வெள்ளை மாளிகையில் பிள்ளைத் தமிழ்...

அமெரிக்க இளைஞர்களுக்கு இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் கவிதைகள்,  எழுதும் திறமையை வெளிப்பட வைக்கவும்  
வெள்ளை மாளிகையில் பிள்ளைத் தமிழ்...

அமெரிக்க இளைஞர்களுக்கு இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் கவிதைகள்,  எழுதும் திறமையை வெளிப்பட வைக்கவும்  அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பள்ளி சிறுவர், சிறுமியர்களுக்கான இலக்கிய நிகழ்ச்சி 2011-ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது.

2016-ஆம்  ஆண்டுக்கான நிகழ்ச்சி சமீபத்தில் வெள்ளை மாளிகையில்  நடைபெற்றது.

அதில், அமெரிக்கவாழ் தமிழ் தம்பதியரின் மகள் மாயா ஈஸ்வரன். தனது கவிதையை ஆங்கிலத்தில் வாசித்தார். பதினேழு வயதாகும் மாயா வாசித்த கவிதை   ஒபாமாவின் மனைவி மிச்சேல் மற்றும் அரங்கில் கூடியிருந்த அனைவரையும்  சில நொடிகள்  ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. அந்த கவிதையின்  மொழிபெயர்ப்பு இதுதான். 

எனது பதினாறு ஆண்டு  வாழ்வில் நான் இழந்ததை விட, 
மிக முக்கியமான ஒன்றை நான் இழந்திருக்கிறேன்.
தினமும் என் தலை முடி உதிர்வதைப் போல,
என் இனத்தின் அடையாளமான 
என் தாய் மொழி  தமிழை உதிர்த்து
தினமும்  கொஞ்சம் கொஞ்சமாக  இழந்து  
அந்நியமாகிக் கொண்டிருக்கிறேன்.

தாய்மொழி தமிழில் பேசி  மூன்றாண்டுகள் ஆகின்றன.
தலைமுடி முழுதும் உதிர்ந்து தலை வழுக்கை ஆவது போல்,
என்  தாய் மொழி தமிழை  நான்  முழுவதும் 
மறந்து   விடுவேனோ  என்று  பயப்படுகிறேன்.

அமெரிக்காவிற்குப் புலம்  பெயர்ந்ததினால்,  தன்  வாழ்க்கையில் தாய்  மொழி தமிழின்  இடத்தை   மெல்ல மெல்ல ஆங்கிலம்  பிடித்துக் கொள்ளும் அபாயத்தினை  உள்வாங்கிய மாயா, தாய் மொழி  தமிழ்  சிறிது  சிறிதாக அந்நியப்படுவதின்   வலியை    உணர்ந்ததின்  வெளிப்பாடே இக் கவிதை. 

இதயம் விம்ம,  குரல் கம்ம   உணர்வுப் பூர்வமாக மாயா  தன் கவிதையை வாசித்து முடித்ததும், அரங்கிலிருந்த மிச்சேல் மற்றும் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்ச்சி கலந்த  உற்சாகத்தோடு கைதட்டி  பாராட்டியதில் வியப்பில்லை.

"தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் குறித்து  அநேக கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன்.  தமிழில் எழுத முடியவில்லை..  அந்நியமொழி தாய் மொழியின் இடத்தைப் பிடிப்பதால் ஏற்படும் வலி மிகவும் ஆழமானது. தமிழில் பேசக் கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என்று  நான் நாளும் குமைந்ததின் குமுறல்தான் நான் வெள்ளை  மாளிகையில் வாசித்த கவிதை...'  என்கிறார் மாயா...

- கண்ணம்மா  பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com