வெயிட் லிஃப்ட்டிங் பழகினேன்!

உடல் ஆரோக்கியம் எந்த ஒரு மனிதருக்கும் இன்றியமையாதது என்று சொன்னால் அது மிகையில்லை. அதிலும் பொழுதுபோக்கு சாதனங்களில்
வெயிட் லிஃப்ட்டிங் பழகினேன்!

உடல் ஆரோக்கியம் எந்த ஒரு மனிதருக்கும் இன்றியமையாதது என்று சொன்னால் அது மிகையில்லை. அதிலும் பொழுதுபோக்கு சாதனங்களில் தொடர்புடையவர்களுக்கு அது தலையாயது என்று கண்டிப்பாக கூறலாம். இதை உணர்ந்தவர்தான் ரம்யா சுப்பிரமணியம். இவர் விஜய் டிவியில் பலரையும் பேட்டிக்கண்டு, பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி உள்ளார். உடல் சார்ந்த ஒரு விஷயத்தில் இன்று மாநில அளவில் வெண்கலப் பதக்கம் வாங்கி உள்ளார். 

தன்னைப் பற்றியும், தான் பதக்கம் பெற்றது குறித்தும் கூறுகிறார்:
 "சாதாரணமாகவே தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் உள்ளவர்கள் தங்களது உடலை பேணிக்காத்து கொள்ள வேண்டும். அதிலும் எனக்கு அது மிகவும் முக்கியம். காரணம்  5 நாட்கள் நான் வெளியூர் சென்றாலும் அல்லது கல்யாணம் மற்றும் வீட்டில் ஏதாவது  விசேஷம் என்றாலும் நான் என்னுடைய உணவுக் கட்டுப்பாட்டை மறந்தால், என் உடம்பின் எடை 2 கிலோ அதிகமாக கூடிவிடும். அதனால் எனக்குத் தெரிந்து உணவுக் கட்டுப்பாட்டுடன் நான் தொடர்ந்து வாழ்ந்து வருகிறேன். நான் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தொலைக்காட்சியிலும் சரி, ரேடியோவிலும் சரி பங்கு கொள்ள ஆரம்பித்தேன். அது சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் என்று கூறலாம். அன்றிலிருந்து உணவுக் கட்டுப்பாடு என்னுடன் கலந்து விட்டது. எனது பயிற்சியாளர் ஜோத்சனா என்னை அதிகமாகவே அக்கறை எடுத்துக் கொண்டு பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்து என் உடல் எடை கூடாமல் அதே சமயம் முகத்தில் பொலிவும் மறையாமல் பார்த்துக் கொண்டார்.  

நாங்கள் பலமுறை உடல் சம்பந்தமாக பேசிக் கொண்டிருப்போம். அப்படிப் பேசும் பொழுது ஒருமுறை இந்த பவர் லிஃப்ட்டிங் (power lifting)  பற்றி பேசினோம். 

நீங்கள் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக  இருக்கும் என்று அவர் கூற, நான் சரி என்று தலை ஆட்டினேன். அன்று ஆரம்பித்ததுதான் இந்த பவர் லிஃப்ட்டிங் பயிற்சி. இதை நான் சில மாதங்களுக்கு முன்புதான் ஆரம்பித்தேன். இன்று அதன் மூன்று பிரிவுகளில் மாவட்ட அளவில் தங்கப் பதக்கமும், மாநில அளவில் ஒரு பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளேன். மூன்று பிரிவுகள் என்று கூறினேன் அல்லவா, அவை ஸ்குவாட்  (sqat) பென்ச் பிரஸ், (bench press)  மற்றும் டெட் லிஃப்ட் (dead lift). இந்த போட்டிகளில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் போட்டியிடும் போது என்னுடன் பலரும் பங்கு கொண்டார்கள். 

அவர்களைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கும். அவர்கள் இந்த போட்டிகளில் பங்கு கொள்ளவே தங்களை தயார்படுத்திக் கொள்வதை கேட்கும்போது எனக்கு இன்னும் உற்சாகமாக  இருக்கும். அவர்களின் உணவுக் கட்டுப்பாடு மற்றும் பயிற்சி முறைகளை ரொம்பவே கடுமையாக பின்பற்றி, அவர்கள் வாழ்ந்து வருவதை நான் தெரிந்து கொண்டேன். இதை உணர்ந்து நான் மேலும் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்தேன். அதன் விளைவுதான் இந்த பதக்கங்கள். அவர்களைப் போன்று என்னால் அவ்வளவு கடுமையாக பயிற்சி செய்ய முடியாது. ஆனால் இந்த பவர் லிஃப்ட்டிங் பயிற்சியில் என்னால் முடிந்த அளவிற்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 

என்னைப் பொருத்த அளவில் நான் பங்கு கொள்வதே பெரியது என்று நினைக்கிறேன். 

காரணம், இந்த போட்டிகள் குறித்து எனக்கு 5 நாட்களுக்கு முன்தான் தெரிகிறது. அன்றிலிருந்து என்னைத் தயார் செய்து போட்டியில் பங்கு கொள்கிறேன்.

பதக்கம் வந்தால் சந்தோஷம். இல்லை என்றால் பங்கு கொண்டதே மகிழ்ச்சிதான். என்னை பொருத்த அளவில் உடல் ஆரோக்கியம் முக்கியம். அதற்குத்  துணை போகும் இந்த பயிற்சிகளில் என் பங்கும் இருப்பதே என்னை மன நிறைவடையச் செய்கிறது என்று கூறினால் அது மிகை இல்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் பிறந்ததில் இருந்தே சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். இந்த உணவுக்கு என்னால் இதை செய்ய முடிந்ததே  மிகப் பெரிய விஷயம். மற்ற போட்டியாளர்கள் எல்லாம் சைவ, அசைவ உணவினை உட்கொண்டு தங்களை போட்டிக்கு தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள். நான் இதுவரை அப்படி செய்ததில்லை. என்னால் அசைவ உணவை உட்கொள்ள முடியவில்லை.  அதனால்தான் இந்த  மாதிரி போட்டிகளில் பங்கு கொண்டாலே அது பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன். 

நானும் முடிந்த வரை இந்த போட்டிகளில் பங்கு கொண்டு என் உடலை பேணிக் காப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.  சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்று கூறுவார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் எதுவுமே சாதிக்க முடியும், இல்லையா?‘' என்று சிரித்துக்கொண்டே கூறினார் ரம்யா.    
 
- சலன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com