இந்த பூமி எங்கள் குடும்ப சொத்து

சைத்ரி தேவி. எண்பத்து மூன்று வயது மூதாட்டி. இவர் வசிக்கும் மலைவனப் பகுதியில்  மின்சார வசதி இல்லை.
இந்த பூமி எங்கள் குடும்ப சொத்து

சைத்ரி தேவி. எண்பத்து மூன்று வயது மூதாட்டி. இவர் வசிக்கும் மலைவனப் பகுதியில்  மின்சார வசதி இல்லை. தொலைபேசித் தொடர்பு இல்லை. கடிகாரம் கிடையாது என்றாலும், சூரியன் இருக்கும் இடத்தை வைத்து, மணி என்ன இருக்கும் என்று சொல்லிவிடுகிறார். 

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட மரத்தாலான வீட்டில்தான் அவர் இந்த தள்ளாத வயதிலும்  தன்னந்தனியாக வசிக்கிறார்.  சைத்ரி தேவியின் கணவர் சந்தே ராம், கேன்சர் வந்து சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்டார்.

இமயமலை பகுதியில்  இமாசலப்பிரதேசத்தில், உள்ள குலு பள்ளத்தாக்குப் பகுதியில் விஸ்தாரமான 750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இமாலய தேசிய பூங்கா அமைந்துள்ளது. அந்தப் பூங்காவுக்குள்ளேதான் தன்னந்தனியாக வசித்து வருகிறார் சைத்ரி தேவி. யுனெஸ்கோ அமைப்பினால், அரிய தாவர வகைகளும், விலங்கு இனங்களும் கொண்ட அபூர்வமான ஹெரிடேஜ் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாவர, வன இயல் பூங்கா.  பனிச் சிறுத்தை, இமாலய கறுப்பு மற்றும் பழுப்பு கரடிகள், மலை ஆடுகள் உள்ளிட்ட முப்பது வகையான விலங்கினங்கள் இந்த தேசிய பூங்காவில் உள்ளன. மேலும் முன்னூறு வகையான பறவை இனங்களும், 125 வகையான பூச்சியினங்களும், 425 வகையான தாவர இனங்களும் இந்த பூங்காவில் இருப்பதாக  வனத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  இப்படிப்பட்ட சூழ்நிலை கொண்ட மலை வனப்பகுதியில்தான் சைத்ரி தேவி தன்னந்தனியாக வசித்து வருகிறார்.

சைத்ரி தேவிக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று பேருக்குமே திருமணமாகிவிட்டது. இப்போது சைத்ரி தேவிக்கு ஒன்பது  பேரக்குழந்தைகள் உண்டு. ஆனாலும், அவர், மலைமேலே தன்னந்தனியாக வசிக்கிறார். அவ்வப்போது , மலைப்பாதையில் இரண்டு மணி நேரம் தன் கால்கடுக்க நடந்து வந்து அவருடைய மகன்களும், மருமகள்களும், பேரக் குழந்தைகளும் இவரை பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

ஒரு காலத்தில், சைத்ரி தேவி வசிக்கும் வீட்டைச் சுற்றி ஏராளமான வீடுகள் இருந்தன. அந்த மலை கிராமத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தனர். 1999-ஆம் ஆண்டில் அரசாங்கம் இப்பகுதியில் சுமார் 750 ச.கி.மீ. பரப்பளவுள்ள பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, பூங்காவுக்குள்ளே தாவரவியல் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மிக முக்கியமாக இருக்கும் சுமார்  250 ச.கி.மீ. பரப்பளவில் வசித்த மக்கள் அனைவரையும் வேறு இடத்துக்கு இடம்பெயரச் செய்தார்கள். அங்கே வசித்த மற்ற குடும்பங்கள் எல்லோரும் மாற்று இடத்துக்குச் சென்றுவிட்டார்கள்.  ஆனால்  சைத்ரி தேவி மட்டும், நான் என் மண்ணை விட்டுப் போகமாட்டேன். நான் இறந்த பிறகு, உங்கள் இஷ்டம் போல என்னை இங்கே இருந்து அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கறாராகச் சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல், பூங்கா நிர்வாகமும், அவரை மேலும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டது.

இந்த வனாந்திரப் பகுதியில், இந்த தள்ளாத வயசில் தன்னந்தனியாக வசிக்க வேண்டுமா? பிள்ளைகளோடு போய் வசிக்கக் கூடாதா? காட்டு விலங்குகள் எல்லாம் சுதந்திரமாகத் திரியும் இந்தப் பகுதியில் வசிக்க பயமாக இல்லையா? என்று கேட்டால், ரொம்பவும் எமோஷனலாகி விடுகிறார் சைத்ரி தேவி.  இந்த பூமி  எங்கள் குடும்ப சொத்து. இங்கே நானும், என் கணவரும் பல்லாண்டுகளாக விவசாயம் செய்திருக்கிறோம்.  கோதுமை, பார்லி, உருளைக் கிழங்கு, மக்காச்சோளம், ராஜ்மா எல்லாம் இங்கே பயிரிட்டு இருக்கிறோம்.  நாங்கள் விளைவித்த தானியங்களை எல்லோருக்கும் கொடுத்து சந்தோஷப்பட்டிருக்கிறோம். என் கணவர் இறந்த பிறகு, நான் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டேன். இப்போதெல்லாம் எனக்கும் உடம்புக்கு முடியவில்லை. முழங்கால் வலி தாங்கவில்லை. ஆனாலும், இந்த மண்ணைவிட்டுப் போக எனக்கு மனசு வரவில்லையே என்ன செய்ய? பொதுவாக,  காட்டு விலங்குகள் மனிதர்களை அடித்து சாப்பிடாது. எனவே எனக்கு பயமில்லை என்கிறார்.
- எஸ். சந்திர மெளலி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com