கைக்குட்டையில் குறிப்பெடுத்துக் கொண்டேன்! சொல்கிறார் : ஜே.கே.ரௌலிங்

ஹாரி பாட்டர் புதினத் தொடர்களை எழுதி புகழின் உச்சத்தைத் தொட்டவர் ஜே.கே. ரௌலிங். ஐம்பத்தொரு வயதாகிறது.
கைக்குட்டையில் குறிப்பெடுத்துக் கொண்டேன்! சொல்கிறார் : ஜே.கே.ரௌலிங்

ஹாரி பாட்டர் புதினத் தொடர்களை எழுதி புகழின் உச்சத்தைத் தொட்டவர் ஜே.கே. ரௌலிங். ஐம்பத்தொரு வயதாகிறது. ஹாரி பாட்டர் புதினத்தை வாசித்தால் விநோத உலகில் சஞ்சரிக்கலாம். ஹாரி பாட்டர் என்றாலே, ஹாரியும் நண்பர்களும் துடைப்பத்துடன் அந்தரத்தில் பறவைகள் போல பறப்பதுதான் சட்டென்று நினைவுக்கு வரும். சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் ஈர்த்து கற்பனை உலகில் பயணிக்க வைக்கும் விதத்தில் சுவாரஸ்யமாக அமைந்த்திருப்பது ஹாரிபாட்டரின் கதை. ஜே.கே.ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் இதுவரை ஏழு பகுதிகளாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு பகுதி வெளியான நாளன்று உலகம் முழுவதும் வாசகர்கள், புத்தகக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று நூலை வாங்கினார்கள். ஆரம்பத்தில் நாவலாக எழுதிய ரௌலிங், நாவலின் வெற்றிக்குப் பிறகு படமாக தயாரிக்க அனுமதி தந்தார். ஹாரி பாட்டர் படங்களும் தொடர்ச்சியாக வெற்றி அடைந்தன.

அதனால் புகழும் வருமானமும் எக்கச்சக்கமாக அதிகரித்தது. எழுதி அதிகமாக சம்பாதித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தார். இவர் எழுதிய புதினங்கள் நாற்பது கோடி பிரதிகள் விற்பனையாகி அகில உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இன்று புகழின் உச்சத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும், ரௌலிங்கின் சிறு வயது வாழ்க்கை.. அவர் கடந்து வந்த பாதை கல்லும் முள்ளும் நிறைந்ததாய் இருந்தது. ரௌலிங்கே சொல்கிறார்:
"நான் பிறந்தது 1965-இல். பிரிட்டனில் பிறந்தேன். நான் பிறந்த கொஞ்ச நாளில், அம்மாவைப் பலவித நோய்கள் கூட்டணி அமைத்துத் தாக்கின. அம்மா படுத்த படுக்கையானார். போதாக் குறைக்கு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒத்துப் போகவில்லை. இருவருக்கும் புரிதல் இல்லாமல் போனதால் எப்போதும் வீட்டில் முறைப்புதான். அவை என் சந்தோஷத்தைத் தொலைத்தன. கடுமையான பொருளாதார பிரச்னையால் எனது பதினேழாவது வயதில் கல்லூரி படிப்பைக் கைவிட வேண்டி வந்தது. எனது இருபத்தைந்தாவது வயதில் அம்மா மரணமடைந்தார்.

வாழ்க்கையில் வந்த விரக்தி... என்னை பல கோணங்களில் வாழ்க்கையின் நிகழ்வுகளை அலசிப் பார்க்கச் செய்தது. எனக்கு நன்றாக எழுத வரும். சிறுவயதிலேயே சிறுகதை எழுதியிருக்கிறேன். தங்கைக்கு நிறையக் கதைகளைச் சொல்வேன். நானே சில கதைகளை உருவகம் செய்து சொல்வேன். அதனால் புதினம் ஒன்றினை எழுதினால் என்ன என்று நினைத்து எழுத ஆரம்பித்தேன். அம்மா உயிருடன் இருக்கும் போதே எழுதத் தொடங்கியிருந்தேன். அது ஹாரிபாட்டர் தொடரின் முதல் புதினம். அது வெளிவந்து உலகப் புகழ் பெற்று விற்பனையில் சக்கைப்போடு போடுமென்று அப்போது எனக்குத் தெரியவில்லை... அப்படி ஒரு நம்பிக்கையும் என்னிடம் இருந்ததில்லை.

ஒருநாள் நான் பயணிக்க வேண்டிய ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக வர நொந்து போன நான் சலிப்புடன் ரயிலில் பயணம் செய்யும் போது தான் ஹாரி பாட்டர் என்கிற நூதன அமானுஷ்ய கதைக் கரு என்னுள் உதித்தது. அந்தக் கதைக்கருவில் எதையும் மறந்துவிடக் கூடாதென்று குறிப்பெடுக்க தேடினேன். தாள் ஏதும் கிடைக்கவில்லை. கடைசியில், எனது கைக்குட்டையில் குறிப்பெடுத்துக் கொண்டேன். அந்தக் காலத்தில் கதை எழுத கம்ப்யூட்டர் எதுவும் என்னிடம் கிடையாது. பழைய டைப்ரைட்டரில் டைப் செய்து முதல் பிரதியை முடித்தேன்.

ஹாரி பாட்டர் நாவலை முழு மூச்சோடு எழுதி முடித்தாலும், பதிப்பகங்கள் பிரசுரிக்க முன்வரவில்லை. பல பதிப்பகங்கள் ஏறி இறங்கிய பிறகுதான் எனது முதல் புதினம் அச்சேறியது. அதிர்ஷ்டவசமாகப் பதிப்பக உரிமையாளரின் எட்டு வயது மகள் முதல் பிரதியை வாசித்ததில் அவளுக்குப் பிடித்துப் போக, பதிப்பாளர் அச்சடித்து விற்பனைக்கு விட்டார்.

எனக்குத் திருமணம் இருபத்தேழாம் வயதில் நடந்தது. காதல் திருமணம்தான். ஆனால், திருமண வாழ்க்கை சுமூகமாக அமையவில்லை. கணவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னைக் கொடுமைப் படுத்தினார். இந்தத் திருமணம் மூலம் மகள் பிறந்தாள். குழந்தை பிறந்த ஓர் ஆண்டிலேயே கணவரை விவாகரத்து செய்தேன். பொருளாதார சிக்கல் என்னை பிழிந்தெடுத்தது. வேலையும் கிடைக்கவில்லை. குழந்தையையும் காப்பாற்ற வேண்டும். ஒருகட்டத்தில் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன்.

சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தற்கொலை எண்ணத்தை தவிர்த்து எழுதுவதை முழுநேர வேலையாக தெரிவுசெய்தேன். பெண் ஒருவர் எழுதினால் வாலிபர்கள் நாவலை வாங்கி வாசிக்க மாட்டார்கள் என்று சொல்லப்பட்டதால், ஜான் ரௌலிங் என்ற சொந்தப் பெயரை ஜே.கே. ரௌலிங் என்று மாற்றிக் கொண்டேன். ராபர்ட் கல்பிரைத் என்ற புனைபெயரிலும் படைப்புகளை எழுதியிருக்கிறேன்.

மருத்துவர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். இரண்டு மகன்கள் பிறந்தார்கள். எனது முப்பத்தைந்தாவது வயதில் ஒரே ஆண்டில் நான்கு புதினங்களை வெளியிடும் அளவுக்குப் பிரபலம் ஆனேன். சிறந்த புதின எழுத்தாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அது ஹாரிபாட்டர் கதையின் ஏழு பாகங்கள் எழுதும் உற்சாகத்தைக் கொடுத்தது. ஹாரிபாட்டரின் பிராண்டின் மதிப்பு மட்டும் பதினைந்து பில்லியன் டாலர்கள் ஆகும்'' என்றார்.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com