மனிதர்களைப் பார்க்காமல், சுவர்களைப் பார்க்கிற வாழ்க்கை!

இன்று ரசிகர்களின் கையில்தான் சினிமா இருக்கிறது. எதைச் சொன்னாலும் வெற்றிக் கிட்டும் என்கிற நிலை இப்போது சினிமாவில் இல்லை. பொய்யான எதையும் சொல்லி ரசிகர்களை ஏமாற்றி விட முடியாது
மனிதர்களைப் பார்க்காமல், சுவர்களைப் பார்க்கிற வாழ்க்கை!

இன்று ரசிகர்களின் கையில்தான் சினிமா இருக்கிறது. எதைச் சொன்னாலும் வெற்றிக் கிட்டும் என்கிற நிலை இப்போது சினிமாவில் இல்லை. பொய்யான எதையும் சொல்லி ரசிகர்களை ஏமாற்றி விட முடியாது. அவர்களுக்கு தினமும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள ஏராளமான வசதிகள் வந்து விட்டது. அவர்களுக்கு ஈடு கொடுக்க நாமும் அப்டேட் செய்து கொள்ள வேண்டியுள்ளது. அப்போதுதான் ரசிகர்கள் நம் கதையோடு ஒன்றிப் போவார்கள். அனுபவத்தை அள்ளித் தெளித்து பேசுகிறார் இயக்குநர் சுரேஷ். "அரசு', "கம்பீரம்', "சபரி' என ஆக்ஷன், சென்டிமெண்ட் படங்களுக்குப் பெயர் பெற்றவர். சிறு இடைவெளிக்குப் பின் "திருப்பதி குடும்பம்' படத்தின் மூலம் மீண்டும் கதை சொல்ல வருகிறார். 

உங்கள் படங்கள் வெளியாகி பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டதே... இந்த கால தாமதத்துக்கு என்ன காரணம்...?

தரமான படங்கள் செய்ய வேண்டும் என்ற தேடல்தான் இந்த இடைவெளிக்கு காரணம். "அரசு', "கம்பீரம்', "சபரி' என என்னுடைய அடுத்தடுத்தப் படங்கள் உடனடியாக வெளியாகி வந்தன. அப்போது இருந்த சினிமா டிரெண்டுக்கு ஏற்றபடி கதைப் பிடித்து படங்கள் இயக்கினேன். அந்த காலகட்டத்தில்தான் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதற்கு தக்கவாறு என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன். அடுத்து என்ன கதை என்று யோசித்து ஒரு முடிவுக்கு வருவோம். சில காலம் அந்தக் கதையோடு பயணிப்போம். ஏதோ ஓர் இடத்தில் இது சரியாக வராது என்று நினைப்பு வரும். அப்படியே சில வருடங்கள் ஓடி விட்டன. 

என் முந்தைய படங்களின் வெற்றி என்னை பெரிதும் யோசிக்க வைத்தது. அந்த பெயருக்காகவே ரசிகன் எதிர்பார்ப்போடு வருவான். அவனை ஏமாற்றி விடக் கூடாது என்பதால் பெரும் நிதானம் கடைப்பிடித்தேன். அவனை நூறு சதவீதம் திருப்தி செய்ய வேண்டுமானால், நாம் ஆயிரம் சதவீதம் உழைக்க வேண்டும். இரண்டாயிரம் சதவீதம் யோசிக்க வேண்டும். அதற்காகத்தான் இடைவெளி. போஸ்டர், டீஸர், டிரெய்லர் என எல்லாவற்றிலும் ஈர்க்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இது படைப்பாளிக்கு பெரும் சவாலான கால கட்டம். எப்படியெல்லாம் யோசிக்க முடியுமோ, அப்படியெல்லாம் யோசித்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதற்குத்தான் இந்தக் கால தாமதம். 

"திருப்பதி குடும்பம்'... தலைப்பிலேயே கதை சொல்றீர்கள்...?

நூற்றுக்கும் குறைவான வீடுகள் இருக்கிற கிராமங்களைப் பார்த்திருக்கிறேன். சுத்தமான காற்று, நிழல் தருகிற மரங்கள், பசுமையான வயல்கள் நடுவில் விசாலமான திண்ணைகளுடன் வீடுகள் இருக்கும். ஓர் டீக்கடை, பெட்டிக் கடை, முடி வெட்டுகிறவர், துணி துவைக்கிறவர், டெய்லர், குடி தண்ணீர் எடுக்க ஒரு கிணறு, குளிப்பதற்கு ஒரு ஆற்றங்கரை, குளம், மரத்தடியில் பஸ் ஸ்டாப் என அந்த சின்ன ஊருக்குள்ளேயே ஒரு குட்டி உலகம் இருக்கும். 

நகரத்தில் எல்லாமே ஒரு காம்பவுண்டுக்குள் வந்து விட்டது. நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை இருக்கே, மனிதர்களைப் பார்க்காமல், சுவர்களைப் பார்க்கிற வாழ்க்கை. அதைப் பார்த்துதான் முதியவர்கள் தங்களின் தனிமையை கழிக்க வேண்டியிருக்கிறது. 

இன்றைக்கு குடும்ப வாழ்க்கை என்பதே மாறி விட்டது. பணம் பெரும்பான்மையான தேடலாக வந்து விட்டது. பாசம், அன்பு, மனம் விட்டு பேசுதல் என்பதே இல்லை. இதுதான் களம். இதை வைத்து இன்றைய அரசியல், பொருளாதாரம், சமூகம் வரை பல விஷயங்களை தொட்டிருக்கிறேன். 

புதுமுகங்கள்தான் இந்த கதைக்கு பலம் என்று நினைக்கிறீர்களா...?

இந்த ஹீரோ, அந்த ஹீரோயின் என்பதெல்லாம் இப்போது இல்லை. கதைக்கு பொருந்தி போகிற மாதிரியான முகங்கள் இருந்தால் போதும் என்று நினைத்தேன். ஜே.கே, ஜாகீன், ஜெயன், லஷ்மி ஐஸ்வர்யா என எல்லா புதுமுகங்களுமே பொருந்தி வந்தார்கள். என்னுடன் இறுதி வரை பயணிக்க முடிந்தவர்கள்தான் இதில் நடிக்க முடியும். அதற்கு இந்த புதுமுகங்களே பலம். 

தேவதர்ஷினி, மயில்சாமி தேர்ந்த நடிகர்களும் பக்க பலமாக இருக்கிறார்கள். பிரபலமான நடிகர்களை என் இழுப்புக்கெல்லாம் இழுக்க விருப்பமில்லை. அவர்களுக்கு அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் இருக்கும். அதைத் தடுக்க விருப்பமில்லை. தேவைப்படும் பட்சத்தில் பெரிய நடிகர்களை இயக்குவேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com