கோபத்தை விட யோகத்தை பயிலுங்கள்!

யோகம் என்றால் அது உடலை பேனிக் பாதுகாப்பதற்கு என்று எல்லாரும் நினைக்கிறார்கள். அது மட்டும் அல்ல, அது மனதையும் ஒரு நிலைப்படுத்தும்.
கோபத்தை விட யோகத்தை பயிலுங்கள்!

யோகம் என்றால் அது உடலை பேனிக் பாதுகாப்பதற்கு என்று எல்லாரும் நினைக்கிறார்கள். அது மட்டும் அல்ல, அது மனதையும் ஒரு நிலைப்படுத்தும். நமக்கு ஏற்படும் பல்வேறு வகையான பிரச்னைகளையும் தீர்க்கும். எப்படி என்று கூறுகிறார்  யோகத்தை சொல்லிக் கொடுக்கும் சங்கீதா ராமசாமி:
"சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு யோகத்தை பற்றியும் தியானத்தை பற்றியும் எதுவும் தெரியாத நேரம். அன்று எனக்கு கோபமும் பொறுமையின்மையும் அதிகமாக இருக்கும். என்ன செய்வது என்று புரியாத நிலை. வீட்டில் சும்மா உட்காராமல் நான் மேலே படிக்க விரும்பினேன். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் யாரோ யோகா சொல்லிக்  கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சரி பொழுது போகாமல் வீட்டில் இருக்கும் நேரத்தில் யோகா கற்கலாம், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைத்து கற்க ஆரம்பித்தேன். போகப் போக யோகா மேல் என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. சரி இதை முழுமையாக கற்கலாம் என்று முடிவு செய்து, பட்ட மேற்படிப்பில் எம்.ஏ.யோகா படித்தேன். பின்னர் அதில் ஆசிரியராக மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க விரும்பி, ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்து படித்து அதிலும் தேர்ச்சி  பெற்றேன். நம்மை நாம் தகுதியாக்கிக் கொண்ட பின்னர் தான் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க விரும்பினேன். சுமார் 8 வருடங்களாக என்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு இந்த யோகத்தையும் தியானத்தையும் இலவசமாக சொல்லிக் கொடுக்கிறேன். 

இதில் சிறப்பு என்னவென்றால், யோகம் என்பது உடல், மனம் இரண்டையும் உள்ளடக்கியது. சிலர் நினைப்பது போல் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள யோகம் உதவும் என்பது சரி என்றாலும், யோகம், அதை மட்டும் செய்வதில்லை. இன்னொன்று, நாம் அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிதான் யோகா என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யோகத்தில் உடலும் மனமும் இணைந்து செயல்படவேண்டும் காரணம், யோகத்தில் 8 நிலைகள் உள்ளன. அந்த நிலைகளை அஷ்டாங்க யோகா என்று சொல்வார்கள்.  அந்த 8 நிலைகள் என்ன தெரியுமா யமா, நியாமா, ஆசனா, பிராணயாமா, பிரதியாஹார, தாரணா, தியானா, கடைசியாக சமாதி. ஆக, நம் உடலும் மனமும் இணைந்து இந்த நிலைகளை அடைந்தால் அதற்கு பெயர்தான் பேரானந்தம் அல்லது பரமானந்தம் என்று கூறலாம். 

நான் ஆரம்பத்தில் மெடிக்கல் ரெப்ரெசென்டேடிவ் என்ற நிலையில் ஆரம்பித்து பின் படிப் படியாக இந்த யோகத்தில் ஐக்கிய மாகிவிட்டேன். இதற்கு என் கணவர் மிக முக்கிய காரணம். அவர் மட்டும் என்னை உற்சாகப் படுத்த வில்லை என்றால் நான் மருந்துகளை தூக்கிக் கொண்டு அலையவேண்டியதாகி இருக்கும். யோகத்தை படிக்க நான் வேலையை விட வேண்டி இருக்கும் என்று சொன்ன உடனே, எந்த மறுப்பும் சொல்லாமல் உடனேயே அதற்கு ஒப்புக்கொண்டு எனக்குப் படிக்க அனுமதி தந்து, என்னுடன் துணையாக இருந்தார். இன்று நான் காலை மற்றும் மாலையில் இலவசமாக யோகம் கற்று தருகிறேன். பழைய மாம்பலத்தில் உள்ள என் வீட்டில் விடியற்காலை 5.30 மணி முதல் 6.40 வரை தியானம் (Meditation), மாலையில் தியாகராஜ நகர், நடேசன் பூங்காவில் யோகம் என்று பிரித்து  கொண்டு நான்  கற்றதை தவறாமல் மற்றவர்களுக்கும் சொல்லித் தருகிறேன். 

பிரச்னை இல்லாத வாழ்க்கை நம் எல்லோருக்கும் சாத்தியமா? என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். வீட்டுக்கு வீடு வாசற்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளது போல், விதவிதமான பிரச்னைகளை நம் ஒவ்வொருவரும் தினமும் சந்திக்க நேருகிறது. கோபம், விரக்தி, துவேசம், வெறுப்பு என்று ஒரே நாளில், இல்லையில்லை ஒரு மணி நேரத்தில் நாம் உணர்ச்சிகளை கொட்டித்தீர்த்து விடுகிறோம். பொறுமையாக பிரச்னைகளை யோசித்துப் பார்த்தால் பல்வேறு சாதக பாதகங்களை உணர்ந்து, அதற்கு ஏற்றார் போல் நாம் நடந்து கொண்டால் மலைபோல் வந்த துன்பம் பனிபோல விலகிவிடும் இல்லையா? அதற்கு உறுதுணையாக இருப்பது இந்த யோகம் தான் என்று நான் தைரியமாக கூறுவேன். இதை நான் மட்டும் அல்ல என்னிடம் பயிலும் பலரும் சொல்லி மகிழ, அவர்களின் சந்தோஷத்தில் நானும் பங்கு கொண்டிருக்கிறேன். ஆக, யோகத்தை பயின்றால் வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றலாம். உடல் உபாதை இல்லாமல், மனம் சந்தோசம் அடையும். வாழ்க்கை வளமாக மாறும் என்றார் சங்கீதா ராமசாமி. இவரது கணவர் ஒரு காவல் துறை அதிகாரி.   

(யோகாவின் சர்வேதேச விழா ஒன்று சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் சென்ற மாதம் 30}ஆம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி வரை கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் 50க்கும் மேற்பட்ட யோகா விற்பன்னர்கள் உலகெங்கும் இருந்து இங்கு வந்து காலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி முடிய சொல்லிக் கொடுத்தார்கள். 60க்கும் மேற்பட்ட வகையில் இந்த யோகாவை சர்வதேச அளவில் கற்றுக் கொடுத்தனர். இதை எல்லோரும்  தெரிந்து கொள்ளும் வண்ணம் இந்த விழா உதவியாக இருந்தது என்றால்  அது மிகையில்லை.)         
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com