இந்தியத் திருமணங்களில் ஒரு மாற்றம் வேண்டும்! - பிரீத்தி கும்பரே

திருமணம் என்றால்  சுபச் செலவுதான். தங்கள் வீட்டுக் கல்யாணத்தை  பிறர்  வியக்கும் அளவுக்கு நடத்த வேண்டும்  என்றுதான் எல்லாரும் விரும்புவர்.
இந்தியத் திருமணங்களில் ஒரு மாற்றம் வேண்டும்! - பிரீத்தி கும்பரே

திருமணம் என்றால்  சுபச் செலவுதான். தங்கள் வீட்டுக் கல்யாணத்தை  பிறர்  வியக்கும் அளவுக்கு நடத்த வேண்டும்  என்றுதான் எல்லாரும் விரும்புவர். வரதட்சணை,  இலை நிறைய விதம் விதமான அறுசுவை உணவு... பூக்களால் ஜோடனை,  மேளம், கச்சேரி  அல்லது மெல்லிசை,  தாம்பூலம்... மொய்  இல்லாமல்  இந்தியக் கல்யாணங்கள் நடப்பதில்லை. இவை  எதுவும் இன்றி  சென்ற  ஜுலை  3 ஆம்  நாள் நடந்த   திருமணம்  அகில இந்தியாவுக்கு  ஒரு முன்மாதிரியான  திருமணமாக  அமைந்து விட்டது.  

திருமணச் செலவை குறைத்து,  ஆடம்பரம் ஆரவாரம் இல்லாமல் அந்தத்  திருமணம் நடந்ததினால் மட்டும் பிரபலம் அடையவில்லை. திருமணம் முடிந்ததும், கடனை அடைக்க முடியாமல்  தற்கொலை செய்து கொண்ட 10  விவசாயிகளின்   குடும்பத்திற்கு  தலா  இருபதாயிரம் ரூபாய்  நன்கொடையாக  மணமக்கள் வழங்கி இருக்கிறார்கள். இந்த சமூக  சிந்தனைக்காகத்  தான், இந்தத்  திருமணம்  அகில இந்திய அளவில்  பிரபலமாகி உள்ளது. மணமகள்  பிரீத்தி கும்பரே தொடர்கிறார்:

""என் கணவரான அபெய் தெவாரே,   மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.   அவரது   குடும்பம்  பாரம்பரியமாக விவசாயக் குடும்பம். அபெய்   டில்லி ஐஐடியில்  தொழில் நுட்ப பட்டதாரி.  இந்திய அரசு பணி தேர்வினை எழுதி, இந்திய வருமானத்துறையில்  அதிகாரியாக  பொறுப்பேற்றார்.  நானும் தொழில் நுட்ப பட்டதாரிதான். மத்திய அரசுத் தேர்வுகளுக்கு நானும்  அபெய்யும் எங்களை  தயார் செய்து கொண்டிருக்கும் போதுதான்  எங்கள்  இருவருக்கிடையே அறிமுகம்  ஏற்பட்டது. பிறகு  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்,  திருமணம் செய்து கொள்ளலாம்  என்று முடிவு  செய்தோம்.  எனக்கும்  மத்திய அரசு வங்கியொன்றில்   அதிகாரியாக வேலை கிடைத்தது.

 சென்ற  மார்ச்   மாதம்  அபெய்யும்,  அவருடன்  இந்திய வருமான துறைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களும்   சேர்ந்து  குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர்.  குடியரசுத் தலைவர்,  நாட்டின்  சமூகப் பொருளாதார  மாற்றத்திற்காக உழைக்கும் படி  அந்தக் குழுவினரைக் கேட்டுக் கொண்டார். குடியரசுத் தலைவர்  கேட்டுக் கொண்டது போன்று, தன்னால்  முடிந்ததை  சமூக நலத்திற்காகச்  செய்ய வேண்டும்  என்று  அன்றே தீர்மானித்தார் அபெய்.

 சமூக பொருளாதார  வேறுபாடுகள் இருந்தாலும்,   ஒரு கல்யாணத்திற்கு   மூன்று  லட்சம் முதல் அம்பது கோடி வரை  செலவு செய்யப்படுகிறது  என்பதையும் தெரிந்து  கொண்டோம்.  குடும்பத்  தலைவர்   கடன்   வாங்க,  திருமணமும்  ஒரு முக்கிய காரணமாக அமைகிறது  என்பதும் புரிந்தது.  சிலர் நில புலன்களை  திருமணத்திற்காக   விற்பதும்,   பிறகு  அதுவும்  போதாதென்று  மேலும் கடன் வாங்குவதும், பலர்  தங்கள் சம்பாத்தித்த அனைத்தையும், தங்கள் வாரிசுகளின்    திருமணங்களுக்காகச் செலவு செய்து  சேமிப்பு அனைத்தையும் தொலைக்கின்றனர்.  பிறகு கடன் வாங்கி வறுமைச் சிறையில்  அடைபட்டுக் கொள்கிறார்கள்.  அமராவதி பகுதியில்  இந்த நிலைமைதான். விவசாயக் கடன்,  திருமணக் கடன்.. அதற்கான வட்டி  இவற்றை  கட்ட முடியாமல்,   விவசாயிகள்  தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  இப்படி  தற்கொலை  செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு  பண உதவி செய்யவேண்டும். அதற்காக  எங்கள் திருமணத்தை மிகச் சாதாரண முறையில் நடத்தி, திருமணத்திற்காக ஒதுக்கி  வைத்த      பணத்தை, விவசாயிகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு உதவி செய்யலாம்       என்று நாங்கள் தீர்மானித்தோம்.  எங்களது பெற்றோரும் எங்கள் முடிவிற்கு ஆதரவளித்தனர்.

எங்கள் திருமணம் பதிவுத் திருமணம்தான்.  அதில்  எங்களது பெற்றோர்கள்,  சொந்த பந்தங்கள்,  நண்பர்கள்,   சமூக ஆர்வலாளர்கள் கலந்து கொண்டனர். நாங்கள் மணமக்களாகப்  பிறருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக  மட்டுமே  புதிய உடைகளை அணிந்தோம். சம்பிரதாயத்திற்காக  ஒரே  ஒரு மாலையை மட்டும் அணிந்து கொண்டோம். திருமண மண்டபத்தில்  வேறு எங்கும்  பூக்கள் பயன்படுத்தப் படவில்லை. கல்யாணச் சாப்பாடும்  சாதாரணமாக  வீட்டில்  எப்படி  சாப்பிடுவோமோ  அதே போன்ற எளிமையான வீட்டு சாப்பாடுதான்  பரிமாறப்பட்டது.  மண்டபத்தில்,  சமூகப் பொருளாதார  ஏற்றத்  தாழ்வுகளை சரி செய்ய அழைப்பு விடுக்கும்  சுவரொட்டிகள் தொங்க விடப்பட்டன.   சமூக  ஆர்வலர்களும்  இது குறித்து  திருமண  அரங்கில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்..

திருமணத்தை  வீட்டில் வைத்திருந்தால் செலவை இன்னமும் குறைத்திருக்கலாம்.  திருமணத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் அமர வீட்டில் இட வசதியில்லாததால்,  திருமணத்தை  அரங்கினுள் வைத்தோம்.  தவிர,   திருமணத்தில் கலந்து கொள்பவர்களை  சிக்கன  திருமணம்  என்கிற சித்தாந்தத்தின்பால்  திருப்ப  இந்த தருணத்தைப்  பயன்படுத்திக்  கொண்டோம். 

தீபக்  என்கிற விவசாயியின்  மருமகள் கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களில்  தீபக்கின்  மகன் தங்களுக்கு இருந்த மூன்று ஏக்கர் நிலத்தை  விற்று எல்லா கடன்களையும்  அடைத்து விட்டு, வாழ வழியின்றி  அவரும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்ளும் போது  பக்கத்து டீக்கடைக்காரருக்கு  ஒரு ரூபாய் கடன் பாக்கி உள்ளது. அதைக்  கொடுத்து கடனை தீர்க்க வேண்டும் என்று எழுதி வைத்து விட்டு  தற்கொலை செய்திருக்கிறார். தீபக் தனது  பேரனை  இந்தத்  தள்ளாத வயதில்  ஏற்க வேண்டிய நிலைமை.  இதுபோன்று மிகவும்  பொருளாதார  கஷ்டங்கள் இருப்பவர்களுக்கு  இந்த நிதி உதவி செய்திருக்கிறோம்.

 அமராவதி மாவட்டத்தில்  ஐந்து நூலகங்களுக்கு தலா ஐம்பத்திஇரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களை வாங்கி  அன்பளிப்பு செய்துள்ளோம்.

எங்கள் திருமணத்தின் முதல் ஆண்டு  விழாவினை  நாங்கள் உதவியிருக்கும் பத்து  விவசாயக் குடும்பங்களுடன்  கொண்டாடவும்  முடிவு செய்திருக்கிறோம். படித்த இளம் தலைமுறையினர்  சம்பிரதாய நிர்பந்தங்களை விட்டு வெளியே வந்து   சமூகப் பொறுப்புடன்  நடந்து கொண்டால்  நமது சமூகம் நிச்சயம் முன்னேறும் எனும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்தியத் திருமண முறைகளில் ஒரு மாற்றம்  வேண்டும் என்ற குறிக்கோளிலும்  நடந்ததுதான் எங்கள் திருமணம்''  பிரீத்தி  பிரகாசமாகச்  புன்னகைக்கிறார்.

- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com