25 வயதுக்குள் 10 நாவல்கள் எழுதி பதிப்புலகில் ஹிட் அடித்த நிகிதா சிங்!

நிகிதாவிற்கு  வயது இருபத்தைந்து ஆகிறது. இன்று  பத்து நாவல்களுக்குச் சொந்தக்காரர்.  
25 வயதுக்குள் 10 நாவல்கள் எழுதி பதிப்புலகில் ஹிட் அடித்த நிகிதா சிங்!

நிகிதாவிற்கு  வயது இருபத்தைந்து ஆகிறது. இன்று  பத்து நாவல்களுக்குச் சொந்தக்காரர்.  லேட்டஸ்ட்  அதாவது பத்தாவது நாவல், Every Time It Rains.  நிகிதா நாவல்களின் ஒவ்வொரு பதிப்பும் இருபதாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் பிரதிகள் வரை விற்பனையாகியுள்ளன.  நாவல்  அறிமுகத்திற்காக  சமீபத்தில்  நிகிதா  கொச்சி   வந்திருந்தார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"முதல் முதலில்  பொழுதுபோக்கிற்காக  நான் ஹாரிபாட்டர்  தொடர்களை வாசிக்க ஆரம்பித்தேன்.  அப்போது எனக்கு வயது பதினேழு.  கொஞ்ச நாளில் நானும்  ஒரு நாவலை எழுதி முடித்தேன். சகோதரிக்கு வாசிக்கக் கொடுத்தேன்...  கொஞ்சம் வாசித்து விட்டு.. "அம்மா ஆளை விடு'' என்று  நாவலை  என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு ஓட்டம் எடுத்தாள். வலைத்தளங்களில்  பல பதிப்பகங்களின்  முகவரிகளைத் தேடி அனைத்திற்கும்  நாவலை  அனுப்பி வைத்தேன். புஸ்தக் மஹல் என்னும் பதிப்பகம் என்னைத் தொடர்பு கொண்டு அச்சிட ரெடி என்றது. சில வாரங்களில்  நாவலை வெளியிட்டது. எனக்கு சிறகுகள் முளைத்தன. அந்தச் சிறகுகளை  விரித்து  அடித்து  அடித்து எம்பி எம்பி எழுத்துலகில்  பறக்க முயற்சித்தேன்.   மனதளவில்  நிலாவைத்  தொட்டு விட்டாலும் பிரச்னைகளும் முளைத்தன..   

முதல் நாவலான Love@ facebook வெளிவந்த   சில  நாட்களில்,  பென்குவின் பதிப்பு நிறுவனம் என்னைத் தொடர்பு கொண்டது. "Love@ facebook  நாவலை நாங்கள் பிரசுரிக்கிறோம்'' என்றார்கள்.   எனக்கோ தர்ம சங்கடமாகிவிட்டது.  கடைசியில் எனது அடுத்த நாவலை எழுத ஆரம்பிக்கும் முன்பே,  வெளியிட  ஒப்பந்தம் ஆனது. எனது ரொமான்ஸ்  கதைகள்  வழக்கமான  கதைகளிலிருந்து வேறுபட்டு  நிற்குமாறு   பார்த்துக் கொண்டேன். அதனால்  எனக்கு வரவேற்பு அதிகரித்தது. 

நான் ராஞ்சியில்  பிறந்தேன்.  வளர்ந்தது பாட்னாவில்.  இதர  பெண்களைப் போன்று நானும்   கட்டுப்பெட்டியாகத்தான்   வளர்க்கப்பட்டேன். கடைகளுக்குச் செல்ல அனுமதியில்லை. அண்ணன்தான் என்னை எங்கும் அழைத்து போவார், வருவார். இருந்தாலும் அம்மா, அப்பா  மொபைலில் அழைத்து எங்கிருக்கிறாய்? என்ன செய்கிறாய்? என்று விசாரிப்பார்கள். டில்லிக்குப் போனதும்  நிலைமை கொஞ்சம் மாறியது. படிப்பிற்காக அமெரிக்கா  போனதும்  சூழ்நிலை அடியோடு மாறிவிட்டது. புதிய இடம், புதிய   சூழல் ,  புதிய  வானம், புதிய சுதந்திரம்..  புதிய சிந்தனைகள்.. என்று  என்  உலகம்  விரிந்தது.

இன்றைக்கும் எழுதுவதற்கு  பெற்றோர்  ஊக்கப் படுத்துகிறார்கள்.  இப்படியான ஊக்கம், ஒத்துழைப்பு சிறிய  நகரங்களில்   வசிக்கும்  எத்தனை பெண்களுக்கு கிடைக்கும்? இந்தியாவில்  ரொமான்ஸ் நாவல்களில்  ஆண் படைப்பாளர்களின் ஆதிக்கம் இருக்கிறது. பெண் எழுத்தாளர்களுக்கு அத்தனை வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதும் உண்மைதான்.  

இன்றைய இளைய தலைமுறைக்குப் பிடிக்கிற மாதிரி   இந்தக்  கால சூழ்நிலையில்  நாவல்  கருக்களை  அமைப்பதில்  ஆர்வம் காட்டுகிறேன்.  என் வெற்றியின் ரகசியமும் அதுதான். எனது கதைகளில்  ஆண்,  பெண் பாத்திரங்களுக்கு  சமமான முக்கியத்துவம்  தருவேன்.  ஒரு நாவலை எழுத ஆரம்பிக்கும் முன்பு   ஒரு  ஒன்பது மாதம்  கதைக்கருவை மனதுக்குள்   அசை போடுவேன்.  மனதுக்குள்  எழுதிப்  பார்ப்பேன்.  திருப்தி வந்ததும்,   இரண்டு மூன்று வாரங்களில்  எழுதி முடித்துவிடுவேன்.    

பதிப்பாளர்கள்  கதைக் கருவில்  அதிரடி  மாற்றங்களை விரும்புவதில்லை. பரவலாக  ஜனரஞ்சகமாக அமைந்து  சுமுகமான  மகிழ்ச்சி தரும் முடிவுடன் நாவல் இருக்க வேண்டும்  என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.  எனது கடைசி சில  நாவல்களில்  கதைக் களத்தை மாற்றியுள்ளேன். அது  ஒரு பதிப்பாளருக்கு பொருத்தமாக அமையவில்லை. நான் நாவலின்  களத்தை...   முடிவை.. மாற்றவில்லை.  பதிப்பகத்தை  மாற்றிக்  கொண்டேன். 

இன்று அமெரிக்காவில் வாழ்கிறேன்.  என்  காலில்  நிற்கிறேன். எழுதுகிறேன். நாவல்கள் பல வாசிக்கிறேன்.  ஜும்பா    லஹிரி,  அரவிந்த்  அடிகே எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள்.   பேஷன்   டிசைனராகவும்  பணி புரிகிறேன்.  ஒரு இதழுக்கு  படைப்பு  ஆலோசகராக இருக்கிறேன்.  வாழ்க்கை  பிஸியாகப் போய்க் கொண்டிருக்கிறது''  என்றார்.     
- அங்கவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com