கலையாகிறது மணமகள் அலங்காரம்!

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறைதான். அதனால் ஒவ்வொருவருக்கும் திருமணத்தன்று தங்களை திரைப் பிரபலங்களைப் போன்று அலங்காரம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.
கலையாகிறது மணமகள் அலங்காரம்!

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறைதான். அதனால் ஒவ்வொருவருக்கும் திருமணத்தன்று தங்களை திரைப் பிரபலங்களைப் போன்று அலங்காரம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அதற்காக எவ்வளவு வேண்டுமானலும் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்த பொருள் எங்கு கிடைக்கும், நல்ல மேக்கப் செய்ய யாரை அணுகுவது என்பது தெரிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யவும் "த பிரைடல் கைட்' என்கிற ஆன் -லைன் ஷாப்பிங்கை நடத்தி வருகிறார் காவ்யா. இவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"இன்ஜினியரிங் முடித்ததும், இன்போசிஸில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தேன். ஆனால், படிக்கும் காலத்தில் இருந்தே டிஜிட்டல் மார்கெட்டிங்கில் ஏதாவது புதுமையாகச் செய்யவேண்டும் என்ற ஆசை இருந்தது. வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே வலைதளத்தில் பிளாக் ஒன்று தொடங்கி அதில் மற்றவருக்கு பயனுள்ள தகவல்களை எழுத ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் எனக்கு திருமணம் முடிவானதால், என் திருமண அலங்காரத்துக்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் நானே தேட ஆரம்பித்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு விஷயம், நான் போகுமிடமெல்லாம் என்னைப் போன்றே ஆர்வம் உள்ள பெண்களை சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அலங்காரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராகவும் இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை, வீணே நிறைய செலவு செய்ததை அறிந்தேன். பெரும்பாலானவர்கள் இணையத்தில்தான் தங்களுக்கு தேவையானவற்றை தேடித் தேடி வாங்கியதும் தெரிந்தது.

அப்போதே முடிவு செய்துவிட்டேன். இதுதான் எனக்கான களம் என்று. அதிலிருந்து எனது பிளாக்கில் மணப்பெண் அலங்காரத்துக்கு தேவையான அத்தனை தகவல்களையும் எழுத ஆரம்பித்தேன். யார் பெஸ்ட் மேக்கப் ஆர்டிஸ்ட், எங்கு நல்ல ஜுவல்ஸ் கிடைக்கும், அவரவர் விருப்பப்படி பிளவுஸ் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்களையும், அதுவும் அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு எழுத ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. அதன்பிறகு முகநூல் மூலமும் இந்த தகவல்களை பரிமாற ஆரம்பித்தேன். அப்போது, எனது பிளாக்கிற்கும், முகநூலிலும் வந்து தேடிய சிலர், தகவல்களை தரும் நீங்களே அதற்கான சர்வீஸும் தரக்கூடாதா? என்றார்கள்.

அது எனக்கும் உற்சாகத்தைத் தர, நிறைய ஆராய்ச்சிகளுக்கும், தேடல்களுக்கும் பின் இந்தியாவிலேயே முதன்முதலாக TBG (The Bridal Guide) என்று பிரைடலுக்கான ஆன்-லைன் ஷாப் தொடங்கினேன். நல்ல மேக்கப் ஆர்ட்டிஸ்ட், மெஹந்தி ஆர்டிஸ்ட், பேஷன் டிசைனர், ஹேர் ஸ்டைலிஸ்ட், ஜூவல்லரி மேக்கர் என ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் சென்று சந்தித்தேன். ஆரம்பத்தில் யோசித்தவர்களுக்கும் இப்போது என் மீது நம்பிக்கை
வளர்ந்திருக்கிறது.

மணமகளுக்கென்று, தனி பேக்கேஜ் கொடுக்கிறோம். இது அவரவர் பட்ஜெட்டுக்கு தகுந்தபடி இருக்கும். பல் சீரமைப்பும் இதில் அடக்கம். அதாவது முறையான பல் மருத்துவர் மூலம் சிலருக்கு பல்லில் இருக்கும் சின்னசின்ன பிரச்னைகளை எல்லாம் சரிப்படுத்தி, சிரித்தால் அழகான பல்வரிசை தெரியும்படி சீர் செய்வது, நாம் எப்படி திருமணத்திற்கு முன்பு பார்லர் போய் அழகுப்படுத்திக் கொள்ள விரும்புகிறோமோ அதுபோன்று. அடுத்து உடல் எடையை கூட்டியோ, குறைத்தோ காண்பிக்க நியூட்டிரிஷியன் கம் ட்ரைனர், அலர்ஜி ஸ்கின் உள்ளவர்களுக்கு மேக்கப் செய்தால் ஒத்துக்கொள்ளுமா? என்று தெரியாது அவர்களுக்காக காஸ்மாட்டாலஜிஸ்ட் , டெர்மாட்டாலஜிட் என இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எங்களுடன் இணைந்தும், தனித்தனியாகவும் செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் முறையாக படித்தவர்கள். அவரவர் துறையில் அவரவர் பெரியளவில் இருப்பவர்கள்.

பிரைடல் மேக்கப் என்று எடுத்துக் கொள்ளும்போது நமது பெண்கள் செய்யும் தவறு என்னவென்றால், திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்போ அல்லது 4 நாட்களுக்கு முன்போதான் பார்லருக்கோ, பியூட்டிஷியனைப்பற்றி தேடவோ செய்வார்கள். அப்படி செய்யாமல், ஒரு மாதம் இருக்கும்போதோ அல்லது குறைந்தது பதினைந்து நாட்களுக்கு முன்போ போய் தங்களுக்கு என்ன தேவை, எதுமாதிரி மேக்கப் செய்யலாம் என்பதை எல்லாம் ஆலோசிக்க வேண்டும்.

இதைத்தவிர, அழகாக சேலை கட்டுவது எப்படி, தினமும் தங்களைத்தாங்களே எப்படி சிம்பிள் மேக்கப் மூலம் அழகாக காண்பிப்பது, ஹேர் ஸ்டைல், சிலருக்கு முகத்தில் சின்ன சின்ன தழும்புகள் இருக்கும். அவர்கள் வெளியே செல்லும்போது அதை எப்படி தெரியாதவாறு மேக்கப் செய்வது, புதிய மேக்கப் சாதனங்களை எப்படி பயன்படுத்துவது போன்ற ஆலோசனை வழங்கும் இரண்டு மணி நேர ஒர்க்ஷாப் நடத்துகிறோம்.

இதில் அதிக வரவேற்பு இருப்பது சேலை கட்டும் ஒர்க்ஷாப்க்குத்தான். இளம் பெண்கள் முதல் முதியவர்கள் கூட இந்த சேலைகட்டும் ஒர்க்ஷாப்பில் கலந்து கொள்கிறார்கள். இப்போதைய பெண்களுக்கு சேலை கட்ட தெரியாதே தவிர, சேலை கட்டிக் கொள்வது ரொம்ப பிடிக்கும். சேலை கட்டுவது என்று எடுத்துக் கொண்டால் சேலையை எப்படி வெவ்வேறு ஸ்டைலில் கட்டுவது, எப்படி "பின்' பண்ணுவது, சேலையை எப்படி பின் பண்ணிட்டு வண்டி ஓட்டுவது, பின் பண்ணிட்டு எப்படி ஒரு பஃபேயில் போய் சாப்பிடுவது. ஹெவி வெயிட் சேலையை எப்படி கட்டுவது, ஒல்லியாக தெரிய எப்படி கட்டுவது, எங்கே டக்-இன் செய்வது என்பதை எல்லாம் கற்றுக் கொடுப்பதோடு, பிராக்டிகல்ஸும் இருக்கும்'' என்றார்.
- ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com