தன்னிலை உயர்த்து! - 10: நன்றி... ஓர் அழகான வீரம்!

ஒரு மன்னர் பத்து வெறி  நாய்களை வளர்த்து வந்தார். அவரது அமைச்சர்கள் யாராவது தவறு செய்தால் அந்நாய்களால் அவர்களைக் கடிக்கச் செய்து கொடுமைப்படுத்துவார்.
தன்னிலை உயர்த்து! - 10: நன்றி... ஓர் அழகான வீரம்!

ஒரு மன்னர் பத்து வெறி  நாய்களை வளர்த்து வந்தார். அவரது அமைச்சர்கள் யாராவது தவறு செய்தால் அந்நாய்களால் அவர்களைக் கடிக்கச் செய்து கொடுமைப்படுத்துவார். ஒருநாள் அரசவையில் அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்திய கருத்தினை மன்னரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன்னருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. காவலாளியை அழைத்து, "'இவரை நாய்களுக்கு இரையாக்கு'' என்று கட்டளையிட்டார். ""மன்னரே! நான் தங்களிடம் பத்து வருடம் பணி செய்துள்ளேன்; என்னை ஒருமுறை மன்னித்து விடுங்கள்'' என்று வேண்டினார். மன்னர் மனம் இரங்கவில்லை. ""அப்படியானால், இத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன், பத்து நாட்கள் அவகாசம் வேண்டும்'' என்றார் அமைச்சர். மன்னரும் சம்மதித்தார்.

அமைச்சர் நாய்களின் காப்பாளரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கு அவரே நாய்களுக்கு உணவு அளிக்க விரும்புவதாகக் கூறினார். காப்பாளரும் சம்மதித்தார். அமைச்சர் நாய்களுக்கு உணவளித்ததோடு, அவற்றை  நன்கு பராமரித்தார். பத்து நாட்கள் கழிந்தன. அரசரின் ஆணைப்படி, அமைச்சர் நாய்களின் கூண்டுக்குள் இரையாக விடப்பட்டார். நாய்கள் அவரைக் கடித்து குதறுவதற்கு பதிலாக, அவரை அன்பாய் முத்தமிட்டன. மன்னர் ஆச்சரியமடைந்தார். 

அமைச்சர், ""மன்னா! நான் இந்நாய்களுக்காக வெறும் பத்து நாட்கள் மட்டுமே வேலை செய்தேன். அதற்கே ஆழ்ந்த நன்றி உணர்வை அவை வெளிப்படுத்துகின்றன. ஆனால், தங்களுக்கு பத்து வருடங்கள் சேவை செய்த போதிலும், ஒரு சிறு தவறுக்கு பெரிய தண்டனைக் கொடுக்கிறீர்களே?'' என்றார். மன்னர் தனது தவறை உணர்ந்து, அமைச்சரை விடுதலை செய்தார். நிறைகளைப் பார்க்கத் தெரியாமல், குறைகளை மட்டுமே பார்த்தால் தண்டிக்கத் தோன்றும். குறைகளைத் கடந்து, நிறைகளை பார்க்கும் போது மட்டும்தான் நன்றி உணர்வு வெளிப்படும். உண்மையில் நன்றி என்பது ஒரு மனப்பான்மை அல்ல, ஒரு செயலும் அல்ல, அது மனதில் இருந்து நிரம்பி வழிகின்ற ஒருவித உணர்வு.


எதிர்பார்த்தது கிடைத்தாலோ அல்லது தனக்குச் சாதகமாக அமைந்தாலோ மட்டுமே அன்பை வெளிப்படுத்துவது நன்றியாகாது. தனக்குக் கிடைக்கின்ற அனைத்திற்கும் நன்றியுடையவனாக இருப்பதுதான் உண்மையான நன்றியுணர்வு. 

ஒரு துறவி, தனது சீடர்களோடு பயணம் செய்தார். அன்றையப் பயணத்தின் முடிவில் தண்ணீரும் கிடைக்கவில்லை, உணவும் கிடைக்கவில்லை, இரவு தங்குவதற்கு ஒரு கிராமமும் தென்படவில்லை. கடைசியில் ஒரு வறண்ட பகுதியிலேயே தங்க நேர்ந்தது. சீடர்கள் அனைவரும் பசியோடும், தாகத்தோடும் மிகுந்த வருத்தத்தோடு உறங்கச் சென்றனர். துறவி மட்டும் எப்போதும்போல் இறைவனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி கூறினார். கோபத்துடன் எழுந்த ஒரு சீடர், ""குருவே! இன்று கடவுள் நமக்கு ஒரு உதவியும் செய்யவில்லை. துன்பத்தை மட்டுமே தந்தார். அவருக்கு ஏன் நன்றி செலுத்துகிறீர்கள்?'' என்றார். அதற்கு, புன்முறுவலோடு ""இன்று கடவுள் நமக்கு பசியையும், தாகத்தையும், நட்சத்திரங்கள் மின்னும் அழகிய கூடாரத்தையும் நமக்கு பரிசாகத் தந்துள்ளார். இதற்காக நான் நன்றி செலுத்துகிறேன்'' என்றார். இரவுகளின் உறக்கத்தின் முன்னால், இயல்பாய் அமர்ந்து இந்த நாளினைத் தந்திட்ட இயற்கைக்கு நன்றி சொல்லும் மனிதன், அன்பின் அடையாளம். அவர், இயற்கையின் பெரும் பரிசு. பிறப்பிலிருந்து துடிக்கின்ற இதயம் முதல், நம் இறப்பில் துடிக்கின்ற இதயங்களுக்கெல்லாம் நாம் நன்றிக் கடன்பட்டவர்கள்.  

இத்துறவி, ""ஒவ்வொரு நாளின் முடிவில் மிகுந்த விழிப்புணர்வோடு நன்றி செலுத்த வேண்டும். இன்று நம்மால் நிறைய கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், குறைவாக கற்றுக் கொண்டதற்காக; குறைவாகக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருந்ததற்காக; உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் இறந்து போகாமல் இருப்பதற்காக, நாம் அனைவரும் நன்றி செலுத்துவோம்'' என்ற புத்தரின்  வரிகளுக்கு இலக்கணமாகிறார். அப்படியென்றால், வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடத்திற்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

தமக்கு கிடைத்ததைவிட, கிடைக்காமலிருப்பதற்காகவும் நன்றி  சொல்கின்ற மனதே உன்னத மனமாகும்.  ஓர் அழகான ஆங்கிலப் பாடல் உண்டு.  

"என்னிடம் இல்லாதவற்றுக்காக நன்றி, அவை தான் என்னைப் முழுமையாக்க ஊக்குவிக்கின்றன.   எனது குறைவான அறிவுக்காக நன்றி. அது தான் என்னைக் கற்றுக்கொள்ள தூண்டுகிறது. எனது கடினமான நேரங்களுக்காக நன்றி. அவை தான் என்னை வலிமையானவனாக மாற்றுகின்றன.  எனது குறைகளுக்காக நன்றி. அவை தான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.   எனது பிழைகளுக்கு நன்றி. அவை தான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.  எனது சோர்வுக்கு நன்றி. அது தான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகின்றது. எனது சோதனைகளுக்கு நன்றி. அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன‘ என்ற அப்பாடல் வரிகளின் ஆழ்ந்த சிந்தனையானது, நன்றியடைய ஒரு மனிதனைச் சோதிப்பவையெல்லாம், அவரைச் சாதிக்க வைக்கும்; சரித்திரம் படைக்க வைக்கும் என்பதை நமக்கு விளக்குகிறது.

வடகரோலினா பல்கலைக் கழக உளவியல் அறிஞர் சாரா அல்கோ. அவர், "கண்டுபிடி,  ஞாபகப்படுத்து,  சேர்' என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நன்றியுணர்வை ஆராய்ந்தார். முடிவில், நன்றியுணர்வு புதிய சமூக உறவுகளை உருவாக்கும், உறவினர்கள் உடனான  உறவை மேம்படுத்தும் மற்றும் உறவுகளைப் பராமரித்து பிற்காலத்தில் பயனுடையதாக்கும் என்று கண்டறிந்தார். நன்றியுணர்வு, உறவுகளைப் பலப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஆணித்தரமானது. அது மட்டுமல்லாது நன்றியுணர்வு மனதைச் சமநிலைப்படுத்துகிறது, தெளிவாக சிந்திக்கத் தூண்டுகிறது, இன்னல்களை நிதானமாய் அணுக வைக்கிறது, அன்பை வளர்க்கிறது, ஆற்றலைப் பன்மடங்காக்குகிறது. மொத்தத்தில் மனிதனைப் புனிதனாக்குகிறது. 

கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் வாழ்ந்த தத்துவஞானி மார்க்கஸ் டுல்லியஸ் சீசரோ, ""நன்றி உணர்வு என்பது உயர்ந்த நற்குணம் மட்டுமல்ல, அது அனைத்து நற்குணங்களுக்கும் பெற்றோர்'' என்றார். மனித உணர்வுகளிலே உயரிய உணர்வு நன்றி உணர்வு. நன்றியினை செலுத்தும்பொழுது அது அன்பாக, பேரின்பமாக, அமைதியின் வடிவமாகப் பரிணமிக்கிறது. 

நன்றி ஓர் அழகிய வார்த்தை.  இதனைப் புன்முறுவலோடு சொல்கின்ற பொழுது மட்டுமே உள்ளம் பூப்பூக்கும். நன்றியைச் சொல்ல மறந்தால், அது மனிதத்தின் குறைபாடு. அளவாய்ச் சொன்னால் அனுசரிக்கப்படுவர். அதிகமாய் நன்றி சொல்பவரது வாழ்க்கை அலங்கரிக்கப்படும்.  

விளையாட்டு மைதானத்தில் காலடி எடுத்து வைக்கின்றபோது மண்ணைத் தொட்டு கும்பிடுவது மரியாதை கலந்த பக்தி. அதே மண்ணில் சதம் அடிக்கும் போது விண்ணைப் பார்த்து மனதால் வணங்கி நிற்பது பக்தி கலந்த நன்றியுணர்வு. தனது வெற்றியை தனது குழுவினருக்கு அர்ப்பணிப்பது நன்றியுணர்வின் உன்னதப் பாங்கு. தினையளவு உதவியையும் நன்றியுணர்வு உள்ளவர்கள் பனைமரம் போல் பெரிதாய்க் காண்பர். அதேபோல், தனது துன்பத்தைப் போக்கியவரை ஏழு பிறப்பிலும் மனதில் வைத்துப் போற்றுவர் என்கிறார் நம் திருவள்ளுவர். அவரே, 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு 

என்ற வரிகள் மூலம் ஒருவர் செய்த நன்றியினை மறந்தவர்களுக்கு வாழ்வில் விமோச்சனமே இல்லை என்கிறார்.  

நன்றி சொல்வதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன.  அன்பின் செயல்களால் நன்றி சொல்வது, வார்த்தைகளால் நன்றி சொல்வதைவிட மிகவும் வலிமையானது.  ""நன்றி சொல்லாமலிருப்பது  ஒருவருக்கு அழகான ஒரு பரிசுப் பொருளை வாங்கி, அதை அருமையாகப் பெட்டகத்தில் பொதிந்து, அப்படியே வீட்டில் வைத்திருப்பது போன்றது''  என்கிறார் வில்லியம் ஆர்தர்  வேர்ட்.

"சிறு செயல்களுக்கு நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய செயல்களிலும் நன்றி சொல்ல முடியாது' என்கிறது எஸ்டோனியன் பழமொழி ஒன்று.  நன்றியைச் சொல்ல இந்த நவீனயுகத்தில் பல வழிகள் உண்டு.   ஒரு குறுஞ்செய்தி, ஒரு சின்ன மின்னஞ்சல் வரி, வணங்கிய கையினால் வாட்ஸ்ஆப்பில் பதிவு. நன்றி என்பது அலுவல் காரியங்களுக்கு மட்டுமானது அல்ல;   கணவன், மனைவி, தாய், தந்தை, உடன்பிறப்புகள் என உறவுகளுக்கெல்லாம் நன்றி சொல்வது உறவைப் பலப்படுத்தும்.  ""நன்றி தெரிவிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை நிலையாகவும், வலிமையாகவும் இருக்கும், அதனுடன், நன்றி தெரிவித்து வாழ்பவர்கள் மிகவும் ஆனந்தமாய் இருப்பார்கள்'' என்கிறது அமெரிக்காவிலுள்ள மெக்சிகன் பல்கலைக்கழக ஆய்வு.  

நன்றியுணர்வு மேலோங்கும் போது, தாய் தெய்வமாய்த் தென்படுவார்; தந்தை சொல் மந்திரமாகும்; உறவுகள் உன்னதமாகும்; நட்புகள் பொக்கிஷமாகும்; நாடு கடந்த உறவுகள் நட்சத்திரமாய் மிளிரும்; முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா நடக்கும்.

நன்றியுணர்வு ஒரு வீரச் செயல். அது கோழைகளிடம் இருப்பதில்லை. வீர சிவாஜி ஒரு முறை வேட்டையாடச் சென்றார். அப்பொழுது சிங்கத்தோடு சண்டையிட்டதில் சிவாஜின் உடலில் காயம்பட்டதால் உடல்நலக் குறைவானார். சிவாஜியின் நண்பர்கள் அவரை மூர்ஷிதாபாத்  என்ற நகருக்கு அழைத்து வந்தனர். அதே நேரத்தில் முகலாயப் படையினர், சிவாஜியை தேடி அலைந்துகொண்டு இருந்தனர். சிவாஜியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு, இரண்டாயிரம் பொற்காசுகள் என அறிவிப்புச் செய்தார்கள். சிவாஜி தங்குவதற்கு அந்நகரத்தில் இடம் கொடுத்தவர் விநாயக்தேவ் என்னும் பண்டிதர் ஆவார். சிவாஜி என்று தெரியாமலே, ஒரு வழிப்போக்கனாக கருதி சிறந்த வைத்தியத்தை தந்தார். சிறிது நாட்களில் சிவாஜி குணமடைந்தார். 

அவரிடமிருந்து விடைபெறும் முன் தன்னை நன்கு கவனித்த விநாயக்தேவிற்கு நன்றிக்கடனாக ஒரு கடிதத்தைக் கொடுத்தார். ""இக்கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்று, இந்த ஊரில் இருக்கும் முகலாய அதிகாரியிடம் கொடுங்கள், அவர் சன்மானம் தருவார், பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார். அப்பாவியான விநாயக்தேவ் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று அறியாமல், முகலாய அதிகாரியிடம் கொடுத்தார். அக்கடிதத்தில் தாம் தங்கியிருந்த இடத்தை தெரிவித்தும், தன்னை கைதுசெய்து, அதற்கான சன்மான தொகையை விநாயக்தேவிடம் கொடுக்கச் சொல்லியும் எழுதியிருந்தார் சிவாஜி. கடிதத்தைப் படித்த முகலாய அதிகாரி தனது ஆட்களோடு சிவாஜியை சிறைப்பிடித்தார். அப்பொழுதுதான் விநாயக்தேவுக்கு, இதுவரை தன் வீட்டில் தங்கியிருந்தவர் சிவாஜி என்று தெரிய வந்தது.  தனக்கு செய்த உதவிக்காக, தன்னையே நன்றிக்கடனாக்கியவர் மராட்டிய வீரர் சிவாஜி. அதனால்தான், விநாயக்தேவ் மனதில் மட்டுமல்ல, மண்ணின் மைந்தர்  எல்லோருடைய மனதிலும் வீரத்தோடும், ஈரத்தோடும் இன்றளவும் சிவாஜி நீங்காமல் நிறைந்து நிற்கிறார். 

நன்றி... ஓர்  அற்புதமான உணர்வு!
நன்றி... ஓர் அழகான வீரம்!

(தொடரும்)

கட்டுரையாசிரியர்:  காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com