3.25 லட்சம் திருமணங்கள் சாதனை நிமிடங்கள்..! சொல்கிறார்: மீரா நாகராஜன்

"நான் சிறுமியாக இருந்தபோது ஒருமுறை, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கச்சேரிக்குப் பெரியவங்க அழைச்சுட்டு போனாங்க,
3.25 லட்சம் திருமணங்கள் சாதனை நிமிடங்கள்..! சொல்கிறார்: மீரா நாகராஜன்

"நான் சிறுமியாக இருந்தபோது ஒருமுறை, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கச்சேரிக்குப் பெரியவங்க அழைச்சுட்டு போனாங்க, அந்த சமயம் எனக்கும் மேடையேறி பாடணும்னு ஆசை... என் பாட்டி ராஜலட்சுமிகிட்ட சொன்னேன்... அவங்க, "அதெல்லாம் குடும்பத்துல பரம் பரையா வரணும்'னாங்க... அதுக்கு நான், "பரம்பரையா வரணும்னாலும் யாராவது ஒருத்தர்தானே ஆரம்பிச்சு வைக்கணும்...? நம்ம குடும்பத்துல நான் ஆரம்பிச்சு வைக்கறேனே...'ன்னு சொன்னேன். என் பாட்டி தந்த ஊக்கம்தான் இன்று என் உயரத்துக்கான அடியுரம்... 

இன்னைக்கு மேடையில நான் "கல்யாணி ராகம்' பாடலேன்னாலும், என் சிந்தையில் உதித்த "கல்யாணமாலை'யின் மணம் உலகெங்கும் பரவி, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட திருமணங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம்..! தமிழ் ஒலிக்காத பிரதேசங்களிலெல்லாம் தமிழைப் பட்டிமன்றம் மூலமாகவும், பேச்சரங்கம் மூலமாகவும் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறோம்..! இது என் தனிப்பட்ட வெற்றியல்ல... எங்கள் கூட்டுக்குடும்பத்தால் கிடைத்த வெற்றி..!'' என்று பெருமிதத்துடன் கூறும் மீரா நாகராஜன், 16 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "கல்யாண மாலை' நிகழ்ச்சியின் இயக்குநர். சென்னை தியாகராயநகர் ராமசாமி தெருவில் இயங்கும் கே.எம்.மேட்ரிமோனி அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோது.... 

"கல்யாண மாலை' நிகழ்ச்சியில் 16ஆண்டுகளை நிறைவு செய்துள்ளீர்கள்... ஆரம்பப் புள்ளி எங்கிருந்து..?

சுருக்கமா சொன்னா என் கல்யாணத்துலேருந்து... கொஞ்சம் விளக்கமா சொல்லணும்னா சின்ன ஃப்ளாஷ்பேக்... 

கும்பகோணம் வட்டம் பாபநாசம் நல்லூர் என் பூர்வீகம். ஆனால், என் பாட்டி காலத்திலேயே சென்னைக்கு வந்துவிட்டோம். என் பாட்டி ராஜலட்சுமி, பர்கிட் ரோடு சாரதா வித்யாலயாவில் தமிழ் ஆசிரியையாக இருந்தாங்க... நான் பத்தாம் வகுப்புவரை அங்குதான் தமிழ் மீடியம் படித்தேன். ப்ளஸ்-டூவுக்கு ராணி மெய்யம்மையில் இங்கிலீஷ் மீடியம் சேர்ந்ததும் நான் மட்டும் தனித் தீவு போல இருந்தேன். சிறப்புப் பாடமாக தமிழை எடுத்துக்கொண்டேன். தமிழ்ப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றேன். அந்த வருடம் ப்ளஸ்-டூவில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றேன். குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ. எகனாமிக்ஸ், எம்.ஏ. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், இரண்டாவது மொழியாக ஹிந்தி படித்தேன். கொஞ்சநாள் ஸ்கூல் டீச்சராகவும் இருந்தேன். 

1984இல் எனக்குத் திருமணம் ஆனது. 

வருமான வரித்துறையில் பணியாற்றிவந்த நாகராஜனை மணந்து இக்குடும்பத்திற்குள் வந்தேன். திருமணத்திற்குப் பின் என் படிப்புக்கு ஏற்ற மத்திய அரசு உத்தியோகம் கிடைத்தும், வேலைக்குப் போகவில்லை. சுய தொழிலில் முன்னேற வேண்டும் என்றும், மீடியாவில் சாதிக்கவேண்டும் என்றும் விரும்பினேன். பெரியவர்களின் ஆலோசனையும், ஒத்துழைப்பும் அதற்கு உதவியாக இருந்தது. என் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் என் கணவரின் குடும்பம் அமைந்தது என் பாக்கியம்.

கணவரின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம். மாமனார் வைத்தியநாதன், மாமியார் காமாட்சி. இவர்களுக்கு வி.நடராஜன் (பிரமிட் நடராஜன்), டி.வி.மோகன் (கல்யாணமாலை மோகன்), வி.நாகராஜன் (என் கணவர்) ஆகிய 3 மகன்கள். ஒரே மகள் நீலாயதாட்சி. 1970-களில் மூத்தவர் நடராஜனுக்கு தபால்-தந்தி துறையில் வேலை கிடைத்து சென்னை வந்த சமயம், அவர்கள் குடும்பமும் ஜாகை மாறி சென்னைக்கு வந்தது. 

மூத்த மருமகள் வள்ளி நடராஜன் (இரண்டு மாதம் முன்பு காலமானார்), இரண்டாம் மருமகள் உமா மோகன், மூன்றாம் மருமகள் நான் (மீரா நாகராஜன்) ஆகிய நாங்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக மாமனார்-மாமியாருடன் வசித்தோம்.

மோகன் சார் பின்னி மில்லில் பன்னிரண்டு ஆண்டுகள் வேலை பார்த்துவந்தார். அத்துடன், சொந்தமாக ஸாஃப்டி ஐஸ்கிரீம் வியாபாரமும் தொடங்கினார். பாரீஸ் கார்னரில் கனி அன்ட் சன்ஸ் கடையிலும், பழைய ஸ்பென்சர் வளாகத்திலும் இவரது ஐஸ்கிரீம் வியாபாரம் சூடுபிடித்திருந்தது. ஐஸ்கிரீம் வியாபாரம் செய்துகொண்டே, கல்யாணங்களுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து, திறமையான சமையல் கலைஞர்களை அனுப்புவதில் நற்பெயர் பெற்றிருந்தார். ஒருவர், "சமையல் கலைஞராக' இல்லாமலேயே "சமையல் கான்ட்ராக்டர்' ஆக முடியுமா..? முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அவர் ஒருவர்தான். 

1980-களில் எங்கள் குடும்பத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. மூத்தவர் நடராஜன், இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தில் நிர்வாகத் தயாரிப்பாளரானார். 

மோகன் சாரும் நாங்களும் "நடராஜ் கிரியேஷன்ஸ்' என்ற பேனரில் தூர்தர்ஷனில் நிகழ்ச்சிகள் தயாரிப்பது என்றும், "நடராஜ் எக்ஸ்போர்ட்ஸ்' என்ற பேனரில் மற்றவர்களின் தொலைக்காட்சித் தொடர்களை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்றும் தீர்மானம் செய்தோம். "எக்ஸ்போர்ட்ஸ்' விவகாரங்களை என் கணவர் நாகராஜன் கவனித்துக்கொண்டார். மோகன் சார் உதவியுடன் நான் கிரியேடிவ் சைடில் இருந்தேன்.

குஷ்பு நடிக்க வந்த புதிதில் அவரை வைத்து ஒரு சிங்கிள் எபிசோட் எடுத்தோம். அதற்கு ஆஸ்திரேலியாவில் "பினாக்கிள் அவார்ட்' கிடைத்தது. தொடர்ந்து, நான் ஸ்க்ரிப்ட் ஒர்க் செய்து, "டெம்பிள்ஸ் ஆஃப் இண்டியா', "ஃபெஸ்டிவெல்ஸ் ஆஃப் இண்டியா' என தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

90-களில் சாடிலைட் சேனல்கள் அதிகமாக வரத்தொடங்கிய சமயத்தில் பெண்கள் பெரும்பாலும் அழகுக்கலை, சமையல்கலை நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார்கள்.

பியூட்டி, குக்கரியை விட்டு வெளியேறவேண்டும். புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என விவாதித்துக்கொண்டிருப்போம்... அப்போது, தேனாம்பேட்டையில் ஒரு ஸ்டுடியோவில் தேநீர் இடைவேளையின்போது, ஒரு டீ குடிக்கும் நேரத்தில் உதயமானதுதான் "கல்யாண மாலை'யின் ஆரம்பப் புள்ளி. 

நடராஜன் சாரிடம் இதைச் சொன்னதும், நல்ல நிகழ்ச்சி; நாமே சொந்தமாகத் தயாரிக்கலாம் என்று ஊக்கம் கொடுத்தார். 

ஆரம்பத்தில் வரவேற்பு எப்படி இருந்தது..?
1996-இல் முதல் படப்பிடிப்பை அப்பு ஹவுசில் தொடங்கினோம். முதலில் திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாதான் இயக்கினார்.
ஒரு வீட்டில், பெண்ணுக்கோ-பையனுக்கோ முதலில் திருமணப்பேச்சை எடுப்பவர்கள் பெரும்பாலும் அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா போன்ற உறவினர்கள்தான். அவர்கள்தான் நிகழ்ச்சியில் பங்கேற்று வரன்களைப் பற்றிக் கூறினார்கள். வரன்கள் திரையில் தலைகாட்டத் தயங்கினார்கள். ஒரு நிகழ்ச்சியில் பத்து வரன்களுக்குமேல் அறிமுகம் செய்ய முடியாது... இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.  

வரன் தேடுவோர் மட்டுமின்றி அனைவருமே நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டும்; அதற்கேற்றாற்போல் நிகழ்ச்சியை வடிவமைக்க வேண்டும்; அவகாசம் தேவைப்பட்டது. அதனால், நிகழ்ச்சியை சிறிது காலம் நிறுத்திவிட்டு மீண்டும் புதிய வடிவத்தில் எனது இயக்கத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கினோம். 

புதிய வடிவம் என்றால்...?
வரன் அறிமுகம் மட்டும் அல்லாமல், "சூப்பர் ஜோடி விவாதமேடை' மற்றும் சுகிசிவம், சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் தலைமைகளில் "பட்டி மன்றம்', "பேச்சரங்கம்' போன்றவற்றை இடையிடையே கொடுத்தபோது நிகழ்ச்சிக்கும் நல்ல வரவேற்பு கூடியது. 

ஆனால், ஜாதகம், போட்டோ, விவரங்களை இப்போதுபோல இமெயில் அனுப்புவது அவ்வளவு ஈஸியாக இல்லை அப்போது. 

இருபது வயது பெண்ணின் ஜாதகம் பார்த்து, நாற்பது வயது மாப்பிள்ளை சம்பந்தம் பேசுகிறார் என்றெல்லாம் புகார்கள் வரும். இதுபோன்ற புகார்களைத் தவிர்க்க பிரத்யேகப் பதிவுகள், கான்ஃபிடென்ஷியல் லைனில் மட்டுமே வரன்களைத் தொடர்பு கொள்ளும் வகையில், எங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தோம். சமூகம் சார்ந்த திருமணத் திருவிழாக்களை நடத்தினோம். 

இதில், ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பங்கேற்றனர்.  பின்பு, கல்யாணமாலை மேகஸின், வெப்சைட், அதிதி கேட்டரிங் அனைத்தும் தொடங்கியதும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் எல்லாம் பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. மோகன் சாரின் இனிமையான அணுகுமுறையால், கல்யாண மாலை மூலம் நடத்திவைக்கப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கையும் மூன்று லட்சங்களைத் தாண்டியது. 

மறக்க முடியாத அனுபவங்கள்...
கோவா, அந்தமான், அகமதாபாத் போன்ற பல இடங்களில் முதல்முறையாக தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். பாரீஸில் முதல்முறையாக வரும் அக்-8}இல் நிகழ்ச்சி நடத்துகிறோம்.  அமெரிக்காவில் இதுவரை, எட்டு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். அங்கு வசிப்பவர்கள் நம் பாரம்பரிய முறைப்படி அனைத்து சடங்குகளுடன் திருமணம் செய்யவே விரும்புகிறார்கள். ஒரு சம்பிரதாயத்தைக்கூட வேண்டாம் என்று ஒதுக்குவதில்லை. அங்குள்ள சிறுசுகளிடம்  ஸ்ரீகிருஷ்ணரின் குரு யார் என்று கேட்டால் "சாந்தீபணி' என உடனே கூறுகிறார்கள்.

வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தன் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்றுத்தருகிறார்கள். இதையெல்லாம் பார்க்கப் பெருமையாக இருக்கிறது.
-ரவிவர்மா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com