நினைவுகளின் பாரத்தை தாங்கவே முடியாது!

அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்த தவறுகள்தான் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கும். எந்த ஒன்றும்,
நினைவுகளின் பாரத்தை தாங்கவே முடியாது!

அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்த தவறுகள்தான் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கும். எந்த ஒன்றும், அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் மொத்த டிசைனும் மாறி விடும். இப்படித்தான் இந்த கதையின் லைன் பிடித்து ஒரு வடிவத்துக்குள் கொண்டு வந்தேன். நிச்சயமாக இது புது சினிமாவாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது. - கைக் குலுக்கி சிரிக்கிறார் கார்த்திக் நரேன். குறும்பட உலகத்திலிருந்து "துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக புதுத்தடம் பதிக்கிறார். டிரெய்லர், டீஸர் எல்லாவற்றிலும் நம்பிக்கை பாய்கிறது. 

குறும்பட உலகத்தில் இருந்து புரொமோஷன் கிடைத்திருக்கிறது... 
வாழ்த்துகள்...

அதைச் சுலபமாக்கி பாதை வகுத்துக் கொடுத்த சீனியர்களுக்கு என் நன்றிகள். நான் கோயம்புத்தூர்க்காரன். படித்ததெல்லாம் ஊட்டி. சினிமா ஆர்வம் ப்ளஸ் வெறி. ஆனால், வீட்டில் இன்ஜினியரிங் படிக்க வைத்தார்கள். அப்போதுதான் குறும்படங்களுக்கான வாசல் திறந்த நேரம். சினிமாவிலும் குறும்பட இயக்குநர்கள் புதிய வெளிச்சம் பாய்ச்சி  கொண்டிருந்தார்கள். அந்த ஆர்வத்தில் நண்பர்களுடன் நானும் கேமிரா கையுமாக சுற்ற ஆரம்பித்தேன். ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து, அதை படமாக்கி வந்தோம். "ஊமைக்குரல்', "பிரதி' என இரு படங்கள் இயக்கினேன். "ஸ்கிரிப்ட் வர்றவனுக்கு டைரக்ஷன் வராதா?' என்று நண்பர்கள் உத்வேகம் கொடுத்தார்கள். அதனால் அடுத்தடுத்த பயணங்கள் அதை நோக்கியே இருந்தது. அப்பா, அம்மா நம்பிக்கை வைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். தீவிரமாக சுழன்று ஒரு கதை பிடித்தேன். தயாரிப்பாளர் தேடி அடைந்தேன். இப்போது வீனஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனம் அங்கீகாரம் தந்து வெளியிட வந்திருக்கிறார்கள். இப்படித்தான் வந்தது இந்தப் படம். 

"துருவங்கள் பதினாறு' எப்படியிருக்கும்...?

ஒரு கட்டத்துக்குப் பின் நினைவுகள்தான் நம்மை வழி நடத்தும். அது எப்போதுமே குழப்பமானவை. பல இடங்களில் அது பவர் ஃபுல். பல நேரங்களில் அதுதான் அழகு. அதே நினைவு சில நேரங்களில் சகிக்க முடியாத அசிங்கமாகவும் மாறும். அதுவும் தவறுகளுக்குப் பின், கோபத்துக்குப் பின் வருகிற நினைவுகள் இருக்கே, அதன் கனம் ரொம்ப ரொம்ப பெருசு. அதன் பாரத்தை தாங்கவே முடியாது. நிகழ்காலத்தின் எல்லா சந்தோஷங்களையும் அது சுத்தமாக துடைத்து தூரத் தூக்கி எறிந்து விடும். ஒரு பெரிய இளைப்பாறுதலின் போதுதான் அதை நாம் உணர முடியும். அப்போதும் குற்ற உணர்ச்சிதான் மிஞ்சுமே தவிர, அதனால் வேறு எந்த பயனும் இருக்காது. மன்னிப்பு, கண்ணீர், வேண்டுதல், பிரார்த்தனை என எந்தக் கட்டத்துக்கும் அது இழுத்துப் போகும். எப்போதோ சிரித்த விஷயங்களுக்காக, இப்போது அழ வேண்டி இருக்கும். எப்போதோ அழுததை நினைத்தால், எப்போதும் சிரிக்க வேண்டி வரும். அப்படித்தான் இங்கே, ஒரு காவல் துறை உயர் அதிகாரி, ஒரு விபத்தில் சிக்கி காலை இழக்கிறார். அப்போது அங்கே வருகிற ஓய்வு, நினைவுகளுக்குள்ளே இழுத்துப் போகிறது. ஏதேதோ வந்து தூசி தட்டுகிறது. அப்போது அவருக்கு நேருகிற, நேர்ந்த சம்பவங்களே படம்.  

காவல் துறை பணியின் திரை மறைவுகளை விமர்சிக்கும் தோரணை இருக்கிறது...

விமர்சனங்கள் இருக்காது. ஒரு தனி மனிதனுக்கான உணர்வுகள்தான் கதை. அதை போலீஸ் அதிகாரியின் பின்னணியில் சொல்லியிருக்கிறேன். மற்றபடி எந்த இடத்திலும் சர்ச்சை நிலவாது. இப்போது என்னையோ, உங்களையோ எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு சின்ன மன்னிப்பு கேட்காமல் எத்தனை பேரை கடந்து வந்திருப்போம். இப்போது கேட்க தோன்றும், ஆனால் அவர்களை சந்திக்க முடியாது. அது மாதிரிதான் இது. எல்லாவற்றுக்கும் இங்கே தீர்வு தேவைப்படுகிறது. சரியான விகிதம் கொண்ட மனித மனசு எங்கேயும் இல்லை. தீர்க்க முடியாத, நிறைவேற்ற முடியாத பல பிரச்னைகளை எப்படியாவது தீர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சிலவற்றுக்கு தீர்வே இல்லை. தீர்க்கப்பட்ட பிரச்னைகள் சரியாக கையாளப்பட்டதா என்பது பொது கேள்வி. அதை ஒவ்வொருத்தரையும் உணர வைக்கத்தான் இந்தப்படம். காதல், அன்பு, மனிதநேயம், சமூக அக்கறை என்று படம் முழுக்க மென்மையான உணர்வுகள் கூடவே வரும். மொழிகள் கடந்தும் நிலைச்சு நிற்பது அன்பும் மனிதநேயமும் என்று இந்தப் படத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். 

ரகுமான் ரொம்பவே தேர்வாகத்தான் நடிப்பார்... அவரை எப்படிப் பிடித்தீர்கள்...?

ரகுமான் சார் மட்டுமே இந்தப் படத்துக்கான மிகப் பெரிய நம்பிக்கை. தீபக் என்ற கதாபாத்திரத்தில் வரும் காவல்துறை அதிகாரி அவர்தான். அவரைச் சுற்றித்தான் முழுக்கதையும். படத்தை பார்த்து விட்டு, ""நான் சினிமாவில் எதுவாக இருக்க நினைச்சேனோ, அதன் முதல் படி இந்தப் படம்...'' என்று பாராட்டினார். அப்படியொரு வார்த்தை அவரிடம் இருந்து வந்ததில் மகிழ்ச்சி. 
அரவிந்த்சாமி, பார்த்திபன் என பல பேருக்கு கதை சொல்ல காத்திருந்தேன். இப்போது நினைக்கிறேன்... ரகுமான் தான் பொருத்தம் என்று. வழக்கமான ரகுமான் மாடுலேஷன், டயலாக் இல்லாமல் வித்தியாசமான ஃபெர்பாமான்ஸ் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்கும் தொடர்பு இருக்கும். எதுவும் அந்நியப்படாது. சவுண்ட் நிறைந்த படம். திரைக்கதை நாலைந்து முறை புரட்டிப் பார்த்து, ரசிகர்களுக்குப் புரிய வேண்டும் என்றெண்ணி சொல்லியிருக்கிறேன். 

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com