விக்ரம் என் ரோல் மாடல்; பாலா படம் கனவு!

"அட்டு' என்றாலே ரிஷி ரித்விக்தான்...! அடுத்த படம் எப்போ பாஸ்? என எதிர்பார்க்க வைத்திருக்கும் புதுமுகம்.
விக்ரம் என் ரோல் மாடல்; பாலா படம் கனவு!

"அட்டு' என்றாலே ரிஷி ரித்விக்தான்...! அடுத்த படம் எப்போ பாஸ்? என எதிர்பார்க்க வைத்திருக்கும் புதுமுகம். "ஏற்றுக் கொள்கிறேனோ இல்லையோ, நிச்சயமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்' என பேசத் துவங்குகிறார்...

"திருநெல்வேலி என் பூர்வீகம். பள்ளி படிப்பு, கல்லூரி காலம் என எல்லா தருணங்களிலும் ஏதோ உள்ளுக்குள் ஒரு வித உணர்வு எழும். சாதிக்க வேண்டும் என்று மனசு சொல்லிக் கொண்டே இருக்கும். யாரோ ஒரு நண்பன் எதேச்சையாக "நீ சினிமாவில் நடிக்கலாமேடா...' என்று கொளுத்தி போடவும், நேராக கிளம்பி கோடம்பாக்கம் வந்து விட்டேன். என்ன செய்வது? யாரை பார்ப்பது? என்று தெரியவில்லை. குறும்படங்களுக்கான ஒரு உலகம் அப்போதுதான் உருவாகியிருந்தது.

விஜய் சேதுபதி, "அட்டக்கத்தி' தினேஷ் மாதிரியான நடிகர்களின் வரவு என்னை மாதிரி ஒரு வளரப் போகிற நடிகருக்கு உத்வேகமாக இருந்தது. "ப்ராக்டீஸ் பண்ணா எதையும் கத்துக்கலாம்.... கூத்துப் பட்டறையில் சேர்ந்துடுங்க...' என்று சொன்னார்கள். அப்போதுதான் பாண்டியன் மாஸ்டர் மாதிரியான ஆளுமைகளுடன் சேர்ந்து சினிமாவுக்குத் தேவையான எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். குங்ஃபூ, கராத்தே, கம்பு சண்டை, வாள் சண்டை, கத்திப் பயிற்சி என ஏக கலைகள் கற்றுத் தேர்ந்தேன். அப்போதுதான் இயக்குநர் ரத்தன் லிங்காவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

"சார் ஒரு கதை இருக்கு... ஆனால், சர்வ சதாரணமா இந்த கதையில் யாரும் நடித்து விட முடியாது. நிறைய அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிச்சா... ஒரு நல்ல இடம் இருக்கு...' என கரம் கொடுத்தார். "சார் எதற்கும் தயார்...' என நானும் அவரோடு சேர்ந்து பயணமானேன். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேலான உழைப்புதான் "அட்டு'. அந்தப் படத்துக்கு நான் போட்ட உழைப்பு, சொன்னால் மிகையாக கூடத் தெரியலாம். அப்படி ஒரு கஷ்டப்பட்டேன். "அட்டு'க்குப் பிறகுதான் என்னையும் மதித்து நின்று பேச ஆரம்பித்தார்கள். பல வருஷ வலி... பத்து நிமிடங்களில் முடிஞ்சிருச்சுல்ல...!'' 

பிரபலத்தின் வாரிசாகவோ, பெரிய சினிமா பின்னணியோ இல்லாமல் இருப்பதுதான் இப்போது சினிமாவில் ஜெயிப்பதற்கான ஃபார்முலாவா....?
நான் பிரபலத்தின் வாரிசாக இல்லாமல் இருக்கலாம். என்னைக் கொண்டாடவும், திட்டிக் கொட்டவும் இங்கே சில பேர் இருக்கிறார்கள். என் அன்புக்காகவும், பாசத்துக்காகவும் கிடைத்தவர்கள் அவர்கள். அப்படி விஷயம் தெரிந்தவர்கள் வழி காட்டினால், இங்கே யாரும் ஜெயிக்கலாம். 

சினிமாவில் வேலைக்கு காசு இல்லை. பேருக்குதான் காசு. லேபிள்தான் இங்கே முக்கியம் என்பதை இந்த சிறு பயணத்தில் தெரிந்து கொண்டேன். சும்மா இருப்பதற்காக படங்கள் நடிக்காமல், பெயர் வாங்குவதற்காக மட்டுமே படங்களில் நடிக்க இருக்கிறேன். இந்த விதத்தில் விக்ரம் சார்தான் என் ரோல் மாடல். இந்த வயதிலும் பாருங்க... எப்படி தேடிக் கொண்டிருக்கிறார். அதைப் போல் பாலா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் பெரும் விருப்பம்.

"ஆரண்ய காண்டம்', "பருத்தி வீரன்', "ஜோக்கர்', "ஐ', "பரதேசி' மாதிரியான கடின உழைப்பு மிக்க படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. அர்த்தமுள்ள ஆக்ஷன் படங்களுக்கும் விருப்பம் உண்டு. நான் டூயட் ஆட மாட்டேன். பஞ்ச் வசனம் பேசினால் எடுபடாது என இப்போது அவசரப்பட்டு பேசி விட முடியாது. ஏனென்றால் நாளைக்கே அது மாதிரியான ஒரு படம் இங்கே நம்மை நிலை நிறுத்தலாம். எந்த வார்த்தையும் நமக்கு எதிரான ஆயுதமாக மாறி விடக் கூடாது.  

ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு நிதானம்... சினிமா நிறைய அனுபவம் தந்திருக்கும் போல...?
நிறைய கற்றுக் கொண்டேன்... நல்ல விஷயங்களுக்காக இன்னும் இன்னும் காத்திருக்கலாம் என்ற பொறுமையை கற்றுக் கொண்டேன். வாய்ப்புகளுக்காக ஓடுகிற போதுதான்... நம் நல விரும்பிகள் யார்? உண்மையான அக்கறை கொண்டவர்கள் யார்? என்ற உண்மை தெரியவருகிறது. 

வழி நடத்துபவர்களுக்கு நன்றி. சில நேரங்களில் நமக்கு பக்கத்தில் இருப்பவர்களை ரோல் மாடல்களாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வாய்த்து விடுவதில்லை. 

அது எத்தனை தவறு என்பதை இந்த சிறு பயணம் உணர்த்தியிருக்கிறது. இன்னும் சில காலம் கடந்து போக இது மாதிரியான அனுபவங்கள்தான் எப்போதைக்குமான தேவை. சினிமா கற்றுக் கொடுத்த பாடம் இது. தேங்க்ஸ் டூ சினிமா.        
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com