நிதியின் நிர்வாகம், சமத்துவத்தின் அடையாளம்! - பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.

நல்ல வேலையில் உள்ள மணமகள் தேவை என விளம்பரம் செய்து மணமுடிக்க விழையும் ஆண்களின் எண்ணிக்கை இப்போது அதிகம்.
நிதியின் நிர்வாகம், சமத்துவத்தின் அடையாளம்! - பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.

நல்ல வேலையில் உள்ள மணமகள் தேவை என விளம்பரம் செய்து மணமுடிக்க விழையும் ஆண்களின் எண்ணிக்கை இப்போது அதிகம். திருமகள் ஒருத்தி வீட்டிற்கு வந்து வாழ்க்கைத் துணை நலமாய் ஒளிர வேண்டுமென்றும், அவள் நயமான வேலையிலும் இருக்க வேண்டுமென்றும் ஆசைப்படுவதில் தவறொன்றும் இல்லை. மணமுடித்து புது வாழ்வைத் தொடங்கும்  பெண்கள் மாதாமாதம் சம்பளம் பெற்றும், பொட்டு, பூ வாங்க என ஒவ்வொரு ரூபாய்க்கும் கணவனை எதிர்பார்த்தால் அதில் சமத்துவம் இல்லை. இப்படி தரித்திர மகளாக அவள் மாற்றப்படுவதை பெண்ணுரிமை உலகம் வரவேற்பதில்லை.

பொருளாதார சுதந்திரம் மட்டும்தான் ஒரு பெண்ணை தன் சொந்தக் காலில் நிற்க வைக்க முடியும். சுய சார்புடனேயே இருந்திருக்க எண்ணித்தான் அவள் கல்வியிலும், திறமையிலும் தன்னை உயர்த்திக் கொள்கிறாள். கடும் உழைப்பால் நல்லதொரு உத்தியோகத்தையும் பெறுகிறாள். தனக்கென்று தலைவன் தன் வாழ்வில் வருகையில் பொருளாதார சுதந்திரத்தில் குறை வருமானால் அதை எதிர்கொள்ளத் தெரியாமல் கலங்கி தவிக்கிறாள்.  

வேலை செய்யும் பெண்ணாக தேடி தேர்ந்தெடுத்து மணமுடித்துக் கொள்ளும் ஆண்களில் ஒரு சிலர் அவளது சம்பாத்தியத்தையும் தனதாகவே கொள்கிறார்கள். ஏ.டி.எம் கார்டு, பாஸ்புக் முதற்கொண்டு பணம் தொடர்பான அனைத்து பொருள்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். நமக்கென வீடு வேண்டும்  வாகனமும் வாங்க வேண்டும்  குழந்தைகளின் எதிர்காலத்திற்கு குறைவிலாது சேமிக்க வேண்டும் என திட்டங்கள் பலவாக தாமே தீட்டிக் கொண்டு, சமரசங்கள் சொல்லி சம்பாத்தியத்தைப் பெறுகிறார்கள். அதை தன்வசம் எடுத்து தானே கையாண்டு தினம் தினம் நிகழும் சராசரி செலவுக்கும் தம்மையே முழுதாக சார்ந்திருக்கச் செய்கிறார்கள். 

பெண் அதிகாரிகளிலும் ஒரு சிலர் தங்களின் கணவரின் நிதிப்பிடிக்குள் கட்டுண்டு இருக்கிறார்கள். என்னிடம் பணியாற்றிய ஒரு நடுத்தர வயதுப் பெண் மிகவும் நல்லவர்;  உதவும் பண்பாளர்.  இரண்டாம் நிலை அதிகாரியாக கைநிறைய சம்பளம்.  கணவருக்கு அவரைவிட உயர்நிலையில் அரசுப்பணி. அன்புடை நெஞ்சம் கலந்த தம்பதிதான்.  ஆனால் அனைத்திற்கும் இப்பெண் கணவரைத்தான் எதிர்பார்க்கிறார். காதி நிறுவனத்திலிருந்து புடவைகள் கொண்டு வந்து, அலுவலகத்திலேயே ஒருமுறை கடையை விரித்தார்கள். அனைவரும் விருப்பத்திற்கேற்ற புடவைகள் வாங்கினோம். பெண் அதிகாரி பார்த்துக் கொண்டு மட்டுமிருந்தார். அரசின் நிறுவனமான காதியின் பொருள்களை அனைவரும் வாங்குவதை ஊக்கப்படுத்தும் நோக்கில், அப்பெண் அதிகாரியையும் வாங்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரோ, "கணவரைக் கேட்க வேண்டும்'' என்று தயங்காமல் பதிலுறுத்தார். "புடவைக்குமா?'' என்று விளக்கம் கேட்டேன். "தேங்காய் கூட அவர்தான் வாங்கித் தருவார்'' என்றார். தன் ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருள்களும் தன் கணவரின் கைவசம்தான் இருக்கும் என்றார். இது ஏற்றுக் கொள்ள முடியாத நிலையாகத் தெரிகிறது. உழைப்பைச் சுரண்டும்  முனைப்பாகப் படுகிறது. தான் உழைத்து பெறும் தன் சம்பாத்தியத்தை கையாள விடாமல் கணவனே தடுப்பது அவளின் சிறகுகளை முறித்து சுயத்தைப் பறிக்கிறது. 

எங்கள் பிறந்த வீட்டில் நடந்த நிதி நிர்வாகம் குறித்த இனிய பதிவுகள் நினைவுக்கு வருகின்றன. எமது தகப்பனாருக்கான மாதச் சம்பளம், ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஏறிவிடும். பணம் தொடர்பாக அவருக்குத் தெரிந்ததெல்லாம் காசோலைகளில் கையெழுத்து இடுவதே. நிதி நிர்வாகம் முழுக்க தாயாரின் பொறுப்பில். தாயார் அப்போது வேலையை விட்டிருந்தார். தனக்கென்று எதுவுமே வைத்துக் கொண்டதாகவோ அல்லது தனக்காக எதையுமே வாங்கிக் கொண்டதாகவோ எங்கள் தகப்பனாரை நாங்கள் பார்த்ததேயில்லை. அனைத்துமே எங்கள் தாயாரின் நிர்வாகம். ஆனால் தலையாய முடிவுகளில் தகப்பனாரின் சாணக்கியம். 

காசோலையில் தந்தையிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு, அவர் கல்லூரிக்கென இருந்த தனியொரு வங்கியில் பணம் வாங்கி வருவது பிள்ளைகளுக்கு வேலை. சம்பாதிக்கும் நபராக தான் மட்டுமே இருந்தும் நிதி தொடர்பான நிர்வாகம் முழுவதும் மனைவியிடம் தந்து சமத்துவம் நிறுவி, மனநிறைவு கண்டார் எங்களின் தகப்பனார். பணம் என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல  நம்பிக்கையும் அது தரும் சுதந்திரமுமே முக்கியம் என தனது முற்போக்கான செயல்களால் எங்களுக்கு உணர்த்தினார். இடைவெளி விட்டு எங்களின் தாயார், ஆசிரியர் பணிக்கு மீண்டும் சேர்ந்த பின்பும் அவரது சம்பளம் குறித்து தகப்பனார் கேட்டதே இல்லை. காசோலை கையொப்ப வழக்கத்தையும் தொடர்கிறார். சம்பளம் எவ்வளவு என்று கேட்காத கணவரை நானும் பெற்றுள்ளது ஓர் இனிய ஒற்றுமை. 

தன் வாழ்வின் அங்கமாக வந்துவிட்ட மனைவிக்கு ஓர் ஆண் தரும் அதிகபட்ச அங்கீகாரம் இதுவே. வேலைக்கு செல்லாத மனைவியாய் இருந்தாலும்  சம்பளத்தைத் தந்து அவளை செலவிடச் சொல்வது அவள் மீது அவன் வைக்கும் அதீத நம்பிக்கை. பெண்ணுக்கென்றே சில ஆசைகள் இருக்கலாம். தனக்குப் பிடித்த புடவை வாங்கலாம்.  இரவிக்கை வாங்கலாம்.  புத்தகம் வாங்கலாம்.  பெற்றோருக்கென ஏதாவது கொடுக்கலாம்.  உடன் பிறந்தோருக்கும் உதவ நினைக்கலாம். மாதாமாதம் சம்பளம் கிட்டினும், அதன் மீதான ஆளுமை இல்லாது நிற்பது, இனம் புரியாத வெறுப்பில் கொண்டு வைக்கும். ஒவ்வொன்றுக்கும் தன் கணவனை எதிர்பார்த்து அவன் தலையசைப்பிற்காக காத்துக்கிடப்பது அரை மனுஷி போலான நிலையில் நிறுத்தும். 

இன்னுமொரு பெண்ணின் கதை இன்னமும் பொருத்தம். அரசு பணியில் அவருக்கும் அதிக சம்பளம். அனைத்தும் அவரது அதிகார கணவரின் வசம். பேருந்துக்கான மாத பணத்தை மொத்தமாக அவரிடம் கணவர்தான் தருவாராம். ஒருநாள் அதிக நேரமாகி இருட்டியும் விட்டதால் ஆட்டோ பிடித்து இவர் வீடு திரும்பியிருக்கிறார். "கூடுதல் பணம் இருப்பதால்தானே ஆட்டோவில் வருகிறாய்'' என கோபம் கொண்டு கணவர் காசைக் குறைத்து விட்டார்.  அன்றைய பேருந்து கட்டணம் அன்றன்றைக்கு தந்து வந்தார். மற்றொரு நாளில் மாநகர் முழுக்க மழை வெள்ளம். வழக்கம்போல் பேருந்துக்கு காத்திருக்கிறார் இப்பெண். போக்குவரத்து தடைபட்டதால் பேருந்துகள் வரவில்லை. 

பக்கத்தில் நின்ற பெண்கள் ஆட்டோக்களில் கிளம்பினர். இப்பெண்ணை அழைத்தும் அவர் அங்கிருந்து கிளம்பவில்லை. கைநிறைய சம்பாதித்தும் முடிவெடுக்க முடியவில்லை. நேரங்கடந்தும் மனைவி வராததால் ஆதிக்கபுத்தி கணவர் தேடி வந்திருக்கிறார். ஆட்டோவில் வர தன்னிடம் காசில்லை என்றும் வந்துவிட்டு காசு கேட்டால் திட்டு விழும் என்பதால் பேருந்தை எதிர்பார்த்து நின்றிருந்ததாகச் சொன்னாராம். சமமாக நடத்தாத அந்த பணச்சுரண்டியோடு சேர்ந்தே வாழ்ந்தாலும் அங்கே அன்புக்கு வறுமையே.

நிதி நிர்வாகம் தனக்குதான் நன்றாக வருமென்றும் இதிலே மனைவிக்கு தேர்ந்த அனுபவம் இல்லையென்றும் தாமே நினைத்துக் கொண்டு அவளை இருட்டில் வைக்கிறார்கள். நாளை  நடப்பது யாருக்கும் தெரிவதில்லை. அவளுக்கு முன்னதாக இவ்வுலகை இவர் நீங்கிச் சென்றுவிட்டால், திடீரென்று சமாளிக்க அவளுக்கு பயிற்சியுமில்லை. மனைவியின் வருமானத்தை அவள் ஆளுமைக்கே விட்டு குடும்பத்தின் தேவைகளை வகை பிரித்துக் கொண்டு சிலவற்றை அவளிடம் பொறுப்பாக மாற்றி   அவளே நிர்வகிக்க கேட்டுக் கொள்வது பரஸ்பர நம்பிக்கையோடு திருப்தியையும் கொண்டு வரும்  பாலின ரீதியான வேறுபாட்டை களைந்துவிடும். 

தன் வருமானம் எதையுமே வீட்டிற்கு காட்டாமல், அனைத்துக்கும் கணவனை அழுத்தியே நிற்கும் பெண்களும் இங்கே நம் சமூகத்தில் உண்டு. இவர்கள் சுயநலம் கொண்ட கணக்கீட்டாளர்கள்  சமத்துவ முரணை எதிர்த்திசையில் வளர்ப்பவர்கள். பொருளாதார அதிகாரத்தை மனைவிக்கு தராதவர் அன்பால் குளிப்பாட்டினும் அவநம்பிக்கை மிக்கவர். அவள் பெறும் சம்பளத்தை அவளிடமே மறைப்பவர் அவள் அன்பை விடவும் பணத்தை மதிப்பவர். பொருளாதார சுதந்திரத்தை பெண்ணிடமிருந்து பறித்ததே உலகில் தோன்றிய முதல் வர்க்க முரணாகும். வர்க்க முரண்பாடுகளை களையும் முயற்சியில் பெண் உழைப்பைச் சுரண்டுவதையும் கவனமாய் களைய வேண்டும். அது கணவனே ஆனாலும் அவளுக்கு நியாயம் வேண்டும். 

சம கல்வி தந்து, சம வேலை தந்து, சமமான வகையில் ஊதியமும் தந்து, அந்த ஊதியத்தை அவளின் கண்ணில் காட்டாது மறைப்பது சமத்துவ பெண்ணியத்தை கனவாக மாற்றிவிடும். நிதி குறித்த பொறுப்புகளை மகிழ்வுடன் பகிர்ந்து, பெண்ணும் நிர்வகிக்க வாய்ப்புகள் தருவது அவளை நிறைமனம் கொண்ட திருமகளாக்கும்.
படம்: ப. ராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com