விழுப்புரத்திலிருந்து வியட்நாம்வரை!

சமீபத்தில்  வியட்நாமில் நடந்த  "5வது ஏசியன் பீச் கேம்ஸ்'  விளையாட்டுப் போட்டிகளில் பீச் கபடி போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்று வந்துள்ள தமிழக வீராங்கனை
விழுப்புரத்திலிருந்து வியட்நாம்வரை!

சமீபத்தில்  வியட்நாமில் நடந்த  "5வது ஏசியன் பீச் கேம்ஸ்'  விளையாட்டுப் போட்டிகளில் பீச் கபடி போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்று வந்துள்ள தமிழக வீராங்கனை அந்தோனியம்மாள் அவரைச் சந்தித்தோம்:

"விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோழவாண்டிபுரம்தான் எனது சொந்த ஊர்.  முதுகலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். என் அப்பா சௌரிமுத்து பால் வியாபாரி. அம்மா கூலி வேலை செய்பவர். ஒரு அக்காவும், இரண்டு தம்பிகளும் இருக்கின்றனர்.  நான் சிறுவயதாக இருக்கும்போது என் அப்பா கிராமத்து நண்பர்களுடன் சேர்ந்து கபடி விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போதிலிருந்தே எனக்கு கபடி மீது ஒரு ஈர்ப்பு. இதனால், ஆறாவது படிக்கும் போதிலிருந்து கபடி விளையாட தொடங்கினேன். பல்வேறு போட்டிகளில் கலந்து நிறைய பதக்கங்களையும் வாங்கியிருக்கிறேன்.

பனிரெண்டாவது படிக்கும்போது தமிழ்நாடு சார்பில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அங்கே ஜனார்தனன், தேவா என்ற இரு கோச் வந்திருந்தார்கள். அவர்கள் அங்கே நன்றாக விளையாடும் வீரர், வீராங்கனைகளின் பெயர்களை எழுதி சென்றனர். நான் பன்னிரெண்டாவது முடித்தவுடன். அந்த கோச் இருவரும் எங்களது வீட்டிற்கே வந்து பேசினர், இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மதுரை யாதவா கல்லூரி  இலவச அனுமதி கொடுப்பதாகவும், அவர்களுக்கு தேவையான விளையாட்டுப் பயிற்சிகளை அளிப்பதாகவும் அதனால் என்னை அங்கு சேர்த்துவிடும்படியும் கூறினர். 

பொதுவாக கிராமப்புறங்களில் பெண் பிள்ளைகளைப் படிக்க வைப்பதே பெரிய விஷயம். என் அப்பாவும் நான் ப்ளஸ் டூ முடித்ததும் திருமணம் செய்துவிட எண்ணினார். கோச் கொடுத்த நம்பிகையிலும், என்னுடைய ஆர்வத்திற்காகவும் கல்லூரியில் சேர்த்துவிட்டார். 

அதுவரை, நான் வழக்கமான கபடிதான் விளையாடி வந்தேன். அதன்பிறகுதான் பீச் கபடி  எப்படி விளையாட வேண்டும் என்பதை கோச் சொல்லிக் கொடுத்தார். 
வழக்கமான கபடிக்கும், பீச் கபடிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பீச் கபடியை பொருத்தவரை கடற்கரையில் உள்ள மணற்பரப்பில்தான் விளையாட வேண்டும். கடற்கரை மணலில் காலை ஊன்றி நடப்பதே சிரமம். இதில்  கபடி விளையாடுவது என்பது அவ்வளவு சுலபமல்ல.  காலில் நிறைய அழுத்தம் கொடுத்து விளையாட வேண்டும். நிறைய ஸ்டாமினா வேண்டும். 

வழக்கமான கபடியில் 12 பேர் விளையாடுவார்கள். 7 பேர் மெயின், 5 பேர் சப்ஸ்டிடியூட். ஏறு கோட்டில் ஏறிவிட்டு யாரையும் தொடாமலும் வரலாம்.  ஆனால், பீச் கபடியில் மொத்தமே ஆறு பேர்தான் விளையாட முடியும். 4பேர் மெயின், 2பேர் சப்ஸ்டிடியூட். ஒவ்வொருவருக்கும் 30 விநாடிகள் கொடுப்பார்கள். அதற்குள் நிச்சயம் யாரையாவது தொட்டுவிட்டு வரவேண்டும். அப்படி தொடவில்லை என்றால்  எதிராளிக்கு பாயின்ட் போய்விடும். அத்தனை சிரமமான விளையாட்டு. மதுரையில் கடற்கரை கிடையாது என்பதால்  எங்கள் கோச் நிறைய மணலை வாங்கி வந்து கொட்டி கடற்கரையைப் போன்று உருவாக்கி அதில்தான் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். அவர்கள் இல்லை என்றால் இன்று இந்த வெற்றி சாத்தியமில்லை. அவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகதான் இதை  கருதுகிறேன். 

கபடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. ஆனால் தற்போது ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில்தான் கபடி விளையாட்டு முதன்மையாக இருக்கிறது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து வியட்நாமுக்கு ஆறு பேர் சென்றிருந்தோம். ஆந்திரா 2, ஹரியானா 2, கொல்கத்தாவில் இருந்து ஒருவர், தமிழகத்தில் இருந்து நான். இந்தியாவிற்காக தங்கம் வென்று வந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 

சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனைதான் எனது ரோல் மாடலாக நினைக்கிறேன்.  ஏழ்மை நிலையில் இருந்த தமிழன் ஒருவர் வென்றிருந்தது எனக்குப் பெரிய உத்வேகமாக இருந்தது.  இன்னும் நிறையச் சாதிக்க வேண்டும். அதற்கான பயிற்சிகள் பெற விசாகபட்டினமோ அல்லது மும்பையோ செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால், அதற்கு போதுமான வசதி என்னிடம் இல்லாததால் பயிற்சி பெறுவது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாடு மாநில விளையாட்டு அமைச்சகத்தின் பொது செயலாளர் சபீர்உலா அவர்கள் செய்த உதவியினால்  இது வரை வந்துவிட்டேன். அவருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபகாலமாக தமிழக அரசு, விளையாட்டு வீரர்களுக்கு அளித்து வரும் ஊக்கமும், உதவியும்தான் என்னைப் போன்ற விளையாட்டு வீரர்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.  அந்த ஊக்கமும், உதவியும் கபடி விளையாட்டுக்கும் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும். ஏன்னென்றால் மற்ற விளையாட்டுகளில் வெற்றி பெறுவோருக்கு அரசு வேலையும், விளையாட்டுக்கான பயிற்சி பெற ஊக்கத் தொகையும் கிடைக்கிறது. ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கபடி விளையாடுவோருக்கு அது கிடைப்   பதில்லை. அந்த நிலை மாறி எங்களுக்கும் தமிழக அரசின் விளையாட்டு வீரர்களுக்கான உதவிதிட்டத்தின் கீழ் வேலையும், உதவியும் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும். 

ஏனென்றால், தற்போது என்னோடு விளையாடியவர்களில் என்னை தவிர, மற்ற 5 பேரும் ரயில்வே ஊழியர்கள்.  ஹரியானா வீராங்கனைகளுக்கு ஹரியானா அரசு நான்கு கோடி ரூபாய் ஊக்கத் தொகையும் அறிவித்திருக்கிறது. 
- ஸ்ரீதேவி குமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com