தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையே பிரச்னையா?: ‘கொடி’ இயக்குநர் பதில்

எனக்கு சுருக்கமாக, சுள்ளென்று இருக்க வேண்டும் டைட்டில். அதுதான் "கொடி.' விளையாட்டு....
தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையே பிரச்னையா?: ‘கொடி’ இயக்குநர் பதில்

எனக்கு சுருக்கமாக, சுள்ளென்று இருக்க வேண்டும் டைட்டில். அதுதான் "கொடி.' விளையாட்டு, மெடிக்கல் த்ரில்லர் என முதல் இரண்டு படங்களிலும் வித்தியாசம் காட்டினேன். இப்போது அரசியல்... ரொம்பவே துணிச்சலாக இருக்கும். நமக்கு நிம்மதி வேண்டும் என்றால் ஒன்று, தலைவனாக இருக்க வேண்டும்... இல்லை, ஒரு நல்ல தலைவன் நமக்கு வாய்க்க வேண்டும். இதுதான் லைன். பொதுவாக சொன்னால், நம்மை சுற்றி பின்னப்படுகிற அரசியல் ஆட்டங்கள்தான் கதை. முழுக்க முழுக்க தனுஷ் சாருக்கு ஆக்ஷன்... ஆக்ஷன்... இதுதான் "கொடி.' "எதிர்நீச்சல்', "காக்கிச் சட்டை' என அடுத்தடுத்த படங்களில் அழுந்த பதிந்த இயக்குநர்துரை செந்தில்குமாரின் "கொடி' தீபாவளி ரிலீஸ்.

அந்தந்த காலகட்ட பிரச்னைகளை மையமாக கொண்டு அரசியல் படங்கள் வருவதுண்டு... இது எப்படி இருக்கும்...?

அரசியல் ரொம்பவே வித்தியாசமானது. கோடம்பாக்கத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற பாரி முனைக்கு ஒரு அரசியல்வாதி போனால், "வட சென்னைக்கு வருகை தரும் வருங்கால தமிழகமே...' என போஸ்டர்கள் மினு மினுக்கும். நட்சத்திர ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், நீச்சல் குளங்கள், கார், பங்களா, பேர், புகழ் என உச்ச வெளிச்சங்களுக்கு அந்தப் பக்கம் கடன், வட்டி, வீட்டு வாடகை என வாழ்வின் இன்னப் பிற தேவைகள் சராசரி மனிதர்களை துரத்திக் கொண்டே இருக்கிறது. லோக்கல் அரசியலுக்கும், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய போராட்டத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறோம் ஒவ்வொரு நாளும் மனிதம், விவசாயம், சகோதரம் என எல்லாவற்றிலும் மாற்றங்களை உருவாக்கி வைத்து விட்டது இந்த அரசியல். குறிப்பாக தொண்டர்களின் நாள்கள், அரசியல்வாதிகளின் திட்டங்களால் நிரம்பி கிடக்கின்றன. பலர் பணம், அதிகாரம் என பெரிய இடங்களை அடைந்து விட்டதையும், நாம் ஆதர்சங்களாக நினைக்கும் பலரால் பணம், அதிகாரம் எதிலும் ஓர் இடத்தை அடைய முடியவில்லை என்கிற வேறுபாடுகள்தான் இந்த தலைமுறையையும், அடுத்த தலைமுறையையும் தவறான பாதையில் பயணப்பட வைக்கின்றன. இந்த முரண்கள்தான் கதை.

கதை, பேசு பொருளும் இதுதானா...?

ஆமாம்... ஊடகங்களும், பொழுதுபோக்குகளும் மலிந்து விட்ட நாட்டில் தனியொரு மனிதனுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கி விட்டன. வசதி வாய்ப்புகள், அநீதிகளும் பெருகி வரும் சூழலில் எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது? எவர் பின்னே செல்வது? என்ன செய்வது? என்ற குழப்பமும் இந்த தலைமுறைக்கு சாபம் போல் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இது நேர்மையான குற்ற உணர்ச்சி என்று யாரிடமும் சொல்வதற்கு இல்லை. நீ மட்டும் ஒழுங்கா? என விரல் நீட்டும் மனிதர்கள் பக்கத்திலேயே இருக்கிறார்கள். தனி மனித ஒழுக்கம்தான் இன்றைய அத்தியாவசியத் தேவை. பசி தீர்க்கும் கருணையைப் பரிசளிக்காமல், யார் எப்படி போனால் என்ன அடித்து இரை தேடு என சொல்லிக் கொடுக்கும் அரசியல், ரொம்பவே அபாயகரமானது. அதை கடந்து போகிற ஒரு தனி மனிதனுக்கு இந்த சமூகமும், அரசியலும் தந்தது என்ன? இதுதான் இந்த கதை பேசும் பொருள்.

தனுஷின் லுக், டோன் எல்லாம் "புதுப்பேட்டை'யை ஞாபகத்துக்குள் கொண்டு வருகிறது...?

வெற்றிமாறன் சாரிடம் வேலை பார்க்கும் போது, தனுஷ் சார் பழக்கம். அப்போதிலிருந்தே அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என முயற்சியிலே இருப்பேன். "எதிர்நீச்சல்', "காக்கிச் சட்டை' என சிவகார்த்திகேயனை சிபாரிசு செய்தவர் அவர்தான். இரண்டு படங்களும் முடிந்த பின் மீண்டும், தனுஷ் சாருக்காக ஒரு லைன் சொன்னேன். பிடித்துப் போனதால், உடனே படத்துக்குள் வந்து விட்டார். ஹிட் ஸ்க்ரிப்ட்டை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்குவது தனுஷ் சாரின் ஸ்பெஷல். இதில் இன்னும் பிரமாதப்படுத்தி விட்டார். "ஆடுகளம்' படத்தில் தனுஷ் சார் ஜோடியாக த்ரிஷாதான் நடித்தார். பல நாள்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அது ஏனோ நின்று போனது. அப்போதிலிருந்தே தனுஷ் - த்ரிஷா காம்போ மீது அவ்வளவு ஆர்வம். அதை இந்தப் படத்துக்குள் கொணடு வந்து விட்டேன். ரொம்பவே புதிதாக இருக்கும். "புதுப்பேட்டை' லுக் வந்தது எதார்த்தம்தான். ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

இல்லை இல்லை என்று மறுத்துக் கொண்டே இருந்தாலும், தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையே பிரச்னை என்பது போலவே செய்திகள் வருகின்றன... பக்கத்தில் இருந்ததால் கேட்கிறேன்... அவர்களுக்குள் என்ன நடக்கிறது...?

எந்த பிரச்னையும் கிடையாது. அவர்கள் எப்போதும் போல்தான் இருக்கிறார்கள். ஆனால், இப்போது இருவருமே படங்களில் பிஸி. அதனால் கொஞ்சம் விலகி இருக்கிறார்கள். மற்றபடி அவர்களின் அன்பு எப்போதைக்குமானது.

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com