சமைத்துப் பழகப் போகிறேன்! - பின்னணிப் பாடகி எஸ். ஜானகி

எனக்கு எழுபத்தெட்டு வயதாகி விட்டது... நானே தொடர்ந்து பாடினால் போதுமா? இளைய தலைமுறையினருக்கு...
சமைத்துப் பழகப் போகிறேன்! - பின்னணிப் பாடகி எஸ். ஜானகி

எனக்கு எழுபத்தெட்டு வயதாகி விட்டது... நானே தொடர்ந்து பாடினால் போதுமா? இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகள் வேண்டாமா? புதியவர்கள் பாடட்டும்... நாம் கேட்போம்... எனக்கும் கொஞ்சம் ஓய்வு வேண்டும்'' என்று சொல்லியிருக்கும் பின்னணி பாடகி எஸ். ஜானகி, இனி திரைப்படங்களுக்காகப் பாடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். சுமார் நாற்பத்தெட்டாயிரம் பாடல்களைப் பதினைந்து மொழிகளில் பாடியிருக்கும் ஜானகி, பின்னணி பாடலுக்காக பல மாநில விருதுகளும், தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் பல்லேபட்லா என்ற கிராமத்தில். 1938 ஏப்ரல் 23-இல் ஜானகி பிறந்தார். மூன்று வயதிலேயே இசையால் ஈர்க்கப்பட்டு பத்து வயது வரை இசை பயின்றார். சில ஆண்டுகளில், ஜானகியின் தாய்மாமன் டாக்டர் சந்திரசேகர் ""ஜானகி சென்னைக்குச் சென்றால் திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் கிடைக்கும்'' என்று வழி காட்டியதுடன், பாடகியாக சேர்த்துக் கொள்ள சிபாரிசும் செய்தார். ஜானகியின் பெற்றோர் சென்னைக்கு இடம் மாற... மாமாவின் சிபாரிசின் பேரில் ஏ வி எம் ஸ்டுடியோவில் கோரஸ் எனப்படும் கூட்டுக்குரல் கொடுக்கும் பாடகியானார்.

ஜானகி முதன் முதலாகப் பாடிய பாட்டு 1957- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டி.சலபதிராவ் இசையில் "விதியின் விளையாட்டு' என்ற படத்திற்காக. விதி விளையாடியதால் என்னவோ அந்தப் படம் வெளிவரவில்லை.

அதன்பிறகு "கொஞ்சும் சலங்கை' படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அன்றைய புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞரான காருக்குறிச்சி அருணாசலத்தின் மிக நுணுக்கமான ஸ்வரஸ்தானங்களுடன் இணையும் இழையும் குரலுக்காகப் பொருத்தமானப் பாடகியைத் தேடினார். பல தேடல், ஒத்திகைக்குப் பின் கடைசியாக ஜானகியின் குரல் சுப்பையா நாயுடுவுக்கு திருப்தியைத் தர "சிங்கார வேலனே தேவா..' பாடல் பாடினார்.

பல மொழிகளில் பாடி முத்திரை பதித்த ஜானகி, ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லா கான், வயலின் ஞானி எம்.கோபாலகிருஷ்ணன், நாதஸ்வர மேதை நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன், புல்லாங்குழல் விற்பன்னர் ஹரிப்ரசாத் சௌராசியா ஆகியோரின் இசைப் பொலிவில் இணைந்து பாடியது அவரது இசைப் பயணத்தின் மைல்கல்.

ஜானகிக்கு அர்த்தமுள்ள கோபம் வரும். 2013-இல் ஜானகிக்கு "பத்மபூஷன்' விருது அறிவிக்கப்பட்டது. "இந்த விருது எப்போதோ தரப்பட்டிருக்க வேண்டும். காலம் கடந்த அங்கீகாரம் வேண்டாம்' என்று விருதினை வாங்காமல் தவிர்த்து விட்டார்.

தமிழில் ஜானகி பாடிய கடைசிப் பாடல் "திருநாள்' படத்தின் "தந்தையும் யாரோ.. தாயாரும் யாரோ' என்ற பாடல். இதுதான் ஜானகியின் கடைசிப் பாடலாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் மலையாள இசை இயக்குனர் மிதுன் ஈஸ்வர் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதன்படி ஒரு தாலாட்டுப் பாடல் பாடியிருக்கிறார்.

"அம்மபூவினு' என்று தொடங்கும் இந்தப் பாடல், "பத்து கல்பனகள்' படத்தில் இடம் பெறுகிறது. இன்னொரு பாடல் பாடவேண்டும் என்று இயக்குநர் கேட்க, ""தாலாட்டுப் பாடல் எனக்குப் பிடிக்கும் என்பதால் பாடினேன். இரண்டாவது பாடல் பாடுவதைத் தவிர்த்து விட்டேன்'' என்கிறார்.

இதைத்தவிர, மோகன்லால் நடித்திருக்கும் "புலிமுருகன்' படத்தில் பாடியிருக்கிறேன்.

இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமான "அன்னக்கிளி' படத்தில் ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா' பாடல் ஹிட்டாக, தொடர்ந்து இளையராஜா ஜானகியைப் பாட வைக்க... ரசிகர்கள் அந்தப் பாடல்களைக் கொண்டாடினார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் குழந்தைகளுக்காக குரல் மாற்றிப் பாடுவது அவருக்கு கை வந்த கலை. "ருசி கண்ட பூனை' படத்தில் "கண்ணா நீ எங்கே..' என்று குழந்தை குரலில் பாடிய பாடலை எழுதியதும் ஜானகிதான்.

1969- இல் நிலவில் மனிதன் இறங்கியதை ஒட்டி, பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் "ஙஹய் ற்ர் ஙர்ர்ய், ஙர்ர்ய் ற்ர் எர்க்' என்ற பாடலை எழுதி இசை அமைத்து இசைத்தட்டாக்கி அன்றைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கும், நிலவில் கால் பதித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கும் அனுப்பி வைத்தார். இரண்டாவது பாடலை, ஜானகி ஸ்ரீநிவாஸýடன் சேர்ந்து எழுதியிருந்தார்.

இசை நிகழ்ச்சியாகட்டும், ஸ்டுடியோவில் பாடல் பதிவிற்காகப் பாடும் போதாகட்டும், ஜானகியின் கையில் கைக்குட்டை இருந்தாக வேண்டும். இந்த விசித்திரப் பழக்கத்தை எஸ்.பி. பாலசுப்ரமணியம் உட்பட பலரும், பல முறை கேலி செய்திருக்கிறார்கள். ஒருமுறை, எஸ். பி. பாலசுப்ரமணியம், ஜானகியின் கைக்குட்டையை எடுத்து மறைத்துவிட... பாடல் பதிவின் போது ஜானகிக்குப் பாட வரவில்லை. இசை அமைப்பாளர், என்னம்மா ஆச்சு ... ஏன் பாடத் தயங்கறீங்க.. என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். இதைக் கவனித்த பாலு, விளையாட்டு போதும் என்று கைக்குட்டையை ஜானகியிடம் கொடுக்க.... ஜானகி கீத மழை பொழிந்து தள்ளிவிட்டார்.

மகனுடன் ஹைதராபாத்தில் வசிக்கும் ஜானகி ஓய்வு நேரத்தை இனி எப்படி செலவு செய்வார் என்று அவரே சொல்கிறார்...

""உண்மையைச் சொன்னா ... இதுவரை பாடுவதில் பிசியாக இருந்துவிட்டதால் எனக்கு சமையல் செய்ய வராது.... இனி சமைத்துப் பழகப் போகிறேன்.. டிவியில் தொடர்கள் பார்ப்பேன். என்னைச் சந்திக்க ரசிகர்கள் வருகிறார்கள். அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பேன்'' என்கிறார் காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்களை பாடியிருக்கும் எஸ். ஜானகி..

- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com