அடுத்த மேரி கோம்?

மனதில் உறுதியிருந்தால் வானத்தையும் வசப்படுத்தலாம் என்பதற்கு இன்னொரு எடுத்துக் காட்டுதான் ஜமுனா போரோ.
அடுத்த மேரி கோம்?

மனதில் உறுதியிருந்தால் வானத்தையும் வசப்படுத்தலாம் என்பதற்கு இன்னொரு எடுத்துக் காட்டுதான் ஜமுனா போரோ. அஸ்ஸாமைச் சேர்ந்தவர். ஜமுனா களத்தில் இறங்கும் போது அந்தக் களம், அந்தத் தருணம் அவருக்குச் சொந்தம் என்ற திடத்துடன் இறங்குவது ஜமுனாவின் முகத்தில் பளிச்சென்று தெரிகிறது. அவர் எதிராளி மீது இறக்கும் குத்துகள் அதற்கு சாட்சியம் வகிக்கின்றன. இந்தியாவின் நம்பிக்கைகளில் ஒன்றாகவும் மாறிப்போயிருக்கும் ஜமுனா தனது வெற்றி பாதை பயணம் குறித்து அவரே சொல்கிறார்:

"அஸ்ஸாமில் பெல்சிரி கிராமத்தில் பிறந்தவள் நான். எனக்கு ஒரு சகோதரி ஒரு சகோதரன். எனக்கு பத்து வயதாகும் போது எனது தந்தை காலமானார். அதற்குப் பிறகு என் அம்மாதான் எங்களுக்காக உழைக்க ஆரம்பித்தார். அம்மா சாலை ஓரம் கடை விரித்து காய்கறி விற்பவர். நான் கடைக்குட்டி. பத்தொன்பது வயதாகிறது. குத்துச் சண்டையில் இன்று நான் சர்வதேச அரங்கில் வீராங்கனை. இந்தியாவிற்காக பல சர்வதேச பதக்கங்களை வென்றிருக்கிறேன்.

சிறுமியாக இருந்த போது என் வயதை ஒத்த சிறுவர்கள் "உஷு' பயிற்சி செய்வார்கள். அதை பார்த்துத்தான் "உஷு' மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சீன தற்காப்பு வீரக்கலையான "உஷு' படிக்கவே விருப்பப்பட்டேன். நானும் பயிற்சி செய்ய தொடங்கினேன். மாவட்ட அளவில் நடந்த போட்டியில் முதலாவதாக வந்தேன். முறையான பயிற்சி நிலையங்கள் அப்போது இல்லை. எனது பயிற்சியாளர்கள் எனது திறமையைக் கண்டு இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சிப் பள்ளியில் குத்துச் சண்டைப் பிரிவில் சேர்த்துவிட்டார்கள். பிறகு குத்துச் சண்டை பிடித்துப் போகவே அதற்கு மாறினேன்.

ஐம்பத்திரெண்டு கிலோ பிரிவில் 2010- இல் தமிழ் நாட்டின் ஈரோடில் நடந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன். அடுத்த ஆண்டு கோவையில் நடந்த தேசிய போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தது. எனது முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும், வீட்டின் பொருளாதார நிலைமை மாறவே இல்லை. இப்போதும் நேரம் கிடைக்கும் போது அம்மாவுடன் சேர்ந்து காய்கறி விற்பேன்.

எல்லாம் 2013-இல் இருந்து தொடங்கியது. செர்பியாவில் 2013-இல் நடந்த போட்டியிலும், ரஷ்யாவில் 2014-இல் நடந்த குத்துச்சண்டைப் போட்டியிலும் எனக்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்தன. 2015-இல் தாய்பெய்யில் நடந்த உலக குத்துச் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் மட்டும்தான் கிடைத்தது.

அம்மா எப்போதும் போல் வீதி ஓரம் காய்கறி கடை விரித்து அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தின் பசியைப் போக்கி வருகிறார். அவர் எங்களுக்காகக் கஷ்டப்படுவதை பார்த்துத்தான், குத்துச் சண்டைப் போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற லட்சிய வெறி எனக்கு ஏற்பட்டது.

எனது கனவு, சர்வதேச களத்தின் அடுத்த கட்டமான 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும் என்பதுதான். பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தான் எனது மானசீக வழிகாட்டி. மூன்று குழந்தைகளுக்குத் தாயான மேரி கோம் இன்றைக்கும் குத்துச் சண்டையில் பிரபலமாக இருக்கிறார். அவரது ஒவ்வொரு குத்தும் பலமான தாக்கத்தைத் தரும். குத்துச் சண்டை போட்டியின் போது எதிராளியை குத்திச் சாய்க்க வேண்டும் என்றுதான் களத்தில் இறங்குவேன். அது பயிற்சியின் போது எதிராளியாக ஆண் இருந்தாலும் சரி ... வெற்றியை எனக்காக உறுதி செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பேன் என்றார்.''
- பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com