பெண்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! - டாக்டர் அஞ்சனா

"நீரிழிவு நோய் குறித்து சமீபகாலமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்று சொன்னாலும்
பெண்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! - டாக்டர் அஞ்சனா

கடந்த நவம்பர் 14 -ஆம் தேதி "சர்வதேச நீரிழிவு தினம்' கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி டாக்டர் மோகன் டயபடிக் ஸ்பெஷல் சென்டரின் நிர்வாகியும் டாக்டர் மோகனின் மகளுமான டாக்டர் அஞ்சனா. நீரிழிவு நோய் குறித்தும், குடும்ப தலைவிகளும், வளரும் தலைமுறையினரும் நீரிழிவு நோயிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

"நீரிழிவு நோய் குறித்து சமீபகாலமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்று சொன்னாலும் - நீரிழிவு நோய் உள்ளவர்களும் அதிகரித்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
நீரிழிவு நோயில் பல வகைகள் இருக்கின்றன.
முதலில் டைப் - 2. இதுதான் சமீபகாலமாக நிறைய பேருக்கு இருப்பது. 95% இதுதான் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
• டைப் -1. இது குழந்தைகளுக்கு இருப்பது. இது ஒரு 2% இருக்கிறது.
• கர்ப்பகாலத்தின் போது மட்டும் ஏற்படுவது இது 0.5% இருக்கிறது. இதற்கு GDM( GESTATIONAL DIABETES MELLITUS) என்று பெயர். மற்றதெல்லாம் 2.5% சதவிகிதம் இருக்கிறது.
அதில் முதலில் சொன்ன டைப் - 2 என்பது முன்பு எல்லாம் 50 ,60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்தது. பின் அடுத்த ஜெனரேஷனில் 40 வயதிலே வந்தது. இப்போ அது 25லிருந்து 30 வயதுக்குள்ளேயே வருகிறது. இதற்கு காரணம், நம்முடைய லைப் ஸ்டைல் மாற்றம். உடற்பயிற்சி இன்மை, ஸ்ட்ரெஸ் மற்றும் டென்ஷன். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், உங்களுடைய சிறுவயது பேமிலி போட்டோவை எடுத்து அதில் இருப்பவர்கள் எல்லாரையும் பாருங்கள். அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள். அவர்களின் உடல் எடை எந்தளவுக்கு கூடியிருக்கிறது என்பது புரியும். இதற்கு முக்கிய காரணம் உணவுப்பழக்கம், இதுதான் நீரிழிவு நோய் உருவாக முக்கிய காரணம்.
அந்தகாலத்தில் பெப்ஸி, கோக் எல்லாம் யாருக்கு தெரியும். ஆனால் இப்போது ஒரு குக்கிராமத்திலும் குளிர்பானங்களும், சிப்ஸ், பொரித்த அயிட்டங்களும் கிடைக்கிறது. இதனால் முற்றிலுமாக நமது உணவு பழக்க வழக்கம் இந்த முப்பது ஆண்டுகளில் தலை கீழாக மாறியுள்ளது. அதிலும் குழந்தைகளிடம் இது மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து உள்ளது. அதுபோன்று பெற்றோர் குழந்தைகளை சினிமா, ஹோட்டல், பார்க், பீச் என்று அழைத்து செல்கிறார்கள். பீட்சா, பர்கர், ஐஸ்கிரீம் என்று வாங்கி தருகிறார்கள். இதில், என்னாலயும் என் குழந்தைக்கு வாங்கி தர முடிகிறது என்று பெருமை வேறு. இதனால் ஓவர் வெயிட் எனப்படும் உடற்பருமன். இதனால்தான் குழந்தைகளைக் கூட நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
அரிசி சாதம், பருப்பு, கீரை, காய், கூட்டு, பொரியல் என்று நம் பாரம்பரிய உணவில் சத்துக்கள் நிறைய இருந்தது. அதைச் சாப்பிட்டு வெயிட் ஏறவுமில்லை. ஆனால், நவீன உணவுகளின் அவைலபிலிட்டி மற்றும் அஃபோர்டபிலிட்டியால் இந்த பருமன் நிலை. பின்னாளில் இதுவே நீரிழிவு ஏற்பட காரணமாகிறது.
முன்பு எல்லாம் பெண்களுக்கு அம்மி, ஆட்டுக்கல், கிணற்றில் தண்ணீர் இறைப்பது, வீட்டு வேலை செய்வது போன்றவை உடற்பயிற்சியாக இருந்தன. இப்போது எல்லாமே ஒரு சுவிட்சில் முடிந்துவிடுகிறது. அது போன்று ஆண்களும் நடப்பதே இல்லை. எங்கு சென்றாலும் வாகன வசதி, சைக்கிள் என்பதே குறைந்து விட்டது. படி ஏறி இறங்குவது இல்லை. லிஃப்ட்தான். கிராமப்புறங்களில் வயலில் இறங்கி வேலை செய்ததும் போய் இப்போது மெஷின்கள் வந்துவிட்டது. இதனால் அங்கும் உடல் உழைப்பு குறைந்துவிட்டது.
சமீபத்திய ஆய்வு என்ன சொல்கிறது என்றால் நம் நாட்டில் 86% மக்களுக்கு பிசிக்கல் ஆக்டிவிட்டியே கிடையாது. 14% மக்கள்தான் உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்கள். எனவே உணவில் அதிக கலோரி, ஆனால் எனர்ஜி சீரோ. எனவே ஓவர் வெயிட், ஒபிஸிட்டி அதன் விளைவு நீரிழிவு.
உணவு பழக்க வழக்கங்களில் கொண்டு வர வேண்டிய மாற்றம் என்ன?
ஒரு பேமிலியோட ஹெல்த், அந்த குடும்பத் தலைவியிடம் தான் இருக்கிறது. அதனால் அவர்கள்தான் இதை முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
காலை உணவாக 4 இட்லி, மதியம் அரிசி சாதம், இரவு 4 சாப்பாத்தி என்று எடுத்துக் கொள்கிறார்கள். இது எல்லாமே கார்போஹைட்ரேட்ஸ். போதாக் குறைக்கு உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் அதில் அதிகபடியான அளவு கார்போஹைட்ரேட்ஸ்தான் இருக்கிறது.
அதற்கு ஒரே வழி கார்போஹைட்ரேடை பாதியாக குறைத்துக் கொள்ளவேண்டும். 4 சாப்பாத்தி சாப்பிட்டவர்கள். 2 சாப்பாத்திதான் சாப்பிட வேண்டும். அதற்கு பதில் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியே ஒரு வேளை ஹெவியாக சாப்பிட்டுவிட்டால் அதற்கு தகுந்தபடி ஒரு வேளை சாப்பிடாதீர்கள். சாலட், சூப்போடு நிறுத்திவிடுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம் என்றால் நம்மூர் மக்களுக்கு பீட்சா, பர்கர், ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பாடாக தெரியாது. ஒரு ஈவினிங் ஷோ சினிமாவிற்கு போய் இருப்பார்கள், அங்கே இஷ்டத்திற்கு ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிட்டுவிட்டு வருவார்கள். வீட்டுக்கு வந்ததும் இரவு சாப்பாடு வேறு சாப்பிடுவார்கள். சாப்பாட்டைவிட 4 மடங்கு கலோரி ஸ்நாக்ஸ் வகைகளில்தான் அதிகம்.
எல்லாருக்குமே பழங்கள், காய்கறிகள் சத்து அதிகம் என்பது தெரியும். எது ஆரோக்ய உணவு என்பதும், ஆரோக்யம் இல்லை என்பதும் தெரியும். அதனால் அவர்கள்தான் தேவையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எதை சாப்பிட்டாலும் சத்தான உணவாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள்.
அதுபோன்று உணவு முறையில் முக்கியமான ஒன்று காலை 7.00 மணியில் இருந்து 9.30 மணிக்குள் காலை உணவை முடித்துவிடுங்கள். 12 - 1மதிய உணவை சாப்பிடுங்கள். இரவு 8.00 மணிக்குள் சாப்பிட வேண்டும். இதுதான் உணவு உண்ணும் நேரம். ஆனால் பெரும்பாலானோர் காலை சிற்றூண்டியை 11 மணிக்கும், மதிய உணவை 3 மணிக்கும் உண்கிறார்கள். இதற்கிடையில் அவ்வபோது டீ, காபி, ஸ்நாக்ஸ் என்று எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் மாலையில் ஒரு சிற்றுண்டி, அடுத்து 2 மணி நேரத்தில் இரவு உணவு. நீங்களே யோசியுங்கள். இப்படி அடுக்கடுக்காக உணவு உள்ளே சென்று கொண்டிருக்கும்போது - ஜீரணத்திற்கான உறுப்பு அதன் வேலையை எப்படி செய்யும். இவைகள்தாம் உடலில் பல்வேறு பிரச்னைகள் உருவாக காரணம்.
அம்மா கொடுக்குற உணவுதான் குழந்தையும், அந்த குடும்பமும் சாப்பிடுகிறது. அதனால் பெண்களே தயவு செய்து நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு சத்தான உணவுதான் கொடுக்கிறீர்களா? என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் பாசமாக வாங்கிக் கொடுக்கும் உணவே உங்கள் குழந்தைக்கு பின்னாளில் பிரச்னையாக மாறலாம். அதனால் பெண்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்றார்.
- ஸ்ரீதேவிகுமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com