தாயுமானவள்: குறும்படத்தில் ஒரு குறுநாவல்!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பிரபா டேலன்ட் பவுன்டேஷன் சார்பில் திரையிடப்பட்ட இரண்டு குறும்படங்களில் ஒன்று
தாயுமானவள்: குறும்படத்தில் ஒரு குறுநாவல்!

குறும்படங்கள் தயாரிப்பதில் பல பெண்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.  அவர்கள் எடுத்துக்கொள்ளும் கருத்துகள் சமூகக் கண்ணோட்டத்தில் சிந்தனையைத் தூண்டுபவையாக இருக்கின்றன.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பிரபா டேலன்ட் பவுன்டேஷன் சார்பில் திரையிடப்பட்ட இரண்டு குறும்படங்களில் ஒன்று "தாயுமானவள்'.  இதை எழுதியவர் பிரபா ராஜன் என்ற பெண் எழுத்தாளர்.  கேன்சர் நோய் தாக்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமானார்.  அவர் பெயரால் அவர் கணவர் ஆர்.வி. ராஜன் தொடங்கியிருக்கும் அறக்கட்டளை மூலம், திறமை உள்ள பெண்களுக்குக் கல்வி வாய்ப்பு, எழுதத் தெரிந்த பெண்களின் படைப்புகளுக்குப் பரிசளிப்பு, பெண்கள் பத்திரிகைகள் மூலம் விதவிதமான போட்டிகள் வைத்துப் பரிசுகள் அளித்தல் என்று மனைவியின் நினைவைப் போற்றுகிறார் ராஜன்.
சரி, குறும்படத்துக்கு வருவோம்.
"தாயுமானவள்' சொல்லும் கதை என்ன? 
மூளையின் செயல்பாட்டில் சற்றே குறை உள்ள பெண்கள் தங்களுக்குச் சவால் விடுகிற சந்தர்ப்பங்கள் வந்தால் வீறு கொண்டு எழுந்துவிடுவார்கள். இதுதான் தாயுமானவள் குறுநாவலின் அடிநாதமான கருத்து. இதைத் திரைக்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறார் இயக்குநர் ராஜேசுவரி ஆனந்த். 
இயக்குநர் ராஜேசுவரி ஆனந்திடம் பேசினோம்: 
எங்கே திரைப்படத் துறை பற்றிப் படித்தீர்கள்?
தரமணி பிலிம் இன்ஸ்டிட்யூட்டில்.  அங்கேதான் டைரக்ஷன், ஸ்க்ரீன்பிளே எழுதுவது எல்லாம் கற்றுக்கொண்டேன்.  நான் இவற்றில் பாஸ் ஆன போது, எனக்குத் தங்கப்பதக்கம் கிடைத்தது.
இதுதான் உங்கள் முதல் படமா?
அல்ல.  முதலில் சின்னத்திரைக்காக "கலாட்டா குடும்பம்' இயக்கினேன்.  சீயான் விக்ரம் அப்போது அதில் நடித்தார்.  அதற்குப் பின்னர் தனித்தனி எபிசோடுகள் தயாரித்துக் கொடுத்திருக்கிறேன்.  என் முதல் படம் "சக்தி பிறக்குது'.  தேவதர்ஷினி, சசிகுமார், வில்லன் சம்பத்ரன், காமெடியன் பரோட்டா சூரி, டி.கே.கலா எல்லோரும் அதில் நடித்திருந்தார்கள்.  தமிழ்நாட்டு கிராமம் ஒன்றில் சுந்தரி என்ற பெண்மணி, சமூக-பொருளாதார சவால்களுக்கு இடையே, பெண் தொழிலதிபராக உருவாகிறாள்.  இதுதான் கதை.
உங்களுக்கு இந்த தாயுமானவள் வாய்ப்பு கொடுத்தது யார்?
எனக்கும் என் கணவர் ஆனந்த் தியாகராஜனுக்கும் ஆர்.வி. ராஜன் நண்பர் மட்டுமல்ல, வழிகாட்டியும்கூட.  கணவர் ஆனந்த் தியாகராஜன் தான் இந்தக் குறும்படத்தின் சினிமாட்டோகிராபர்.  ராஜனுடைய விளம்பர நிறுவனத்துக்காக நிறைய விளம்பரப் படங்கள் தயாரித்துக் கொடுத்திருக்கிறோம்.  அவருடைய காலம் சென்ற மனைவி பிரபா ராஜன் எழுதிய சிறுகதைகள், குறுநாவல்கள் எல்லாம் படித்திருக்கிறேன்.  ராஜன் என்னைப் படத்துக்காக அணுகியபோது, தாயுமானவள் அவருடைய சிறந்த படைப்பு என்பதால், அதற்கு முதலிடம் கொடுத்தார். ஆரம்பத்தில் இதில் நான் அதிக ஈடுபாடு காட்டவில்லை.  ஒரு வருடத்துக்குப் பிறகு ராஜன் மீண்டும் தொடர்பு கொண்டு பேசினார்.  அப்போதுதான் அவர் மிகவும் சீரியஸ் ஆக இருக்கிறார் என்று தெரிந்தது.   தீவிரமாக இதில் இறங்கினேன்.  நாவல் எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம்.  அதனால் இது ஒரு பொன்னான வாய்ப்பாக நினைத்தேன்.  ராஜன் கடைசிவரை ஊக்குவித்து, ஆதரவாக இருந்தார்.  
யார் திரைக்கதை, வசனம் எழுதினார்கள்?
நான்தான் எழுதினேன்.  அதற்கு முன்னால் சிநேகிதர்கள் எல்லோருமாக உட்கார்ந்து பெரிய உரையாடல் நடத்தினோம்.  மிகுந்த நேரம் எடுத்துக் கொண்டோம்.  இந்தக் குறும்படத்தின் வெற்றிக்கு என் சிநேகிதர்களையும் நான் பாராட்ட வேண்டும்.  
நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?
அம்மாவும் பெண்ணுமாக நடிக்க ஒருவரைத் தேர்ந்தெடுப்பதே பெரும் சவாலாக இருந்தது.  அஸ்ரிதாவை முதலில் அனு பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்துவிட்டு, பிறகு அவருடைய பகுதியை முடித்தோம். ஆர்த்தி பாத்திரத்துக்கு யாரைப் போடுவது என்று அப்படி யோசித்தோம். கடைசியில் சற்றுத் தள்ளிப்போட்டுவிட்டோம்.  பிறகுதான் அஸ்ரிதாவையே ஆர்த்தி பாத்திரத்திலும் நடிக்கச் சொன்னோம்.  பிரமாதமாக நடித்தார். ஏழே நாளில் படம் முடிந்துவிட்டது.  எடிட்டிங் இரண்டு வாரங்கள்.  அவ்வளவுதான்.
அடுத்த முயற்சி என்ன?
நகரத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் சந்திக்கும் சவால்கள், மாறுதல்கள் எல்லாவற்றையும் மையமாக வைத்து எழுதியிருக்கிறேன்.  நல்ல கதையம்சம், நகைச்சுவை எல்லாம் இருக்கின்றன.  ஒரு சிநேகிதி உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்.  இடையே யூடியூப் சானல் தொடங்க உத்தேசம்.  மொத்தத்தில் பிரக்ருதி ஜீவா மீடியாவுக்கு தாயுமானவள் ஓர் உந்துதலைத் தந்திருக்கிறாள்.
- சாருகேசி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com