சங்கீதமே வாழ்க்கையாக வேண்டும்! வைக்கம் விஜயலட்சுமி

"வீர சிவாஜி' படத்தில் "சொப்பன சுந்தரி நான் தானே...' என வித்தியாசமாகப் பாடி இளசுகளைக் கிறங்க வைத்தவர் மாற்றுத்திறனாளி வைக்கம் விஜயலட்சுமி. இவரின்  சுவாசமே  சங்கீதம்தான்.
சங்கீதமே வாழ்க்கையாக வேண்டும்! வைக்கம் விஜயலட்சுமி

"வீர சிவாஜி' படத்தில் "சொப்பன சுந்தரி நான் தானே...' என வித்தியாசமாகப் பாடி இளசுகளைக் கிறங்க வைத்தவர் மாற்றுத்திறனாளி வைக்கம் விஜயலட்சுமி. இவரின் சுவாசமே சங்கீதம்தான்.

"திருமணத்திற்குப் பின் பாட வேண்டாம்.. வேண்டுமென்றால் சங்கீதம் சொல்லித்தரும் ஆசிரியையாக வேலை செய்யட்டும்.. என்று திருமண நிச்சயம் முடிந்த கொஞ்ச நாளில் வருங்காலக் கணவர் அதிரடியாகக் கூறியதால் அதிர்ந்து போனார் விஜயலட்சுமி. திருமணத்திற்குப் பிறகு பாடக் கூடாதா? நான் என் காயத்திரி வீணையை எப்படி மீட்டாமல் இருக்க முடியும்? ஸ்வரம் சேர்த்து பாடாமல் எப்படி என்னால் இருக்க முடியும்? திருமணம் சுமையாக மாறினால் அதை ஏன் வாழ்நாள் எல்லாம் சுமக்க வேண்டும்? அந்தத் திருமணத்தையே விலக்கி விட்டால்...? இப்படித்தான் யோசித்தேன்'' என்கிறார் விஜயலட்சுமி. முடிவில், திருமணமே வேண்டாம் என்று அதிரடியாக தீர்மானித்து, கடந்த மாதம் (2017 மார்ச்) நடக்க இருந்த தனது திருமணத்தை தானே நிறுத்திவிட்டார். வைக்கம் விஜயலட்சுமிக்கு பிறவியிலேயே கண் பார்வை குறைபாடு உள்ளது. ஆனால், அதே மார்ச் மாதத்தில் இவர், இசையுலகில் ஒரு சாதனை படைத்திருக்கிறார். கொச்சி நகரில் மார்ச் 5-ஆம் தேதி நடந்த இசை நிகழ்ச்சியில், காயத்திரி வீணையில் அறுபத்தேழு பாடல்களை இடைவிடாது தொடர்ந்து ஐந்து மணி நேரம் இசைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இவருக்கு முன்பு பார்வை திறனற்ற மாற்றுதிறனாளி ஒருவர் ஐம்பத்தியொரு பாடல்களை, ஒரே அமர்வில் வீணையில் இசைத்து சாதனை படைத்திருந்ததை விஜயலட்சுமி முறியடித்திருக்கிறார்.

வைக்கம் விஜயலட்சுமி தனது நேற்று, இன்று நாளையைப் பகிர்ந்து கொள்கிறார்:

"கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாட்டினை எதிர்த்து, பெரியார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வைக்கம்தான் எனது ஊர். 1981 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜயதசமி நாளில் நான் பிறந்தேன். அதனால் எனக்கு விஜயலட்சுமி என்று பேர் வச்சாங்க. அப்பா முரளீதரன், அம்மா விமலா.

அப்பா சென்னையில் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதனால் எனது ஐந்து வயது வரை சென்னையில்தான் வசித்தோம். "சிந்து பைரவி' படம் வெளியான சமயம். அந்தப் படத்தில் வரும் பாட்டுகளைக் கேட்டு அதே மாதிரி பாடிக் கொண்டிருப்பேன். பாடுவதில் எனக்கு விருப்பம் இருப்பதை உணர்ந்த பெற்றோர் இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன் இசை அமைத்த பாடல்களை வாங்கி வந்தார்கள். அந்தப் பாடல்கள் கேட்டு கேட்டு நானும் நன்றாகவே பாட ஆரம்பித்தேன். வானொலியில் வரும் பழைய பாடல்களையும் விட மாட்டேன். பாடகர் ஜேசுதாஸ் பாடல் கேசட்டுகளை அப்பா வாங்கிக் குவித்தார். அவர் பாடல்களால் கவரப்பட்டு அவரையே மானசீக குருவாக ஆக்கிக் கொண்டேன்.

முறையாக சங்கீதம் பயின்றிருக்கிறேன். பத்தாம் வகுப்பு படிக்கிற போதுதான் காயத்திரி வீணையை மீட்டத் தொடங்கினேன். வீணை வாசிப்பில் அரங்கேற்றம் வைக்கம் கோவிலில் நடந்தது. அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் வந்திருந்தார். அவர்தான் நான் இசைத்த வீணைக்கு "காயத்திரி வீணை' என்று பெயரிட்டார். பொதுவாக வீணையில் நாதம் எழுப்ப ஏழு கம்பிகள் இருக்கும். காயத்ரி வீணையில் ஒரே ஒரு கம்பிதான் இருக்கும்.

பி.ஏ. வரலாறு படிச்சேன். பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது எப்போதும் டேப் ரெக்கார்டர் கொண்டு போவது வழக்கம். வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை ரெக்கார்ட் செய்து, வீட்டில் அதை போட்டுக் கேட்டு நினைவில் ஏற்றிக் கொள்வேன். தற்போது எம்.ஏ. சங்கீதம் பயின்று வருகிறேன்.

மலையாள பட இயக்குநர் கமல், மலையாள சினிமாவின் பீஷ்மர் என மதிக்கப்படும் சி.ஜே.டேனியலின் வாழ்க்கையை, திரைப்படமாக "செல்லுலாய்ட்' என்ற பெயரில் தயாரிப்பதாகவும் அதில் அந்தக்கால ஸ்டைலில் பாட்டு பாடப் பாடகி தேவை. விஜயலட்சுமி பாட முடியுமா? என்று என்னிடம் கேட்டார். பொங்கும் பரவசத்துடன் பாட ஒத்துக் கொண்டேன். சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்குமா? என்று கனவு கண்டதுண்டு. ஆனால் வாய்ப்பு தானாக வரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அந்தப் படத்தில் "காற்றே காற்றே...' என்ற பாட்டைப் பாடினேன். இந்தப் பாடல் கேரளத்தில் சூப்பர் ஹிட்டாகி... கேரள அரசின் விருதினையும் பெற்றுத்தந்தது. இதே பாடலைத் தமிழில் "காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன...' என்று பாடி தமிழ் மக்களின் மனங்களையும் வென்றேன்.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் அறுபதுக்கும் அதிகமாக பாட வாய்ப்பு கிடைத்தது. பாகுபலியில் "யாரிவன் யாரிவன்...' பாடலின் தெலுங்கு மூலப் பாடலையும் நான்தான் பாடினேன். சாஸ்திரீய சங்கீதம் படித்திருப்பதால் மொழிகள் வேறுபட்டாலும், சிரமமாகத் தெரியவில்லை. இப்போது பக்தி பாடல்களும் பாடுறேன். ஐரோப்பா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகள் போய் கச்சேரி நடத்தியிருக்கேன். அடுத்து அமெரிக்கா போகப் போறேன்.

"ஏழு தேசங்களுக்கு அகலே' என்ற மலையாள படத்தில் ஒரு ஆதிவாசியின் மகளாக நடித்தேன். பட டைரக்டர் குட்டிப்புறம் ரஷீத் நான்தான் நடிக்கணும்னு நடிக்க வைச்சார்.

எனக்கு மிமிக்ரியும் வரும். "வீரசிவாஜி'யில், "சொப்பன சுந்தரி நான் தானே...' பாடல் பாடுறதுக்கு இசை அமைப்பாளர் டி. இமான் சார் நல்லா பயிற்சி கொடுத்தார். பாட்டும் சூப்பர் ஹிட்டாச்சு. இளையராஜா சார், ரஹ்மான் சார், வித்யாசாகர் சார் இசையில பாடணும். சங்கீதமே வாழ்க்கையாக வேண்டும்.

- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com