நீ... நான்... நிஜம்! -35: எனக்காக... எல்லாம் எனக்காக!

"கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை' என்றொரு பழமொழி. "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி' என்றொரு பாராட்டுப் பா உள்ளது.
நீ... நான்... நிஜம்! -35: எனக்காக... எல்லாம் எனக்காக!

"கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை' என்றொரு பழமொழி. "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி' என்றொரு பாராட்டுப் பா உள்ளது. இவையெல்லாம் அளவில் சிறுத்த கடுகை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் மனிதரிலும் கடுகு மனிதர் உண்டு என்று தாளித்து எடுத்தவர் பாவேந்தர் பாரதிதாசன். தன் பெண்டு, தன்பிள்ளை, தன் சம்பாத்யம் என்று வாழும் மனம் சிறுத்த மனிதரை "சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்.. தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்' என்று பழித்துரைக்கிறார். குடும்பம் தாண்டி, தன் ஊர், தன் ஜாதி, தன் கூட்டம் மட்டும் சீராட்டி மற்ற ஜாதி, மக்களை மட்டம் தட்டி வைக்கும் மனோபாவம் உள்ள சிறுமனுசர், சிற்றதிகாரக் கேடர் சிலர் உண்டு. அவர்களை "கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்' என்று கண்டிக்கிறார் பாரதிதாசன். கொஞ்சம் பெரிய மனசுடன் இருக்கிறவரை, "தொன்னையுள்ளம்' என்று கிண்டல் செய்கிறார். 

அப்படியானால் யார் சிறந்த மனிதர்? சிறந்த தலைவர்? தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்வோர். இப்படிப்பட்டவர் உண்டா.. என்று கேள்வி எழுப்பினால் உண்டு என்பதே பதில். இந்தியப் பழங்கதைகளில் ஓர் அருமையான கதை.  ஒரு சிறு குடிசை... ஒரு தாய்  குழந்தை ஒன்றை இடுப்பில் சுமந்தபடி கொஞ்சம் வளர்ந்த பிள்ளை ஒன்றுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.  சாலையில் பெருங்கூச்சல் கேட்கிறது. ஒரு கொடுங்கோல் மன்னன், தன் கொள்ளையர் படையுடன்  ஈவு இரக்கமின்றி, எதிர்ப்பட்ட எல்லாரையும் வெட்டிக் கொன்று, வெறிபிடித்தவனாய் வருகிறான்... இதைக் கேட்ட மக்கள் ஓடி ஒளிகிறார்கள். பதுங்கி ஒதுங்குகிறார்கள். அச்சமடைந்த தாய், ஒக்கலில் பிள்ளையை ஒடுக்கியபடி, உணவருந்திய பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடினாள். ஓரெல்லைக்கு மேல், இரண்டையும் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து ஒக்கலில் இருந்த பிள்ளையை வீசிவிட்டு பக்கலில் வந்த பிள்ளையை எடுத்துக் கொண்டு, ஓடி ஒளிந்தாள்.

இரண்டு பிள்ளைகளுமே ஒரு தாய்க்குச் சமம் தானே.. அப்படியிருக்க ஒன்றை வீசி, ஒன்றைத் தேர்ந்தெடுக்க எப்படி ஒரு தாய்க்கு மனம் வரும் என்று திகைத்த கொடுங்கோலன், தாயைக் கைது செய்தான். ""இரண்டு பிள்ளைகளும் உன் பிள்ளைகளாய் இருக்க எந்த அடிப்படையில் ஒன்றை இழக்க முடிவெடுத்தாய்?'' என்று உறுமினான். தாயோ விழிநீரைத் துடைத்தபடி, ""ஐயா.. ஒன்றுதான் என் பிள்ளை.. மற்றொன்று பக்கத்து வீட்டுப் பெண்மணி பார்த்துக் கொள் என்று  அடைக்கலம் கொடுத்துப்போன பசுந்தளிர்'' என்றாள். ""ஓ.. உன் பிள்ளையைக் காப்பாற்றி ஊரான் பிள்ளையை வீசினாயா?'' என்று கொடூரன் உறும, தாயோ கதறியபடி ,""என் பிள்ளையைத் தான் வீசினேன். அது என்  உடைமை.  இழக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் நம்பி அடைக்கலம் கொடுத்தவள் வந்து கேட்டால் தரவேண்டிய தர்மம் கருதி அடுத்தவள் பிள்ளையைத் தான் மீட்டேன்''  என்று அழுதாள். தர்மத்தில் நாட்டம் உடைய இந்த மக்களை நாம் அடக்கியாள முடியாது என்று புலம்பியபடி கொடுங்கோலன் படையெடுப்பை நிறுத்திக் கொண்டான் என்று கதை முடிகிறது. இவன் செங்கிஸ்கான் என்றும் தைமூர் என்றும் சொல்லுகிறார்கள்.. ஆனால் பெண் இந்தியத் தாய் என்று பேசுகிறார்கள். 

கற்பனைக் கதை என்பவரும் உண்டு. 

எனக்கு, நபர்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ உயர்வு தாழ்வு கற்பிக்க விருப்பமில்லை. கருத்துதான் முக்கியம். "தான், தன் குடும்பம் என்பதைத் தொலைத்து, பிறர்க்கென வாழ்தலே தலையாய வாழ்வு' என்கிறேன். எந்த நாடு, எந்த மதம், எதுவாக இருந்தாலும், பிறர்க்கென வாழும் மாந்தரை, அன்னை தெரசா என்றே ஆராதிக்கிறேன். இராமாயணத்திலே மூன்று அன்னையர் வரையப்படுகின்றனர். தன்மகன் பரதன் அரசாள, கோசலை மகன் காடு போகட்டும் என்று சொல்லும், சுடுமனம் கொண்ட கைகேயி ஒருத்தி.. கைகேயி மகனைக் குறைவாகவே கருதாமல் தன் மகன் இராமனிடமே,""நிறை குணத்தவன். நின்னினும் நல்லன்'' என்று பாராட்டிக் கண்ணீர் விட்டவள் இராமன் தாய் கோசலை. ஆனால் எவளோ பெற்ற இராமனைக் காக்க, தான் பெற்ற இலக்குவனை ""இராமன் பின்னே போ.. தம்பி என்னும் படியன்று. அடியாரின் ஏவல் செய்தி'' என்று ""வேலைக்காரனாகப் போ'' என்கிற சுமத்திரை, பெண்மையின் உச்சாணி.. தாய்மையின் உன்னதம். ஒருபடி மேலே போய் ""மன்னும் நகர்க்கு அவன் வந்திடில் வா..  அப்படி நடக்காவிட்டால் நீ உயிரை முன்னம் முடி'' என்றாளே அவள்தான் தெரசாவின் தாய்! சுமத்திரைதான் அன்னை தெரசாவைச் சுமந்த அடி வயிறு என்று மதம் கடந்து புரிந்து கொள்ள வேண்டும்.
பிறர் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்தல், அதனையும் விழுங்கி, தன் பிள்ளைகளைவிட உயர்வாக நினைத்தல்  என்கிற விழுமியங்களை விழுங்கி விட்ட கொடுங்காலம் இந்தக் கலிகாலம். கொடுமை சொல்லட்டுமா? தேசியக் குற்ற ஆவணக்காப்பகம் அளிக்கும் தகவலின்படி, நம்மைச் சுற்றி வாழும் குழந்தைகளில், எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை, பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுகிறது என்பதைப் படித்தபோது பதறிப் போனேன். பிஞ்சுப் பிள்ளைகளைப் பாழாக்க, பலியாக்க எப்படி இந்தப் பாவிகளுக்கு மனம் வருகிறது? அது யார் பிள்ளையாக இருந்தால் என்ன? குழந்தை கடவுளின் மலிவுப் பதிப்பல்லவா?

இதைவிடக் கொடுமை "சைல்டு செக்ஸ்டூரிஸம்' என்கிற செய்தி, "பீடோ ஃபைலிக்' என்பது ஒருவகை மனநோய். குழந்தைகளை வன்புணர்ச்சிக்காட்படுத்தும் காமுகர்கள் இவர்கள். கோவாவில் இன்று இந்த சைல்டுசெக்ஸ் டூரிஸம் வளர்ந்து வருவதாகத் தகவல். பத்து தொடங்கி பதினைந்து நிறையாத பாலகர்களை "எஸ்கார்ட்' என்ற பெயரில் தங்களுடன் தங்க வைத்து, ஆசையைத் தீர்த்துக் கொள்ளும் அற்பர்கள் உலகெங்கும் பெருகி வருகிறார்கள். பிறர்க்கென வாழ்தல் என்ற தர்மம் சுருங்கி, பிறரைப் பாழாக்கி வாழ்தல் என்ற அதர்மம் பல வகையிலும் பெருகி வருகிறது.

"வாழ்க்கை என்பது  தனக்காக.. தனக்காக மட்டுமே...'  என்ற தத்துவம் இளைய மனங்களில் விதைக்கப்பட்டு விட்டது. ""உலகம் பிறந்தது எனக்காக.. ஓடும் நதிகளும் எனக்காக'' என்கிற கவிதையின் கற்பனை அழகு புரியாமல் எல்லாமே தனக்காக என்கிற கீழ்மையான எண்ணம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. சுயநல, சுய குடும்ப, சுய ஜாதி,  சுய கும்பல் மட்டுமே இன்று பிரதானமாகி விட்டது. இருபத்தி நான்கு மணி நேரமும்  "உன்னை அழித்து ஊரை ஒழித்து என்னை வளர்ப்பது எப்படி' என்கிற வெறி அரசியல் வியாதிகளால் முன்னேற்றம் என்று அர்த்தப்படுத்தப்பட்டு விட்டது. "ஆற்றோரம் மணல் எடுத்து.. அழகழகா வீடுகட்டி.. தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்' என்கிற சந்தோஷமான எளிய வாழ்க்கை, சிலரது சாம்ராஜ்ய வெறியால், நாசமாகி விட்டது. ஆற்றோரமாகவா மணல் எடுக்கிறார்கள். ஆற்றின் அடிவயிறு கிழித்து, ஆயிரம் ஆயிரம் லாரிகள் மணல் எடுத்து.. ஆற்றில் கட்டிய பாலங்களே இடிந்து போகும்படியல்லவா மணல் எடுக்கிறார்கள். மண்ணோடு மண்ணாய்ப் போகப் போகிற நாம், மற்றவரை வாழ வைக்காமல், நாம் மட்டுமே பெரிய மனிதனாகி, பெரிய பணக்காரனாகி, பூதாகரமாக வளர்ந்து என்ன செய்யப் போகிறோம். நம் ஒவ்வொரு செயலும் பிறர்க்கு நலன் செய்யுமா என்று இவர்கள் யோசித்துச் செய்ய வேண்டாமா? அப்படி வாழ்ந்த ஓர் அற்புதரைப் பற்றி. சிலம்புச் செல்வர். ம.பொ.சி அவர்கள் சொன்ன செய்தி சொல்கிறேன்.  ""ஒரு நாள் - (தேதி நினைவில்லை) இரவு எட்டு மணிக்கு வெளியில் எங்கோ சென்று விட்டு என் வீடு வந்து சேர்ந்தேன். அப்போது என் வீட்டில் மின்சார விளக்குகள் இல்லை. அதனால் கூடம் இருட்டாக இருந்தது. நான் வீட்டிற்குள் நுழைந்ததும், துருக்கிக் குல்லாயைத் தலையில் அணிந்து லுங்கி வேட்டியைக் கட்டிக் கொண்டிருந்த சாயபு ஒருவர் கூடத்தில் - சரியாக நடுவிடத்தில் - அமர்ந்திருக்கக் கண்டேன். இந்துக்கள் வீட்டில் நடுவீடு என்பது இலைபடைத்துச் சாமி கும்பிடும் இடமாகும். அந்த இடத்தில் ஒரு முஸ்லிம் உரிமையோடு போய்க் குந்திக் கொண்டிருந்தது எனக்கு வியப்பைத் தந்தது.

கொஞ்சம் அருவருப்புடன் அந்த முஸ்லிம் நபரைப் பார்த்து "யாரது?' என்றேன் மெல்லியகுரலில். "நான் தான் ஜீவானந்தம்' என்று பதில் வந்தது. அதைக் கேட்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. காரணம், அரசினருக்கு விரோதியாகத் தலைமறைவாக இருக்கும் கம்யூனிஸ்ட் ஒருவர் என் வீட்டில் அடைக்கலமாக இருப்பது நான் விரும்பாததுதான். அப்போது நான் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர். சர்வபரித் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஜீவாவை, அவரது பண்பின்பால் ஈர்க்கப்பட்ட நான், என்னை நம்பி வீட்டில் அடைக்கலம் புகுந்தவரை வெளியே போகச் சொல்வதெப்படி?

என் வீட்டுப் புழக்கடைக்கு அழைத்துச் சென்றேன். வீட்டின் கூடத்திலேயே இருட்டென்றால் புழக்கடையில் இருட்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இவ்வளவு அபாயகரமான நிலையில் ஜீவானந்தம் என்னைச் சந்திக்க வந்தது எதற்காகத் தெரியுமா? பொருள் உதவி கோரியோ, காங்கிரசில் எனக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தான் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றோ என்னை நாடி வரவில்லை. திருவிதாங்கூர் தமிழர் விடுதலைக் கிளர்ச்சியை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டும். திராவிடர் கழகம், இன்னும் வெளியில் உள்ள கம்யூனிஸ்டுகள் ஆகியோருடைய உதவிகளையும் நான் பெற வேண்டும் என்று எனக்குச் சொல்லும் பொருட்டுத்தான் ஜீவானந்தம் என்னை நாடி வந்தார். அதனால் தான்  பத்துகாசு சொத்து சேர்க்காத ஜீவாவை "இந்தியாவின் சொத்து' என்றார் மகாத்மா காந்தி.  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com