பெரும்பான்மை இருந்தும் தனித்தனி உலகம்!

கூட்டத்தில் இருக்கிற ஒருத்தன், ஆயிரத்தில் ஒருவனாக மாறுகிற கதை... இதுதான் இந்தப் படத்தின் லைன்.
பெரும்பான்மை இருந்தும் தனித்தனி உலகம்!

கூட்டத்தில் இருக்கிற ஒருத்தன், ஆயிரத்தில் ஒருவனாக மாறுகிற கதை... இதுதான் இந்தப் படத்தின் லைன். பத்திரிகையாளர், வசன கர்த்தா, அசோசியேட் டைரக்டர், இப்போது வந்து நிற்கிற இந்த இயக்குநர் இடம்... என வரிசையாக எனக்கு கிடைத்த வாய்ப்புகள்தான் என்னை இயங்க வைக்கிறது. எல்லோருக்கும் ஏதோ ஒரு வாய்ப்புதான் கதவுகளை திறந்து வைக்கும். 
புது புது விஷயங்களை உள்ளுக்குள் சுடர் விட வைக்கும். அப்படி பார்த்தால் அந்த ஒரு வாய்ப்புக்காத்தான் எல்லோரும் ஏங்கி தவிக்கிறோம். அதைத் தேடித்தான் ஓடி வருகிறோம். அப்படி ஓடி வருகிற ஒருவனுக்கு நிகழ்கிற சுவாரஸ்யங்களும், போராட்டங்களும்தான் இங்கே கதைக் களம். சினிமா உலகில் பரவலாக அறியப்பட்ட பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இப்போது "கூட்டத்தில் ஒருத்தன்' பட இயக்குநர்.

கதையின் உள்ளடக்கம் பற்றி பேசலாமே...?

இதுவரைக்கும் தமிழ் சினிமா தவற விட்ட கதை இது. ஒரு வகுப்பில் 40 பேர் படிக்கிறார்கள் என்றால், அதிக மதிப்பெண்கள் எடுக்கிற மாணவர்கள் அதிகபட்சம் 10 பேர். சேட்டை, காமெடி, அரட்டை, ஓவர் உற்சாகம், அடிதடி என சுற்றி வருபவர்கள் 10 பேர். மீதம் இருக்கிற 20 பேர் நடு பெஞ்ச் மாணவர்கள்.  எதையும் சாராமல், எப்படியென்று கணிக்க முடியாமலேயே இருப்பார்கள். பெரும்பான்மையாக இருந்தும், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தனி உலகத்தில் இயங்கி கொண்டிருப்பார்கள். தனித்துவம், அடையாளம் எல்லாவற்றிலும் சிக்கல். தான் யார் என்று தெரியாமலேயே ஏதோ ஓர் அடையாளத்தைத் தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். வகுப்பறை தவிர்த்து, வீட்டிலும் அப்படித்தான் இருக்கும் அவர்களுக்கான உலகம். தங்களுக்கென்று என்ன வேண்டும் என்று கூட கேட்டு வாங்க மாட்டார்கள். வாங்கி கொடுப்பது போதும் என்று நினைப்பவர்கள். சொல்லப் போனால் நானும், ஏன் நீங்களும் அப்படி இருந்து வந்திருக்கலாம். எனக்கு எழுதக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் என் உலகம் எது என்பது எனக்கு தெரிந்தது. ஆனால், இது எல்லோருக்கும் கிடைக்காது. கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதுதான் களம். 

திரை பாணி வடிவம் இப்படித்தான் பயணிக்குமா...?

இந்த உலகத்தில் மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் எல்லாம் நடு பெஞ்ச் மாணவர்கள்தான். பில்கேட்ஸ் ஒரு உதாரணம். தான் என்னவாகப் போகிறோம் என்று தெரியாமலேயே வளர்ந்தவர். ஆனால், உலகப் பொருளாதராத்தில் கேட்ஸ் ஏற்படுத்திய மாற்றங்கள் எத்தனை எத்தனை? படம் பார்க்கும் ரசிகனை அவன் வாழ்கிற வாழ்க்கை நோக்கி தள்ளி விடுவதுதான் சினிமா. ஒரே பாட்டில் அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு உயர்ந்து விடுகிற ஹீரோக்களை பார்க்கும் போது, எத்தனை பெரிய உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுதான் இது. பாலிவுட்டில் "மேரி கோம்' மாதிரியான படங்கள் இந்தக் கதைக்கு முன்னோடி. தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் திணறுகிற ஒவ்வொருத்தருக்கும் நம்பிக்கை கொடுக்கும் கதை இது. நிராகரிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் வெவ்வேறு வடிவங்களாக இருக்கின்றன. மதம், ஜாதி ரீதியாக பாகுபடுத்தும் போது, எவ்வளவு கோபம் வருகிறது. ஆனால், இதில் எதுவுமே இல்லாமல், திறமை என்னவென்றே தெரியாமல் ஓரங்கட்டப்படும் போது வருகிற கோபம் எப்படி இருக்கும். ஜெயிக்கிற காதல், தோற்கிற காதல் என இரு வகை இருக்கிறது. நடு பெஞ்ச் மாணவர்களுக்குத்தான் நிராகரிக்கப்பட்ட காதல் இருக்கும். அந்த காதல் வலி எப்படியிருக்கும்? இப்படியெல்லாம் இருக்கும் இந்த கதையின் திரை வடிவம். 

பத்திரிகை தொடங்கி சினிமா வரைக்குமான இந்த பயணம் எப்படியிருக்கிறது...?

தினமணி கதிரில்தான் என் முதல் எழுத்து வந்தது. தமிழை முதன்மை பாடமாக கொண்டவர்கள், ஆசிரியராகி விடுவார்கள். இல்லையென்றால் அரசு வேலைகளுக்கு தேர்வு எழுதுவார்கள். நான் பத்திரிகை உலகத்துக்கு வந்து விட்டேன்.  அதிகமாக தேர்ச்சி விகிதம் உள்ள பெண்களை விட, குறைவான தேர்ச்சி விகிதம் உள்ள ஆண்கள்தான் உயர் கல்விக்கு செல்கிறார்கள் என்பது குறித்த ஒரு கட்டுரை அது. எழுதி அனுப்பியிருந்தேன். தினமணி கதிர் பெரிய அங்கீகாரம் கொடுத்து வெளியிட்டது. இதுதான் என் முதல் எழுத்து பரிச்சயம். அதன் பின் ஆனந்த விகடன் கொடுத்தது பெரிய மேடை. அதில் நான் பார்த்து, ரசித்து, வியந்த உலகங்கள் வேறு மாதிரியானது. சினிமா தொடர்புகளின் மூலம் "பயணம்', "தோனி' ஆகிய படங்களில் வசனம் எழுதக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவங்களை கொண்டு ஒரு லைன் பிடித்து கதை எழுதினேன். கதைதான் எங்களுக்கு பட்ஜெட் என படங்களைத் தயாரித்து வருகிற ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க வந்தார்கள். எல்லோருக்கும் பரிச்சயமான அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் இருவருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள். பி.கே.வர்மாவின் கேமிரா, நிவாஸ் பிரசன்னாவின் இசை, கபிலன் பாடல்கள் என  நல்ல டீம் நம்பிக்கையாக இருக்கிறது. 
 

- ஜி.அசோக் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com