எதிரெதிர் துருவங்கள்!  - வழக்குரைஞர் சாமி. தமிழ்ப்பூங்குயில்மொழி

பரம்பரை சொத்தாகட்டும், தந்தையின் சுயார்ஜித சொத்தாகட்டும், சொத்துக்களில் பெண்கள் பங்கு கோருதல் என்பது,
எதிரெதிர் துருவங்கள்!  - வழக்குரைஞர் சாமி. தமிழ்ப்பூங்குயில்மொழி

பரம்பரை சொத்தாகட்டும், தந்தையின் சுயார்ஜித சொத்தாகட்டும், சொத்துக்களில் பெண்கள் பங்கு கோருதல் என்பது, சில வேளைகளில் மட்டுமே பிறந்தகத்தில் உடன்பிறந்தாருடன் உரசலை ஏற்படுத்துகிறது. பல நேரங்களில், புகுந்த வீட்டில் கணவரின் பங்கினைப் பெறுவதில்தான் பெண்கள் அதிக அளவில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது..!  

அது ஒரு கூட்டுக்குடும்பம். பழனிவேலுவும் செந்தில் முருகனும் அண்ணன் தம்பிகள். பழனிவேலு குடும்பத்தை நிர்வகித்துவர, இரவு பகல் பாராமல், உணவு உறக்கமின்றி உழைத்தவர் தம்பி செந்தில் முருகன். ஆரம்பத்தில், தராதரம் பாராமல் கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். அப்படிச் சிறுகச் சிறுகச் சம்பாதித்து சேர்த்த பணத்தில் ஒரு லாரி வாங்கி ஓட்டுகிறார். உரிமையாளரான அவர், லாரிக்கு ஒரு ஓட்டுநரையும், க்ளீனரையும் வேலைக்கு அமர்த்திக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவர்களுக்கு ஊதியம் தரவேண்டுமே அந்த வேலைகளையும் தானே செய்தால் அந்தப்பணத்தை மிச்சம் செய்யமுடியுமே என்று எண்ணியவாறு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு ஊர் ஊராய்ச் சுற்றியிருக்கிறார். 

தம்பி செந்தில் முருகனின் ஓயாத உழைப்பால் ஒரு லாரி சில லாரிகளாகிறது. பணம் கொழிக்கத் தொடங்கவும் சொத்துக்கள் வாங்க அவா பிறந்திருக்கிறது. தன்பெயரில் தனக்கென்று எதுவும் தனியாகவோ அல்லது அண்ணன்-தம்பி இருவர் பெயரிலும் கூட்டாகவோ வாங்காமல், அண்ணன் பெயரில் மட்டும் வாங்கிக் குவித்திருக்கிறார். 

அண்ணனுக்குத் திருமணம் நடக்கிறது. அடுத்த சிலவருடங்களில் தம்பிக்கும் திருமணமாகிறது. அண்ணன் பழனிவேலுவுக்கு இரண்டு ஆண்குழந்தைகள், ஒரு பெண்குழந்தை. தம்பி செந்தில் முருகனுக்கு ஒரு மகன், ஒரு மகள். 

நாட்கள் ஓடுகின்றன. பழனிவேலுவின் மகன்களும், மகளும் உயர் படிப்பு படித்து நல்லதொரு வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். செந்தில் முருகனின் மகனும், மகளும் பள்ளிப் படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவரை சகஜமாக இருந்த அண்ணன் மனைவி மல்லிகாவின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடத் தொடங்குகிறது. 

கூட்டுக் குடும்பவாழ்க்கை குதூகலமாய்ப்போய்க் கொண்டிருந்ததாக தம்பி நினைத்திருந்த வேளையில், லாரியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு இரவு சாப்பாட்டை பரிமாறும்போதெல்லாம் தன் மனைவி சத்யா சற்று கொதிப்புடன் இருப்பதைக் காணத்தவறவில்லை. ஆனாலும் செந்தில் அதனைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. எதுவெனினும், சத்யா தானாகவே சொல்லட்டும் என்று காத்திருந்திருக்கிறார். 

இரவு வெகுநேரம் கழித்து சாப்பிட வரும் தன் கணவருக்காக, சமைத்தவைகளில் கொஞ்சம் தனியே எடுத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் சத்யா. ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் தேவையான அளவில் சமைத்தும் கூட செந்திலின் அண்ணி மல்லிகா, சத்யா தன் கணவருக்கென தனியாக வைத்திருப்பதையும் எடுத்து அவர் கணவர், குழந்தைகளுக்குப் பரிமாறிவிட்டு, காலிப்பாத்திரமாகவே வைத்திருக்கிறார்.  "சீ... கழுதை... இதைப் போய் பெரிது படுத்திக் கொண்டிருக்காதே...! என்ன இருக்கோ... அதைப் போடு... நான்தானே சாப்பிடப்போறேன்!'  என்றொருநாள் செல்லமாகக் கோபப்பட்டு,  பல நாள் இரவு சாதத்தில் தண்ணீர் ஊற்றி, ஊறுகாயைத் தொட்டு சாப்பிட்டிருக்கிறார். சில நாட்களில் அதுவும் இல்லாது இருந்தபோதும், செந்தில் தனக்குப் பசியில்லை என்று பொய் சொல்லிவிட்டு படுக்கையில் பசியோடு புரண்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

தன்னுடைய மகன்கள் வருமானம் ஈட்டத் தொடங்கிவிட்டதால், இப்படி சாப்பாடு உள்ளிட்ட ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக, தனது காழ்ப்புணர்வைக் காட்டிக் கொண்டிருந்த அண்ணி மல்லிகா, ஒருநாள் செந்தில்முருகனிடம் "தனிக்குடித்தனம் சென்றுவிடுங்கள்' என்று நேரடியாகவே கூறியிருக்கிறார். 

இதற்கு மறுப்போ, எதிர்ப்போ காட்டாமல் அண்ணன் பழனிவேல் தலை தாழ்ந்து நின்றிருக்கிறார். அண்ணி மற்றும் சம்பாதிக்கும் மகன்கள், மகள் முன்பு அண்ணன் சூழ்நிலைக் கைதியாய் நிற்பதாய் எண்ணிய செந்தில் முருகன் தான் தன் குடும்பத்தாரோடு உடனடியாக வெளியேறி நண்பரின் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.  

இதையடுத்து, அண்ணன் பழனிவேலு, சொத்துக்களைப் பாகம் பிரித்திருப்பதாய் சொல்லி, அண்ணனின் மகன்கள் செந்தில்முருகனுக்குக் காட்டிய சொத்துக்கள் மதிப்புக் குறைந்தவை மட்டுமல்ல.  அதிலிருந்து வருமானம் எதுவும் ஈட்ட முடியாது. மூலதனமாக இருக்கட்டும் என்று வாங்கப்பட்ட காலிமனைகள் அவை.

உடனடியாக ஒரு ஓலைக் குடிசையைப் போட்டு அதில் குடியேறிவிட்டார் செந்தில் முருகன். அதே நேரம், அண்ணனின் பாகமாக எடுத்துக் கொள்ளப்பட்ட சொத்துக்கள் அதிக மதிப்பு கொண்டதோடு மட்டுமல்ல; அதிக வருமானம் தரக்கூடிய லாரிகள் மற்றும் வாடகைக்கு விடப்பட்ட கடைகள். 

பாகப்பிரிவினை ஏற்பட்டபோது செந்தில் முருகனுக்கு வயது 57. முன்புபோல் லாரி ஓட்டி சம்பாதிக்கவும் வழியில்லை. மகனும் மகளும்  படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு மகளுக்கு மணம் முடிக்கவேண்டும். இந்த நிலையில், தன் பாகமாக இரண்டு கடைகளை மட்டுமாவது தரும்
படிக் கேட்டிருக்கிறார் சம்பாதித்து அண்ணன் பெயரில் கிரயம் வாங்கி வைத்த தம்பி. 

முடியாது என்ற பதிலை மூர்க்கமாகத் தெரிவித்தவர்கள் பழனிவேலுவின் மனைவியும், மகன்களும்..! தனக்கெனத் தனியே எதையும் சேர்த்து வைத்தறியாத தம்பி, நொறுங்கிப் போனார். தன் நண்பர்களிடம் கடன் வாங்கி ஒரு கடையை நடத்தி, தன் குடும்பத்தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார்.

செந்தில் முருகனின் மகனுக்கோ தாளாத கோபம். அத்தனை சொத்தும் தன் தந்தையின் உழைப்பில் கிரயம் பெறப்பட்டவை. அப்படியிருக்க, இருவருக்கும் சமபங்காக பிரிக்கக்கூட மனமில்லாமல், துரோகம் செய்த பெரியப்பாவின் குடும்பத்துக்குப் பாடம் புகட்ட அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் "அனைத்து சொத்துக்களுமே தன் அப்பாவுடையது' என்று விளம்புகை (ஈங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய்) செய்யக்கோரி வழக்குத் தொடரவேண்டும் என ஆவேசப்பட்டிருக்கிறார். 

தம்பி மனைவி சத்யாவோ எதுவுமே நடவாததுபோல், "விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே கெட்டுப் போவதில்லை... குற்ற உணர்ச்சி நிச்சயம் ஒருநாள் அவர்களைக் குறுகுறுக்கவைக்கும். அவரவர் வினைப்பயன்; அவரவர் அனுபவிப்பார்கள். அதனால் விட்டுத்தள்ளுங்கள். வீணாக அவர்களைப் பழிவாங்க யோசிக்கும் நேரத்தில், உங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்' என்று சாந்தப்படுத்தியிருக்கிறார்.   

அண்ணன் மனைவி மல்லிகா, தம்பி மனைவி சத்யா இருவரும் பெண்களே..! ஆயினும், அண்ணிக்கு சொத்தின் மேல் இருந்த அவா, சொந்தத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. சொத்துக்கள் கணவரின் வருமானத்தில் வரப்பெற்றதல்ல என்று தெரிந்திருந்தும், தன் மகன்கள் தலையெடுத்துவிட்டதால், இனி கொழுந்தனின் தயை தேவையில்லை என நினைத்ததோடு, கொழுந்தனின் உழைப்பை சுரண்டக் காரணமான மல்லிகாக்களும்; கணவனின் உழைப்பே ஆயினும், வஞ்சக எண்ணத்தோடு செயல் பட்ட மல்லிகாவை பகையாளியாகப் பாவிக்காமல், உயிரற்ற சொத்துக்களுக்காக உறவுகளைப் பகைத்துக் கொள்ள விரும்பாத சத்யாக்களும் சத்தியமாய் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். 
ஓர் அக்காவால் வஞ்சிக்கப்பட்ட தங்கை... அடுத்த இதழில்!
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com