அன்று பிரிகேடியர்..! இன்று வழக்குரைஞர்..!

இந்திய ராணுவத்தில் 1963 -ஆம் ஆண்டு நர்சிங் பணியில் சேர்ந்து, தனது சிறந்த சேவை மூலம், லெப்டினென்ட், கேப்டன்,
அன்று பிரிகேடியர்..! இன்று வழக்குரைஞர்..!

இந்திய ராணுவத்தில் 1963 -ஆம் ஆண்டு நர்சிங் பணியில் சேர்ந்து, தனது சிறந்த சேவை மூலம், லெப்டினென்ட், கேப்டன், மேஜர், கர்னல் என்று படிப்படியாக பதவி உயர்வு பெற்று, பெருமைமிக்க பிரிகேடியர் பதவியை அடைந்தவர்; 33 ஆண்டுகால ராணுவ சேவையிலிருந்து 1996-இல் ஓய்வு பெற்ற பின்னர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தன் 79 வயதிலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர் மற்றும் நோட்டரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர் திருமதி கே.முத்துலட்சுமி. ராணுவத்தில் பிரிகேடியர் ஆக இருந்தவர் வழக்குரைஞர் ஆனது
எப்படி..? அவரது இல்லத்தில் சந்தித்தபோது பல சுவாரசியமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.  
""என் சொந்த ஊர் பழைய நெல்லை மாவட்டம் அயன் கரிசல் குளம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்). எங்கள் கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.சி., படித்த முதல் பெண் நான்தான். ராணுவத்தில் சேர்ந்த முதல் பெண்ணும் நான்தான். எங்கள் ஊரிலிருந்து அரசு மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்றால் அருப்புக்கோட்டைக்கு வரவேண்டும். மாட்டுவண்டிதான் வாகனம். சாலை வசதிகளும் கிடையாது. எங்கள் வீட்டில் ஆறு குழந்தைகள். நான் இரண்டாவது பெண். ஐந்தாவது குழந்தையைப் பிரசவிக்கும்போது என் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்யவேண்டும் என்று அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை மருத்துவமனைக்குப் போகச்சொல்லிவிட்டார்கள். அம்மா வலியால் துடிக்கத் துடிக்க இரவு விடிய விடிய மாட்டுவண்டியிலேயே பயணித்து மதுரையை அடைந்தோம். வாழ்வா சாவா என்ற நிலையில் சீரியஸான ஆபரேஷன். மரணப் படுக்கையில் இருந்தபோது, அம்மா என்னிடம், "நீ மருத்துவம் படித்து நம் ஊருக்கு சேவை செய்ய வேண்டும்' என்று கூறினார். கடவுள் கருணையால் அம்மா
பிழைத்தார்.
அப்பா சாதாரண விவசாயியாக இருந்ததால் என்னை டாக்டருக்குப் படிக்க வைப்பது சாத்தியம் அற்றதாக இருந்தது. நானே நர்சிங் படிப்புக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்தேன். இடம் கிடைத்தது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் நர்சிங் பயிற்சியை நிறைவு செய்தேன். அதைத் தொடர்ந்து, செட்டிநாடு, கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் நர்சிங் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.
1961-62 காலகட்டத்தில் சீனப் போரின்போது, மருத்துவம் படித்த பெண்கள் ராணுவ சேவை புரிய வருமாறு பிரதமர் நேருஜி வானொலியில் வேண்டுகோள் விடுத்தார். எனக்கும் ராணுவத்தில் சேர விருப்பமாக இருந்தது. விண்ணப்பித்து சேர்ந்தேன். 1963-இல் அலகாபாத் ராணுவ மருத்துவமனையில் நியமிக்கப்பட்டேன்.
1965-இல் பாகிஸ்தான் யுத்தம் தொடங்கிய சமயத்தில், அமிர்தசரஸ் ராணுவ மருத்துவமனையில் பணிபுரியச் சென்றிருந்தேன். அங்கு, ரத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பல ராணுவ வீரர்களுக்கு நான் சிகிச்சையளித்து வந்தேன். ஒருமுறை, சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அதிகாரி ஒருவர் குண்டடி பட்டு, மார்பிலும் அடிவயிற்றிலும் காயங்களுடன் அழைத்துவரப்பட்டார். அவருக்கு ஆபரேஷன் செய்து, குண்டுகளை அகற்றிய சமயத்தில், அவர் தன் வலது கையை உயர்த்தி எனது கைகளைப் பற்றியவாறு, "சிஸ்டர், எனது கைக்கடிகாரத்தை என் மகனிடம் ஒப்படைத்துவிடுங்கள்' என்று கூறியதும் அவர் உயிர் பிரிந்தது. அவர் மகன் மருத்துவமனைக்கு வந்ததும், தந்தை கூறியதைச் சொல்லி அவரின் கைக்கடிகாரத்தைக் கொடுத்தேன். "டாடி, நான் மெட்ரிக் எக்ஸாமினேஷனில் பாஸ் ஆகிட்டேன்; என்னை வாழ்த்துவதற்கு நீங்கள் இல்லையே டாடி...' என்று கதறி அழுத அவரின் மகன் "டாடி, ஏற்கெனவே உங்களுக்கு செய்துகொடுத்த சத்தியத்தின்படி, நானும் உங்களைப்போலவே ராணுவ சேவை புரிந்து இந்த நாட்டுக்காக மடிவதில் பெருமையடைவேன்..!'
என்று தந்தையின் உடல் மீது உறுதிமொழி எடுத்துக்கொண்டான். அந்த நிகழ்ச்சி என் இதயத்தை
உலுக்கியது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அமிர்தசரஸ் ராணுவ மருத்துவமனையை பார்வையிட வந்திருந்தார். தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து பஞ்சாப் மாநிலத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியில் ராணுவ சேவை செய்யும் செவிலியர் ஒரு தமிழ்ப்பெண் என்பதை அறிந்த காமராஜர் மகிழ்ச்சியடைந்து என்னை வாழ்த்தினார். என் பெற்றோரின் முகவரியையும் குறித்துக்கொண்டார். மறுநாள், காமராஜருடன் நான் இருக்கும் புகைப்படம் தமிழ்நாட்டின் செய்தித்தாள்களில் பிரசுரமானதும் என்னுடன் எங்கள் ஊரும் பிரபலமானது. அடுத்த சில நாள்களில், காமராஜரின் உத்தரவின் பேரில், நெல்லை மாவட்ட கலெக்டர் எங்கள் வீடு தேடி வந்து "ஏதாவது உதவி வேண்டுமா?' என்று என் பெற்றோரிடம் விசாரித்திருக்கிறார். இது எனக்கும் நான் பிறந்த கிராமத்துக்கும் கிடைத்த பெருமை.  
1971-இல் எனக்குத் திருமணம் ஆனது. என் கணவர் வழக்குரைஞர் மற்றும் நோட்டரியாக இருந்தார். ராணுவத்தில் பணியாற்றியவர்களின் விதவை மனைவிகளது, பென்ஷன் உள்ளிட்ட பணப்பயன்கள் பெறுவதில் இருந்த சிரமங்களை அறிந்திருந்தேன். எனவே, ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றதும், ஒரு வழக்குரைஞராகி, விதவைப் பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானம் செய்தேன். என் கணவரும் அதற்கு உறுதுணையாக இருந்தார்.
ஈவ்னிங் காலேஜில் சேர்ந்து பி.காம்., மற்றும் எல்.எல்.பி.,முடித்து, புணே ராஞ்சி யுனிவர்சிடியில் பட்டம் பெற்றேன். 1996-இல் பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்குரைஞர் ஆனேன். அன்றுமுதல் பாதிக்கப்பட்டவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் சேவை செய்து வருகிறேன். 2006-இல் என் கணவர் மறைந்தார். இரண்டு மகன்கள்- மருமகள்கள்- பேரன் - பேத்தி என்று என் குடும்பவாழ்வும், பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓய்வின்றிப் பணிசெய்யக் கிடைத்த வழக்கறிஞர் பொறுப்பும் மனநிறைவையே தந்துள்ளது'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com