லாபம் தரும் செட்டிநாடு இட்லி!

தமிழக பிரதான உணவு வகைகளில் முதலிடம் எப்போதும் இட்லிக்குதான். காரணம், குழந்தைகள் முதல் பெரியவர் வரை இட்லியை விரும்பாதவர் எவரும் இல்லை எனலாம்.
லாபம் தரும் செட்டிநாடு இட்லி!

தமிழக பிரதான உணவு வகைகளில் முதலிடம் எப்போதும் இட்லிக்குதான். காரணம், குழந்தைகள் முதல் பெரியவர் வரை இட்லியை விரும்பாதவர் எவரும் இல்லை எனலாம்.  மேலும் நோயாளிகளுக்கும் அளிக்க கூடிய முதல் உணவு இட்லிதான். 
ஆனால் பல வீடுகளில் இட்லி இட்லியாக இருப்பதில்லை. இதனால் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கும் ஹோட்டலில் கிடைப்பது போன்று வெள்ளை வெளேரென மெத்தென்று இருக்கும் இட்லியை செய்து விடவேண்டும் என்பது ஆசை. அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் சென்னையை சேர்ந்த காவேரி. மெத்தென்று மிருதுவாக இருக்கும் செட்டிநாடு இட்லி தயாரிப்பதில் வல்லவரான இவர், கார்பரேட் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் இட்லியை தயார் செய்து தந்து அதன் மூலம் சிறு தொழிலதிபராக மாறியிருப்பவர். அவரைச் சந்தித்தோம்:
 
"எனக்கு  பூர்வீகம் காரைக்குடி. ஆனால் சின்ன வயதிலிருந்தே படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். விடுமுறை நாட்கள் எல்லாம் காரைக்குடியில் பாட்டி வீட்டில்தான். நாங்க காரைக்குடி போனாலே பாட்டி விதவிதமாக சமைத்து போட ஆரம்பித்துவிடுவார்கள். பலகாரங்களை சாப்பிடுவதோடு இருந்துவிடாமல் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். அங்கே கற்று கொண்டு வரும் பலகாரங்களையெல்லாம் சென்னை வந்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் செய்து கொடுப்பேன். அப்பவே எல்லாரும் என்னை கிண்டல் செய்வார்கள் "உனக்கு கையில் தொழில் இருக்குடி நீ எப்படியும்  பிழைச்சுக்கவேன்னு' சொல்வாங்க.  அது இப்போது நிஜமாகியிருக்கு. திருமணத்திற்கு பிறகும் சென்னையே வாழ்விடமாக அமைந்ததால்  பி.காம் படித்து வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் என்று ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்டண்ட்டாக வேலை பார்த்து வந்தேன். பிள்ளைகள் பிறந்து கொஞ்சம் பெரியவர்களாக வளர்ந்ததும். அவர்களுடைய படிப்பிற்கு கூட  இருந்து கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் வீட்டில் இருந்தபடியே ஏதாவது சிறு தொழில் செய்யலாம் என்று நினைத்து வேலையை விட்டுவிட்டேன். ஆனால்  என்ன வேலை செய்வது என்று குழப்பம். 
இந்நிலையில், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், என் அலுவலக தோழிகள் எல்லாம் சொன்னார்கள். "உங்க வீட்டு இட்லி எப்பவும் ஸ்பெஷலா இருக்குமே, நீ ஏன்? அதையே தொழிலாக செய்யக் கூடாது' என்றார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் என ஆர்டர் பிடித்து தர ஆரம்பித்தார்கள். இதனால்  என் சகோதரி பார்வதியின் துணையுடன் விளையாட்டாக ஆரம்பித்தேன். இன்று என்னை கார்பரேட் நிறுவனங்கள் வரை கொண்டு நிறுத்தியிருக்கிறது. 
தரமான அரிசியை தேர்ந்தெடுப்பதிலிருந்து, அரைப்பது, கரைப்பது வரை  சின்னதா கவனம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் பஞ்சுமாதிரி, மிருதுவான இட்லியை தயாரிக்கலாம். வெந்தயம் கூட சேர்க்க தேவையில்லை. இட்லியும் ஒருநாள் முழுக்க மென்மையாகவே இருக்கும்.
தற்போது இட்லியை ஆர்டரின் பேரில் தயாரித்து கொடுக்கும் நேரத்தைவிட இட்லி தயாரிக்கும் செய்முறையை சொல்லிக் கொடுக்கும் நேரம்தான் அதிமாக இருக்கிறது.  
இட்லி தயாரிப்பை தொழிலாக எடுத்து செய்ய நினைப்பவர்களும், இல்லத்தரசிகளும் நிறைய வருகிறார்கள். இதனால் இட்லி தயாரிப்புடன் சேர்த்து 5 வகையான செட்டிநாடு பலகாரங்கள் தயாரிப்பும் கற்றுத் தருகிறேன்.
குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்தால் போதும் சிறிய அளவிலான தொழிலாக வீட்டிலிருந்தபடியே இட்லி தயாரிப்பை ஆரம்பிக்கலாம் 50 சதவிகித லாபம் நிச்சயம். 
- ஸ்ரீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com