நம் வாழ்க்கை... நம் கையில்!

நம் வாழ்வின் பெரும்பான்மையான பகுதியை நாம் பிறருக்காகவே வாழ்கிறோம். நமக்காக வாழ மறந்து, நாம் விரும்பியதை செய்யத் தவறி, நம் சொந்தங்களுக்காகவும், நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்துக்காகவும் மட்டும்
நம் வாழ்க்கை... நம் கையில்!

நம் வாழ்வின் பெரும்பான்மையான பகுதியை நாம் பிறருக்காகவே வாழ்கிறோம். நமக்காக வாழ மறந்து, நாம் விரும்பியதை செய்யத் தவறி, நம் சொந்தங்களுக்காகவும், நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்துக்காகவும் மட்டும் வாழ பழகிவிட்டோம். அதனால்தான் நம்மில் பலருக்கு வாழ்க்கை சுவாரசியமாக இல்லை என்று அடிக்கடி தோன்றும்.  ஏன் நம் வாழ்க்கை சுவாரசியமாக இல்லை? என்பதை யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு நாம் இந்த வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமன்றி,  இந்த பரபரப்பான உலகில் நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது என்பதை நாம் ஏனோ மறந்து விட்டோம். 

வாழ்வின் சுவாரசியத்தைப் பற்றி "ஆப்பிள்' நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒருமுறை கூறும் போது, "" மரணப் படுக்கைக்கு செல்லும் போது, நான் தான் உலகின் மிகப்பெரும் செல்வந்தன் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. நான் ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்கு செல்லும் போதும் இன்று நான் விரும்பிய ஓர் அற்புதமான செயலை செய்து முடித்தேன் என்பதே எனக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிக்கும்'' என்று கூறினார். அவரது கூற்றில் உள்ள உண்மையை மறந்து, நம்மில் பலர்  பணத்தை தேடும் நோக்கில், தமது திறமையை தொலைத்தது மட்டுமின்றி, தம் வாழ்விற்கு சிறிதும் பயனற்ற வேலைகளை செய்து வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர். 

இந்த  வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு நாளும் அற்புதமான 24 மணி நேரத்தை அதாவது 86,400 விலைமதிப்பற்ற நொடிகளை கொடையாக அளிக்கிறது. ஆனால் அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத நாம் அவற்றில் பெரும்பாலான பொழுதுகளை வீணாய்க் கழித்து விடுகிறோம். இதில் இன்னும் வருத்தமானது என்னவென்றால், அந்த அற்புதமான நொடிகளில் நம்மைச் சுற்றி இருந்த பல அற்புதமான வாய்ப்புகளை நாம் காணக்கூட தவறி விடுவது தான். 

இதில் கவனித்தக்கது என்னவென்றால் நம்மில் பலர் நாம் ஏன் நம் வாழ்விற்கு சிறிதும் பலனளிக்காத விஷயங்களில் நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறோம் என்பதை அறியாமலேயே வாழ்வது தான். நமது விருப்பம் என்ன? நமது விருப்பத்தை பூர்த்தி செய்ய நமக்கு என்ன தேவை? நம் வாழ்வின் பயன் என்ன?  என்ற கேள்விகளுக்கு  விடையை யோசிக்க கூட நாம் நேரத்தை 
செலவிடுவதில்லை! 

நமது வாழ்க்கையை அழகாக்க, பிள்ளைப் பருவத்தில்  நாம் கண்ட கனவுகளை எல்லாம் பட்டப்படிப்பு முடித்ததும் நாம் ஏனோ மறந்து விடுகிறோம். நாம் பயணிக்க வேண்டிய பாதை எது என்பதை தீர்மானிக்க தவறி விடுகிறோம். உலகம் போகும் போக்கில் நமது திறமைக்கும், கனவுக்கும் பொருத்தமில்லாத வேலைகளைச் செய்து கொண்டு நமது வாழ்வை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்கிறோம்.

சந்தையில் காய்கறி வாங்கும் போது அதை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் நாம், வாழ்க்கையை அலங்கரிக்கப் போகும் அரிய வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் அத்தகைய அக்கறையைச் செலுத்துவதில்லை. 

ஆனால் தனது பாதையை சரியாக தீர்மானித்து, தனது விருப்பத்தை நிறைவேற்றும் பணியை ஏற்று தனது இலக்கை நோக்கி நடந்தவர்களே சாதனையாளர்களாகவும், வாழ்க்கையை நன்கு படித்தவர்களாகவும் உலகத்தாரால் புகழப்படுகின்றனர். 

முடிவு உன் கையில்: வாழ்வில் வெற்றி கண்டு மகிழ்ச்சியாக இருக்கும் சிலரை பார்க்கும்போது நம்மில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் தங்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்தியது தான். நாமும் அவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமெனில் நமக்கான வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

பயனுள்ள வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை நாம் சரியாக திட்டமிடும் போது தான் நமக்கான வாய்ப்புகள் என்ன என்பது நம் கண்ணில் புலப்படும்.

நமது திட்டங்கள் செயலாக்கம் பெற பொறுமையும், முயற்சியும் அதைவிட முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம்மில் பலர் பொறுமையின்மை, பதற்றம், தம்முள் இருக்கும் அவநம்பிக்கை, சரியான முடிவு எடுக்க தெரியாதது ஆகிய  காரணங்களால், அவர்களது எண்ணங்கள் செயலாக்கம் பெறும் முன்னரே முயற்சியைக் கைவிட்டுவிடுகின்றனர். 

காலம் முழுவதும் கடினமாக உழைத்தால் மட்டும் நமது இலக்கை விரும்பியவாறு அடைய முடியாது. சாதுர்யத்துடன் கூடிய கடின உழைப்பே நம் எண்ணத்தை ஈடேற்றும் என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டியது 
அவசியம். 

உதாரணமாக, ஒரு நிறுவனம் தொடங்கி நீண்ட கால பயனை அதிலிருந்து பெற வேண்டுமென்றால் அதற்கு ஒரு நாள் உழைப்பு போதாது. தொடர்ந்து லாபம் பெறுவதற்குரிய முயற்சிகளை தொடர்ச்சியாக செய்துவருவதன் மூலமே நிலையான உயர்வைப் பெற முடியும். அது போலவே நமது வாழ்வை இனிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற ஒரு குறுகிய கால முயற்சி பலனளிக்காது. தொடர்ந்து நிலையான பலனளிக்கக்கூடிய முயற்சிகளைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் நம் வாழ்க்கை...நம் கையில்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com