எங்கள் மண்ணின் பெருமையைப் படமாக்கினேன்! சொல்கிறார்: ஹேமா ராகேஷ்

பாறை ஓவியங்கள், புடைப்பு சித்திரங்கள், தெய்வமாக வழிபடும் பழமையான நடுகற்கள், கல்திட்டை என்று
எங்கள் மண்ணின் பெருமையைப் படமாக்கினேன்! சொல்கிறார்: ஹேமா ராகேஷ்

பாறை ஓவியங்கள், புடைப்பு சித்திரங்கள், தெய்வமாக வழிபடும் பழமையான நடுகற்கள், கல்திட்டை என்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இரண்டாயிரம் ஆண்டு பழமையான பல விஷயங்களை "தொன்மையின் அடிச்சுவடு' என்று ஆவணப்படுத்தியிருக்கிறார் ஹேமா ராகேஷ். இவர், தனியார் தொலைக்காட்சியின் முன்னணி ஊடகவியலாளர் மற்றும் சமூக சேவகியும் கூட. இவரைத் தொடர்பு கொண்டோம்:

"எனக்கு பூர்வீகம் கிருஷ்ணகிரி மலைகிராமம். படித்தது வளர்ந்தது எல்லாம் அங்கேதான். சின்ன வயசிலிருந்தே துறுதுறு. எதையாவது செய்துகொண்டே இருப்பேன். பேச்சு போட்டி, பாட்டு போட்டி என எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன்.  பள்ளி பருவத்திலேயே 350-க்கும் அதிகமாக பரிசுகள் வாங்கியிருக்கேன்.

10-ஆவது படிக்கும் போது எங்கள் ஊரில் மாதாமாதம் நடக்கும் முதியோருக்கான கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு  உதவிகள் செய்ததற்காக  அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் கையில் சிறந்த சமூக சேவைக்கான ராஜ புரஸ்கார் விருது வாங்கினேன். பதினோராம்  வகுப்பு படிக்கும் போதிலிருந்து உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தேன். இப்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறேன். 

எனக்கு நீண்ட நாட்களாகவே ஆவணப் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. காரணம், எங்கள்  ஊரின்  வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை பாதுகாக்க,  அவற்றை ஆவணப்படுத்த நினைத்தேன். 

9 மாதங்களாக பல ஆய்வுகளை செய்து தகவல்களை சேகரித்து. கிட்டதட்ட 31 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினேன். 30 நிமிடம்  ஓடும் இந்தப்படத்திற்கு "தொன்மையின் அடிச்சுவடு' என்று பெயரிட்டிருக்கிறேன்.    

இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு இடங்களை தேர்வு செய்தேன்.

முதலில் மலைக்கோட்டையில்  பாறை ஓவியங்கள், படைவீரர் தங்கிய இடங்கள், புடைப்பு சித்திரங்கள், இன்றும் அள்ள அள்ள குறையாமல் ஊற்றெடுக்கும் ஒரு ஜான் குளம்.     

அடுத்து மல்லர் சமுத்திரத்தில் அந்தக்காலத்தில் இறந்தவர்களை புதைக்கும் கல் திட்டைகள்.

பெண்ணேஸ்வரத்தில் இன்றும் கடவுளாக வழிபடும் 23 நடுகற்கள். இந்த கற்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒரு சின்ன வரலாறு இருக்கிறது. 

கடைசியாக சின்ன கொத்தூர் என்ற இடத்தில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சிவன் கோயில் மற்றும் பராமரிப்பு இன்றி கிடக்கும் கல்வெட்டுகள். என சிலவற்றை ஆவணப்படுத்தியுள்ளேன். இதன் மூலமா எங்க மண்ணோட பெருமையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். கடந்த மார்ச் 31-ஆம் தேதி கிருஷ்ணகிரி கலெக்டர் கதிரவன் முன்னிலையில் படத்தை வெளியிட்டோம். மக்களிடம்  நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது'' என்றார்.  
 - ஸ்ரீதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com