வாழ்க்கைக் கல்விக்கோர் உதாரணம்!

ஒத்திசைவு மணமுறிவு பத்திரத்தில் கையெழுத்திட முடிவு செய்த காஞ்சனாவை அதிர்ச்சியுடன் பார்த்தேன். உயர் படிப்பு, மத்திய அரசில் உயர்
வாழ்க்கைக் கல்விக்கோர் உதாரணம்!

ஒத்திசைவு மணமுறிவு பத்திரத்தில் கையெழுத்திட முடிவு செய்த காஞ்சனாவை அதிர்ச்சியுடன் பார்த்தேன். உயர் படிப்பு, மத்திய அரசில் உயர் பதவி, அலுவலகத்தில் திறமையான அதிகாரி என பெயர் எடுத்த காஞ்சனாவுக்கு ஒரு சாதாரண வாழ்க்கைப் பாடம் பற்றிய நிதர்சனம்-விழிப்புணர்வு இல்லாமல் போனது எப்படி? வியப்பாக இருந்தது. மனமொத்த விவாகரத்து மனுவில் கையெழுத்து செய்யவேண்டாம் என்று முதலில் அறிவுறுத்தினேன். தொழிற்சாலை, ஃபிளாட் இவை சம்பந்தமாக கையெழுத்து செய்த பத்திரங்களின் விவரங்கள் கேட்டபோது, அவற்றைக் கூட காஞ்சனாவால் தெளிவாக சொல்லத் தெரியவில்லை. நஷ்டங்களை சரிசெய்ய  வங்கிக் கடனுக்காகக் கேட்டார். போட்டுக் கொடுத்தேன் என்பதைத் தவிர விவரங்கள் எதுவும் தெரியாது என்பதை கிளிப்பிள்ளைபோல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
அவருடைய சூழ்நிலைகளையும், கணவர் கேட்கும் பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டால் ஏற்படப் போகும் விபரீதத்தையும் உணர்த்தியபோதுதான் கணவரின் திருவிளையாடல்கள் அவருக்குப் புரிய வந்தது.
அப்போதுதான் சொன்னார். அந்த வடநாட்டுப் பெண் என்னை விவாகரத்து செய்து விட்டு அவளுடன் என் கணவர் தொடர்ந்து வாழவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும், தற்கொலைக்குக் காரணம் பாரிதான் என்பதாக எழுதிவைத்து விடுவதாகவும் மிரட்டி இ-மெயில் அனுப்பியிருக்கிறார். அதுதான் பயமாக இருக்கிறது என்றார்.
அது மட்டுமல்ல என் கணவர் விவாகரத்து மனுவில் நான் கையெழுத்து போட்ட பின், எப்படியாவது ஆஷாவை அவள் ஊருக்கே திருப்பி அனுப்பி விடுவதாகக் கூறுகிறார் என்றார்.
முதலில் காஞ்சனாவுக்கு ஒரு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதால் அவரிடம் சொன்னேன். ஒத்திசைவு மணமுறிவு என்பது கணவரும் மனைவியும் சேர்ந்தே விவாகரத்துக்கான சம்மதத்தை மனுவின் மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்து, விவாகம் ரத்து செய்யப்பட்டதாகப் பெறப்படும் உத்தரவு. அதன் பின் சட்டபூர்வமாக எந்த உரிமையையும் காஞ்சனா கணவரிடம் கோர
முடியாது என்பதைத் தெரிவித்தபோதும், அசையும் பொருளும் அசையாப் பொருளும் மட்டுமல்ல. சட்டபூர்வமான கணவரும் அவர் சொத்து என்பதை அறியாதிருந்த காஞ்சனா, வட நாட்டு ஆஷாவும் தன் கணவரால் ஏமாற்றப்பட்டிருக்கிறாளே, அவளும் பாவம் என்றார்.
இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பாரிக்குத் திருமணமாகி ஆண் குழந்தை இருக்கும் விஷயம் தெரிந்தே ஆஷா, பாரியுடனான தொடர்பை வலுப்படுத்தியிருக்கிறார். பாரி தன்னைத் திருமணமாகாதவர் என்று பொய் சொல்லி ஆஷாவுடன் வாழ்ந்திருந்தால் ஏமாற்றப்பட்டவர் ஆஷா மட்டுமல்ல.
காஞ்சனாவும்தான். ஆனால் இங்கே பாரி மற்றும் ஆஷா இருவருமாக சேர்ந்து கொண்டு காஞ்சனாவுக்கு எதிராக கபட நாடகம் நடத்தி இருக்கின்றனர். ஒரு பழமொழி சொல்வார்கள் உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்: ஆக தெரிந்தே தவறிழைத்தவர்கள் அவரவர் வினைக்கு அவரவர் அனுபவிக்கிறார்கள்; அதனால் ஆஷாவைப் பற்றிய கவலையை அறவே விட்டுவிட்டு, இனி வரும் காலங்களில் காஞ்சனாவின் வருமானத்தைக் கணவரிடம் தரவேண்டாம் என்று அறிவுறுத்தினேன்.
அது அவருடைய தனிப்பட்ட சொத்து. அதில் கணவரே ஆனாலும் உரிமை கோர சட்டத்தில் இடமில்லை என்பதையும் காஞ்சனாவுக்கு அறிவுத்தினேன். அதுமட்டுமல்ல, காஞ்சனா குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, தொழிற்சாலை உள்ளிட்ட சொத்துக்களின் வில்லங்கச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற்று வருமாறு அனுப்பினேன். அடுத்த ஓரிரு நாட்களில் வில்லங்கச் சான்றிதழ்களோடு வந்தார். விபரீதங்கள் தொடர்ந்தன...!
தொழிற்சாலை ஆஷாவிற்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக வில்லங்கச் சான்றிதழ் விவரித்தது. நல்லவேளையாக ஃபிளாட் காஞ்சனாவின் பெயரிலேயே தொடர்ந்து இருந்தது. உடனடியாக பவர் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வருமாறு கூறினேன். எந்தவித கேள்வியும் கேட்காமல், உடனடியாக சரி என்றார். சொன்னபடி ரத்து செய்தார். தெளிவடையத் தொடங்கிய அடையாளம் இதன் மூலம் தெரிந்தாலும் அவருடைய இந்த போக்கு எவ்வளவு தவறானது என்பதையும் உணர்த்த வேண்டிய கட்டாயம்.
எதற்காக பவர் பத்திரத்தை கேன்சல் செய்யச் சொல்கிறேன்? அதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றிய எந்த வினாவையுமே எழுப்பாமல் உடனடியாக சொன்னதை செய்து முடித்த போக்கு அவர் எவ்வளவு வெள்ளந்தியாக இருந்திருக்கிறார் என்பதைக் காட்டியது. இவரின் இந்த குணத்தை பாரி தனக்கு சாதகமாக வஞ்சகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வட நாட்டு ஆஷாவோ அப்படியே காஞ்சனாவுக்கு நேரெதிர். தொழிற்சாலையை தன் பெயருக்கு எழுதிவாங்கும்போது மிகவும் உஷாராக கிரயப்பத்திரமாக எழுதி வாங்கியிருந்தார். அது குறித்து காஞ்சனா தன் கணவரிடம் கேட்டதற்கு, தொழிற்சாலையை எழுதிக் கொடுத்துவிட்டால், அவள் தன்னை விட்டு விலகி விடுவதாகச் சொன்னதால் கொடுத்துவிட்டதாகவும், தற்போது ஆஷா தன் சொந்த ஊருக்கே திரும்பிப் போய்விட்டதாகவும் பாரி கூறியிருக்கிறார். ஆனால், அது பொய் என்று அறியாத காஞ்சனா, இனி தன் குடும்பத்தை ஆட்டிப் படைத்த சனியால் எந்தத் தொந்தரவும் இருக்காது என மறுபடியும் கணவரை நம்பினார்.
பிறகு, பாரி முன்போல் வீட்டிற்கு வந்து காஞ்சனாவோடு சகஜமாக இருந்திருக்கிறார். அதே நேரம் குடித்தனம் செய்யும் நேரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். பகலில் ஆஷாவுடன்; இரவில் காஞ்சனாவுடன் என்று தன் நிழல் நாடகத்தை காஞ்சனாவின் கவனத்துக்கு வராமல் அனுதினமும் அரங்கேற்றியிருக்கிறார்.
தொடர்ந்து பாரியின் நடவடிக்கைகளைக் கவனிக்க அறிவுறுத்தப்பட்டதால், பாரி வீட்டில் இல்லாத நேரங்களில் அவரின்
இ-மெயில் முகவரியில் உள்ள தகவல்களை காஞ்சனா ஆராய்ந்து பார்த்தபோது, பாரி அலுவலகம் செல்வதாகக் கூறி பகல் நேரம் ஆஷாவுடன் குடும்பம் நடத்தியிருந்த
தகவல்கள்; மேலும் இரவில் காஞ்சனாவுடன் குடும்பம் நடத்தியதற்காக ஆஷா விடுத்திருந்த கண்டனைக் கணைகள்... என்று  நீண்டு கொண்டே போயின.
ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாத காஞ்சனா, தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தபோது, கால்கள் செயலிழந்த தன் ஒரே மகனின் நிலையை எண்ணி அந்த முடிவை மாற்றிக் கொண்டு குழப்பமான மன நிலையோடு மறுபடியும் வந்தார்.    
  காஞ்சனாவின் கணவர், தவறுகளைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுக்காதது மட்டுமல்லாமல், மேலும் மேலும் காஞ்சனாவை ஏமாற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்த போதும், மனைவியை சமாதானப்படுத்துவதாக எண்ணி அவர் சொல்லும் பொய்யுரைகளையும், நிஜம் என்றே நம்பிய காஞ்சனாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்; வாழ்க்கைக் கல்விக்கோர் உதாரணமாக அவர் மாறிய விதம்...!
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com