பவர். முதன்மையானவர். அவரது சிந்தனையும், செயலும், வீரர்களிடமிருந்து வித்தியாசப்படும். அந்த வித்தியாசம்தான்  சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், ""ஏன் நீங்கள் வித்தியாசமான மனிதராக தெரிகிறீர்கள்?'' என்ற கேள்விக்கு ""நீங்கள் எல்லோரும் ஏன் ஒரே மாதிரியாக காணப்படுகிறீர்கள்?'' என பதிலளிக்க வைத்தது.  தலைவர் வித்தியாசமாய் இருப்பவரல்லர். வியக்க வைப்பவர்.

1979-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்ட எஸ்.எல்.வி 3 என்னும் செயற்கைக்கோள் கடலில் விழுந்த போது சுக்கு நூறாகிப் போனது அதன் திட்ட இயக்குநர் அப்துல்கலாமின் இதயம். திட்ட இயக்குநரின் பதவி பறிக்கப்பட்டுவிடுமோ என்று கவலையோடு அனைவரும் இருந்தபோது, "கலாம், செயற்கைக்கோள் சுற்றுவட்ட பாதையில் தொடர்ந்து இருப்பார்' என்று அறிவித்தார் அதன் தலைவர். அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம், 18ஆம் நாள்,  ரோகிணி செயற்கைக்கோளை விண்ணிலே பிரகாசிக்க செய்தார் அப்துல் கலாம். அவ்வெற்றிக்காக அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் அழைத்துச்சென்று, அவர் அவையில் பேச வைத்தார் அதே தலைவர்.  ஜான் மெக்ஸ்வெல்லின் கூற்றுப்படி ஒரு சிறந்த தலைவர், கிடைக்கின்ற அழகான வெற்றியில் தனது பங்கிற்கும், குறைவான வெகுமதியைப் பெற்று, தோல்வி  வருகின்றபோது தனக்கு அதிக பங்கினை எடுத்துக்கொள்வார்கள் என்ற வரிகளுக்கு உயிராய் இருந்தார் பேராசிரியர் சதீஷ் தவான். அத்தகைய தலைமைதான் ஆற்றல் மிகு அப்துல் கலாம் என்னும் தலைமையை உருவாக்கியது. 

தனது ஞான அனுபவத்தின் மூலம் ஒரு சிறந்த தலைவனுக்கான ஒன்பது பண்புகளை பட்டியலிடுகிறார் டாக்டர் கலாம். ஒரு மாபெரும் இலட்சிய இலக்கோடும், இலட்சியத்தினை அடைவதே தனது வேட்கையாகவும், அதற்காக எவரும் பயணிக்காத பாதையில் பயணிக்கும் துணிவோடும், அதில் வெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், துணிச்சலான முடிவுகள் எடுத்து, தலைமையின் புனிதத்தினை அறிந்து, வெளிப்படைத் தன்மையான செயல்பாடுகளோடு, பிரச்னைகளைத் தகர்த்தெறிந்து, நேர்மையாய்ப் பணி செய்து, உண்மையாய் வெற்றி பெறுபவரே ஒரு சிறந்த தலைவர் என்பதை தனது வாழ்வின் அக்னிச் சிறகுப் பயணத்தின் மூலம் அறிவிக்கிறார்.

ஒரு சிறந்த தலைமை சிதறுண்ட ஊழியர்களையெல்லாம் ஒன்று சேர்க்கும். புத்தம்புது சிந்தனைகளை அறிமுகப்படுத்தும். ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பிரச்சினைகளை அணுகும். அன்னையைக் கண்டதும் ஆவலாய் ஓடிவரும் குழந்தையின் ஆர்வத்தை பணியில் உருவாக்கும். ஒரு விளையாட்டு வீரரின் உற்சாகத்தை அனைவரின் உள்ளத்திலே பொங்கி எழச் செய்யும். முடியுமா என்ற கேள்வி இல்லாமல் "நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மனதிலும் விதைக்கும். மொத்தத்தில், ஒரு சீரிய இலக்கினை செம்மையான வழியில் அடையச் செய்யும். 

தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய தகுதி வாய்ந்தவர்கள் கீழ்கண்ட பழமையான வாசகத்தை வழிமுறையாக்கிக் கொள்ள வேண்டும். "தலைவர்களே! மக்களிடம் செல்லுங்கள், அவர்களுடன் வாழுங்கள், அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள், அவர்களை நேசியுங்கள், அவர்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து தொடங்குங்கள், அவர்களிடம் இருப்பதை அடித்தளமாகக் கொண்டு கட்டி எழுப்புங்கள்.இதன் மூலம் தலைவர்களின் வழிகாட்டுதலில் மக்களால் அப்பணி நிறைவேற்றப்பட்டதும், பெருமையுடன் மக்கள் சொல்வார்கள் இதை நாங்கள் தான்  செய்தோமென்று. இவ்வரிகளை நிஜமாக்கிய அண்ணல் காந்தி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா போன்றவர்களின்  உயரிய தலைமை பண்பு, இச்சமூகத்தில் நமக்கு முன்னின்று, நமக்கு பாடம் புகட்டும் ஆல விருட்சங்கள்.

"இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்
 வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்
 நினையும் நீதி நெறி கடவான்' 

என்ற இராமாயணத்து வரிகளைப்போல்  ஒரு தலைவன் இனிமையாய்ப் பேசுபவராக,  கொடையாளியாக,  ஆராய்ந்து அறிந்து செயலில் இறங்குபவராக,  உடலோடு உள்ளமும் தூய்மையானவராக இலட்சியம் நிறைந்தவராக, எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றியடைபவராக நீதி நெறி வழுவாதவராக இருந்தால் அத்தலைவனுக்கு எவ்வித தீங்கும், அழிவும் என்றும் நேராது என்றார் கவிசக்கரவர்த்தி கம்பர்.

தலைமை தன்னிகரற்றது!

உண்மையான தலைமையே,  உன்னதமானது!

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com