கர்ப்பிணியாக நடிப்பது சவால்: அக்‌ஷரா ஹாசன்

கமல்ஹாசன் போல்தான், அவரின் இளைய மகள் அக்ஷராஹாசன். எந்த கேள்விக்கும் பதில் இருக்கிறது.
கர்ப்பிணியாக நடிப்பது சவால்: அக்‌ஷரா ஹாசன்

கமல்ஹாசன் போல்தான், அவரின் இளைய மகள் அக்ஷராஹாசன். எந்த கேள்விக்கும் பதில் இருக்கிறது... அப்பாவின் சர்ச்சை கருத்துக்கள், அஜித் படம், ஸ்ருதிஹாசன் என கேட்பதற்கும் நிறைய இருக்கிறது. திடீரென்று நிகழ்ந்த சந்திப்பிலிருந்து....

மகாபாரதம் குறித்து கமல் சொன்ன கருத்து சர்ச்சையாகியுள்ளதே?

நிறைய பேர் இதைத்தான் கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். இது அவருக்கு புதிதல்ல. அவருக்கு எதிலும் ஒரு தெளிவு உண்டு. அப்படியான கருத்துதான் இதுவும். இதில் நான் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது. அப்பாதான் இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். நான் கருத்து சொல்லுவது சரியாக இருக்காது. அப்பாவிடம் பேசுங்கள்.

யாரும் எதிர்பாரா வகையில் "விவேகம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறீர்கள்?

நானே எதிர்பார்க்காத போது அமைந்த படம் இது. அஜித்... அஜித்.... என்று பெருமையாக பேசுவது சரியான ஒன்று. அஜித் ஒரு ஜென்டில்மேன். அவருக்கு எல்லாவற்றையும் பற்றி ஒரு கருத்து இருக்கிறது. அவரிடம் பேசும் போதுதான் அது தெரிகிறது. அஜித் உண்மையிலேயே வித்தியாசமான மனிதர். அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு பெருமையான விஷயம். 

"சபாஷ் நாயுடு' படத்தில் கமலுடன் ஸ்ருதி இணைந்து நடிக்கிறார்... உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தால்?

வாய்ப்பு வந்தால், யார் வேண்டாம் என்று சொல்லுவார்கள். அப்படியான ஒரு சினிமா தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இதற்கு அப்பாவும் ஒப்புதல் தர வேண்டும். "சபாஷ் நாயுடு' அப்பாவின் சினிமா பயணத்தில் முக்கியமானதாக இருக்கும். அந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு அப்பா வாய்ப்பு தந்துள்ளார். எனக்கு தராதது பற்றி என்ன சொல்லுவது?

பாலிவுட் படத்துக்காக கர்ப்பிணி வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வருகின்றன?

உண்மைதான். இதைப் பற்றி நான் அதிகம் பேசக் கூடாது. இயக்குநர்தான் பேச வேண்டும். கர்ப்பிணியாக நடிப்பது உண்மைதான். இது மிக சவாலாக இருக்கிறது. இந்த இளம் வயதில் இப்படியொரு வேடம் என்பது கடினம். அதை புரிந்து கொண்டு நடிப்பதில் மிக ஆர்வமாக இருக்கிறேன்.

சினிமா இயக்குவதுதான் உங்களின் இலக்காக இருந்திருக்கும்... இப்போது முழு நேர   நடிகையாக மாறி விட்டீர்கள்?

இயக்குநர் என்பதுதான் என் இலக்கு. அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. ஸ்ருதிக்கும் இசையமைப்பாளர் ஆவதுதான் லட்சியமாக இருந்தது. ஆனால் அவர் இன்றைக்கு பிஸியான நடிகையாகி விட்டார். அக்காவும் நானும், இலக்கை நோக்கி விரைவில் திரும்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com