கவசம் ஆகும் கண்ணிய ஆடை - பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.

உடலை மறைக்கும் உடையானது உள்ளத்தை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் உள்ளது. ஒருவரது தனிப்பட்ட ரசனைகள் என்ன என்பதற்கு
கவசம் ஆகும் கண்ணிய ஆடை - பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.

உடலை மறைக்கும் உடையானது உள்ளத்தை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் உள்ளது. ஒருவரது தனிப்பட்ட ரசனைகள் என்ன என்பதற்கு அவரது ஆடையே விடையாய் அமைந்து விடுகிறது. விருப்பத்திற்கு ஏற்ற உடையணிந்து இருக்கையில் திருப்தியுடனான மனநிலையோடு உற்சாக உணர்வும் ஒட்டிக்கொள்கிறது. பிடிக்காத உடையில் இருந்துவிட நேர்ந்தால் அரை மனிதர்போல் நினைந்து கொள்வதோடு அமைதியின்மையும் ஆளுமை செய்கிறது. இந்த நிறை உணர்வும் குறை உணர்வும் பெண்களுக்கு சற்று அதிகம்தான் எனலாம். 

ஆடையின் மீதான ஈடுபாடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாகுபாடே இல்லை. கல்வி மற்றும் பணியின் நிமித்தமாக பெண்கள் சமூகத்தோடு கலந்து பழகும்போது, ஆடை அவர்களின் கவசமாக இருக்க வேண்டும். அழகாகத் தோன்றுவதில் ஆர்வம் கொள்ளும்போது கண்ணியமாகத் தோன்றுவதிலும் கவனம் கொள்ள வேண்டும். கவனக் குறைவால், பொது இடங்களில் உடை சார்ந்து நிகழும் கண்ணிய குறைவுகள் கால காலத்துக்கும் மறக்கப்படுவதில்லை. 

ஒரு கல்லூரி விழாவில் இச்சம்பவம் நடந்ததாக சிறுவயதில் எங்களுக்கு சொல்லப்பட்டது. நகரத்திலேயே மிகப்பெரிய செல்வந்தரும், கூடவே அவரது சீமாட்டி மனைவியும், ஆண்கள் மட்டுமே பயிலும் ஒரு கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விலை உயர்ந்ததொரு பகட்டுச் சேலையில், தங்க நகைகள் அங்கத்தில் மின்ன பார்ப்போர் கண்கள் அகல மறுக்கும் வகையில் சீமாட்டி அவ்விழாவிற்கு வந்திருந்தாராம். படிப்பில் சாதித்த மாணவர்களுக்கு அப்பெண் தன் கையால் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தாராம். அதுவரை எல்லாம் நன்றாகவே நடந்தது. விழா நிறைவடையும் நேரமும் வந்தது  தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது சீமாட்டி உட்பட அனைவரும் எழுந்தனர். மாணவர்களும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கையில் செல்வச் சீமாட்டியின் சேலைத்தலைப்பு மட்டும் மரியாதை மறந்து இறங்கி நழுவியது. இத்தனை நகைகள் போட்டிருந்த அச்சீமாட்டி தோள்பக்கம் சட்டையோடு சேலையை இணைத்து ஒரு முள்கொக்கி (Pin) போட மறந்திருக்கிறார். தேசிய கீதத்திற்கு  மதிப்பளிக்கும் விதத்தில் அசையாமல் எதிர்திசை பார்த்து நின்ற அவருக்கு தலைப்பு நழுவியது தெரிய வரவில்லை. மாணவர்கள் ஓவென குரல் கொடுத்துள்ளனர். கீதம் முடிந்து சகஜம் ஆகும்போதுதான், ஆடை சரிசெய்து நகர்ந்தாராம் சீமாட்டி. இந்த சம்பவத்தை எங்களுக்குச் சொல்லி புடவைக்கு சரியான முள்கொக்கி இடாமல் வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் எங்களின் தாயார். நாற்பது வருடங்களுக்கு முன் நடந்ததான இச்சம்பவம் இன்றும் நினைவில் நின்று உஷார்படுத்துகிறது. சீமாட்டிப் பெண்ணின் சிறு கவனமின்மை, அவரின் கண்ணியம் குறைப்பதாக அமைந்தது துரதிர்ஷ்டம். 

ஆடையின் வகைகளிலும் வடிவமைப்புகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருவதை கடந்த இருபது வருடங்களில் கண்கூடாகக் காண்கிறோம். பதின்மர் வயதுப் பெண்கள் அன்று, பாவாடை தாவணியில் உலா வந்த நாட்களில் ஒன்றிரண்டு பேர்தான் சுடிதார் அணிவர். வசதியுடனான இந்திய உடை என்பதால் அது வழக்க உடையாக மாறியும் விட்டது. உடல் தெரிய உடுத்தப்படும் தாவணி, சேலையை விட உடல் மறைக்கும் உபகாரத்தால் வரவேற்பும் பெறுகிறது. 

பதின்மர் பருவத்தினரும் இருபதின் வயதினரும் என்ன உடுத்தினாலும் அழகாக இருப்பது இயற்கையாகவே அவர்களுக்கு இளமை தரும் பரிசு. முப்பதைக் கடக்கும் பேரிளம் பெண்கள் தங்களின் தோற்றம் மற்றும் வயதினைப் பொறுத்து, உடைகளை உடுத்துதலே பெருமை சேர்க்கும். இளம் பெண்களுக்கான உடைகளை இவர்கள் அணிந்து, இளமைக்காலம் விட்டு வெளிவர மறுப்பது கேலிக்குரியதாகவும் ஆகி விடலாம். பருவம் பொருந்தாது உடை உடுத்தும் பெண்களை இளக்காரமாக ஆங்கில மொழியில்  "ஆட்டுக்கறி ஆட்டுக்குட்டிபோல் ஆடையிட்டுக் கொண்டது' (Mutton dressed as lamb) என்பர். உயிரற்ற சதைப்பிண்டம் அழகுபடுத்த முயல்கிறது என இதுபோன்ற செயல்கள் நகைக்கப்படுகின்றன. எனவே, அந்தந்த வயதிற்கேற்ற அவரவர் உருவத்திற்கேற்ற உடைகளைத் தேர்வு செய்து உடுத்துதல் வேண்டும். 

பெண்களுக்கான செளகரிய உடைகளில் வெளியிடங்கள் சென்றால் ஜீன்ஸ், லெக்கின்ஸ் என்றும் வீட்டில் இருந்தால் இரவு உடை (Nighty) என்றும் ஆடை கலாசாரம் அடுத்த கட்டம் நகர்ந்துள்ளது. ஆடையில் சுதந்திரம் வேண்டுமென்றாலும் உடல் மறைக்கும் நோக்கத்தை நிறைவேற்றித் தருவதும் பாதுகாப்பு தரவேண்டிய பயன்பாடும் முக்கியம். 

சமீபத்தில் குடும்பத்தோடு காஷ்மீர் சென்றிருந்தோம். பனிமலை அமைந்த ஓர் ஊருக்கு சென்று, பனியை சமாளிக்கும் முன்னேற்பாடுகள் செய்து மலை ஏற எங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தோம். மலையேறி முடித்து மகிழ்ச்சி முகங்களோடு ஆண்களும் பெண்களுமாக திரும்பிக் கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் ஒருவராக வந்து கொண்டிருந்த ஜீன்ஸும் இடுப்பளவே மேல்சட்டையும் அணிந்த, இருபதைத் தாண்டிய இளம்பெண் ஒருவர், கால் தடுக்கி முன்பக்கமாக சரிந்து விழுந்தார். அவரது ஜீன்úஸô சாண் அளவு கீழே இறங்கி பின்பக்கத்தில் பாதி நிலைக்கு வந்துவிட்டது. அனைவரின் கண்களும் அவர் மீது விழுந்தது. அவருடன் வந்திருந்த கணவரோ காதலரோ அவரை கைபிடித்து தூக்கி நிறுத்தி விட முயன்றார். நழுவிய உடையை சரி செய்ய மறந்து, அப்பெண்  பரிதாபம் தேடுவதில் கவனம் கொண்டிருந்தார். தன்னைத் தூக்கிவிட வேண்டுமென்று எதிர்பார்த்துக்கொண்டு ஒருசில விநாடிகள் அப்படியே இருந்தார். இதைக்கண்ட அனைவரும் முகம் சுழித்து திரும்பினர். கூட வந்தவர் கை பிடித்து தூக்கிய பின் கீழிறங்கிய ஜீன்ûஸ சரி செய்துகொண்டு ஒன்றும் நடவாததுபோல் நடந்து சென்றார். உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேயெனும் பொய்யாமொழி அங்கே பொய்த்துப்போய் நின்றது. பாதுகாப்பாக அணியப்படாத அந்த ஜீன்ஸ்,  மானத்தை அனைவருக்கும் பந்தி வைத்தது. வசதியோடு  பாதுகாப்பும் கவனிக்கப்பட வேண்டும் என்பதை இச்சம்பவம் யாவர்க்கும் நன்கு உணர்த்தியது. 

பல்வகைப்பட்ட மாந்தர்களின் கண்களும் பொது இடங்களில் படும் என்பதால் உடல் அமைப்பை, வனப்பை வெளிப்படுத்தா வண்ணம் உடைகள் வடிவமைக்கப்பட்டு வந்த வழக்கினுக்கு லெக்கின்ஸ் உடை சவால் விட்டுக் கொண்டுள்ளது.  உடலோடு ஒட்டியமையும் வகையிலான இவ்வுடை, இறுக்கமாய், கவ்வியதாய் அணியப்படும் நேரங்களில், உடையே அணியப்படாத வண்ணக்கால்களாக தோற்றம் தந்துவிடுவதை மறுக்கவும் இயலாது. மெல்லிய தேகத்தினரை சகித்துக் கொள்ளலாம்.  உடல் பருமன் கொண்டோர் இதை உடுத்திக் கொள்வது கொஞ்சம் சங்கடம் தோய்ந்ததாகவே காணக்கிடைக்கிறது. வசதிக்காகவே இவை உடுத்தப்பட்டாலும், முட்டிவரை மறைக்கும் மேலாடைகள் அணிவது வெறிப்பார்வைகள் விடுக்கும் உறுத்தலை தவிர்க்கும். 
வீட்டுக்குள்ளேயே முன்பு பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையிலும், இருபத்து நான்கு மணிநேரமும் புடவையில் இருக்க வேண்டுமென்ற அடிமை முறையை அடக்கிவிட்ட பெருமை இரவு உடைகளுக்கு (Nighty) நிச்சயமாய் உண்டு. ஆனால் இரவு உடையோடு தெருக்களில் இறங்கி குடும்பத் தலைவியாக உணர வைக்க முயன்றால், அது வெளிப்படையான விகடப் போக்கு. ஒரு துப்பட்டா மட்டும் எடுத்துப் போட்டு இருசக்கர வாகனங்களின் பின் அமர்ந்து கொண்டு இரவு உடைகளில் பயணிப்போரைப் பார்க்கையில், நீங்கள் அத்துணை சோம்பேறியா என கேட்கத் தோன்றும். 

நமது கலாசார உடையான சேலையே கூட கண்ணியமாகவே உடுத்தப்பட வேண்டும்.  உள்ளாடை வெளித்தெரியும் இரவிக்கைகளும், பார்வை ஊடுருவும் வகையிலான சேலைகளும், கண்காட்சி நடத்தும் மனோநிலையே.  வலப்பக்கம் முழுவதும் மறைத்துக் கொண்டு, இடப்பக்கம் வெளித் தெரிவதில் கவனமின்றி இருப்பது புடவைக்கு செய்யப்படும் அதர்மம் எனலாம்.  ஒரு சில நல்ல குணம் வாய்ந்த பெண்களே கூட ஆடை விஷயத்தில்  வெகுளித்தனமாகவும் அணிவதில்  சற்றே கவன குறைவாகவும் இருந்து உற்று நோக்கல்களுக்கு உள்ளாவதைப் பார்க்கலாம். இடப்பக்கத்தில் வரும் இரண்டாம் மடிப்பை சட்டையோடு சேர்த்து முள்கொக்கி இடுவது, உடுத்தும் புடவையை கவசமாக ஆக்கித் தரும். 

உடலில் உள்ளுறையும் பிம்பத்தின் ரூபத்தை அமைதியாக வெளிப்படுத்தும்   ஆடையில் அழகாகத் தோன்றுவது  மட்டுமல்லாமல் மரியாதையாகவும் தெரிய வைத்துக் கொள்வது அனைவருக்குமான சமூக பொறுப்பாக உள்ளது.  இதில்  பெண் குழந்தைகளுக்கு தாய்தான் முன்மாதிரி (Model) ஆகிறாள். வகுப்பறையில் ஆசிரியைகளும் மாதிரிகளாகத் தொடர்கிறார்கள். ஆடை விஷயத்தில் கண்ணியம் கடைப்பிடித்து அதையே நமது அடுத்த தலைமுறைக்கும் கடத்துவோம்.  அழகுணர்வோடு பெண்மையின் கண்ணியமும் காப்போம்.. 
படம்: ப. ராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com