சமையல்... சமையல்... சமையல்...!

வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து பிறகு வெங்காயம் சேர்க்கவும். பிறகு கொஞ்சம் புளித்த மோர்,

மோர்க்களி

தேவையானவை: 
அரிசி மாவு -2 கிண்ணம்
மோர் - 5 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 5 தேக்கரண்டி
தாளிக்க :
கடுகு, சீரகம், உளுந்து,
கடலை பருப்பு - தலா 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து பிறகு வெங்காயம் சேர்க்கவும். பிறகு கொஞ்சம் புளித்த மோர், அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த  கலவையை வாணலியில் ஊற்ற வேண்டும். பிறகு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.  அது கெட்டியானதும்  இறக்கிவிட வேண்டும். சுவையான மோர்க்களி ரெடி.

கொத்துமல்லி சாதம்

தேவையானவை:
நறுக்கிய கொத்துமல்லி  - 1 கிண்ணம்
பாசுமதி அரிசி - 1 கிண்ணம்
வெங்காயம் - 1 
பச்சைப் பட்டாணி - கால் கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - அரை தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 5
உப்பு - தேவையான அளவு
நெய் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
பட்டை, இலை, கிராம்பு,
ஏலக்காய் - தலா 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் - சிறிது
செய்முறை: குக்கரில் வெண்ணெய்விட்டு, பட்டை, கிராம்பு, முந்திரி தாளித்து, பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும். பின்னர், பட்டாணி சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள் சேர்க்கவும். பின்னர், ஊறவைத்து களைந்து வைத்துள்ள அரிசியை சேர்த்து வதக்கவும். அடுத்து, தண்டுடன் சேர்த்துப் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லியைச் சேர்க்கவும். ஒரு கிண்ணம் 
அரிசிக்கு 2 கிண்ணம் தண்ணீர் வீதம் விட்டு, உப்பு சேர்த்து கிளறி மூடிவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கி வைத்து விடவும். பிரஷர் போனதும் திறந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் மீதமுள்ள வெங்காயத்தாளைத் தூவி லேசாக கிளறி விடவும். 
கொத்துமல்லி சாதம் தயார்.

பானிப்பூரி

தேவையானவை:
பானிப்பூரி வடாம்  - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
 மசாலா செய்ய:
உருளைக்கிழங்கு- 2 
வெங்காயம் - 2 
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கரம்மசாலா - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பானி செய்ய:
புதினா - 1கைப்பிடி அளவு
பச்சை மிளாகய் - 1
வெல்லம் அல்லது பேரிச்சம்பழம் - 2
உப்பு - 1 சிட்டிகை
புளி - சிறிய துண்டு
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு பானிப்பூரி வடாமை பொறித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர், உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம் தாளித்து பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம்மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன், மசித்த உருளைக்
கிழங்கு, உப்பு சேர்த்து சுருள கிளறி இறக்கி தனியாக  
வைத்துக் கொள்ளவும்.
பானி : புதினா, பச்சை மிளகாய், புளி, வெல்லம், உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து சிறிது தண்ணீர் விட்டு வடிக்கட்டி,  அதனுடன் தேவையான அளவு தண்ணீருடன் சேர்த்து கலக்கவும்.   பின்னர், ஏற்கெனவே பொறித்து வைத்துள்ள பானிப்பூரியை மேலே லேசாக உடைத்து அதன் உள்ளே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் வைத்து அதனுள் பானியை விட்டு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும். நமது வீட்டிலேயே செய்வதால் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

முள்ளங்கிக் கீரை பொரியல்

தேவையானவை: 
முள்ளங்கிக் கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பூண்டு - 3 பல்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடுகு, ஊளுந்து, சீரகம் - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1 கைப்பிடி அளவு
எள் - 1 தேக்கரண்டி
செய்முறை: முள்ளங்கிக் கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம்  பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு உளுந்து சேர்த்து பொறியவிடவும். அடுத்து மிளகாய்வற்றல், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர், அரைமணி நேரம் ஊரவைத்த பருப்பு சேர்த்து, உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். 5-10 நிமிடங்களில் வெந்துவிடும். பிறகு கீரையைச் சேர்க்க வேண்டும். 5 நிமிடத்தில் வெந்துவிடும். அத்துடன் ஒன்றிரண்டாக பொடித்த வறுத்த வேர்க்கடலை, எள் பொடி சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். சுவையான சத்தான முள்ளங்கிக் கீரை  பொரியல் ரெடி.

மேதிச் சப்பாத்தி - பன்னீர் பட்டர் மசாலா

தேவையானவை:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
வெந்தயக் கீரை - 1 கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
பன்னீர் பட்டர் மசாலா
தேவையானவை:
பன்னீர் - 50 கிராம்
பட்டர் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 1தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1 தேக்கரண்டி
முந்திரி  பருப்பு - 10
தேங்காய் - சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் -தலா 2 துண்டு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - சிறிதளவு
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மேதிச் சப்பாத்தி: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய், ஆய்ந்து சுத்தம் செய்து அலசி, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெந்தயக் கீரை சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து  சப்பாத்தியாக சுட்டு எடுக்கவும்.
பன்னீர் பட்டர் மசாலா: வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும், வெங்காயம், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர், மிக்ஸியில் அரைத்த தக்காளியைச் சேர்த்து வதக்கி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர், பன்னீர் சேர்க்க வேண்டும். அடுத்து கரம் மசாலா சேர்த்து வதக்கவும். இறக்கும்போது தேங்காயுடன், முந்திரி சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து கிளறிவிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும். பின்னர், அதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழையைத் தூவி, வெண்ணெய் சேர்க்க வேண்டும். சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி.

இந்தவார சமையல் குறிப்புகளை வழங்குபவர் கு.பத்மபிரியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com