எதிர்பார்த்து செய்தால் அது சேவையல்ல! -கவிதா

படித்தோம்... நாலு காசு சம்பாதிக்கிறோம்... தான் தன் சுகம்... குடும்பத்தினர் நலம் என்று ஒதுங்கி வாழும் மனிதர்களிடையே வித்தியாசமாக இருப்பவர் திருப்பூரைச் சேர்ந்த கவிதா.
எதிர்பார்த்து செய்தால் அது சேவையல்ல! -கவிதா

படித்தோம்... நாலு காசு சம்பாதிக்கிறோம்... தான் தன் சுகம்... குடும்பத்தினர் நலம் என்று ஒதுங்கி வாழும் மனிதர்களிடையே வித்தியாசமாக இருப்பவர் திருப்பூரைச் சேர்ந்த கவிதா. "இனி ஒரு விதி செய்வோம்..' என்ற அறக்கட்டளையை சில மாதங்களுக்கு முன் தொடங்கி, தன்னால் முடிந்த சமூக சேவைகளை கவிதா கோவை, திருப்பூர், குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் செய்து வருகிறார். பாரதியின் "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற வரிகளால் கவரப்பட்ட கவிதா, அந்த திசையில் பயணிப்பது அந்த வட்டார நலிந்தவர்களுக்கு ஓர் ஆசுவாசமாக ஆறுதலாக சுமைதாங்கியாக அமைந்துள்ளது.

கவிதா மனம் திறக்கிறார்:
"பள்ளியிலும் சரி.. கல்லூரியிலும் சரி நல்ல பல கருத்துக்களை படிக்கிறோம்.. கேட்கிறோம். எத்தனை பேர் படித்ததை கேட்டதை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துகிறார்கள். வீட்டில் என்ன நடக்கிறது.. அக்கம் பக்கம் என்ன நடக்கிறது.. என்று தெரிந்து கொள்ள யாருக்கும் அக்கறை இல்லை.. அறிமுகமான ஒருவரைப் பார்த்தால் புன்னகைக்கக் கூட தோன்றுவதில்லை. வாழ்க்கை இயந்திர கதியாகி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. அதை உணர்ந்த நான், நலிந்தவர்களுக்கு நல்லது செய்வோம் .. பசியால் வாடுபவர்களுக்கு முடிந்த உணவுகளை வழங்குவோம்... உணவு தர மனதுள்ளவர்களையும் உணவுத் தேவை உள்ளவர்களையும் இணைக்கும் பாலமாகவும் இருப்போம் என்று செயல்பட்டு வருகிறேன்.

"எனது சொந்த ஊர் கோவை. அவிநாசிலிங்கம் பல்கலை கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன். திருமணமானதும் திருப்பூருக்கு இடம் மாற வேண்டியிருந்தது. கணவர் ஜனார்த்தனன் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர். உடை தொடர்பான தொழில் எங்களுக்குச் சொந்தமாக உண்டு. இரண்டு மகன்கள். பத்து வயதில் ஒரு மகன். நான்கு வயதில் இன்னொருவன்.

ஃபேஷன் டிசைனிங்கும் எனக்கு வரும். அதில் வருவாயும் உண்டு. ஆதரவில்லாமல் சாலை ஓரங்களில் வாழும் மக்களுக்கு உணவுகளை விநியோகித்து வருகிறேன்'.

"முதலில் தனி மனுஷியாகத் தொடங்கிய பணியில் மேலும் சிலரை ஈடுபடுத்தினால் குறைந்த நேரத்தில் அதிகம் பேரை உதவிகள் சென்றடையும் என்று எனக்குத் தோன்றியதால் "இனி ஒரு விதி செய்வோம்' அமைப்பினைத் தொடங்கினேன். ஒத்த கருத்தும் பிறருக்கு உதவ மனமிருக்கும் நண்பர்களை இணைத்தேன். கூட்டு முயற்சிக்கு இருக்கும் சக்தியும் வீச்சும் அசாதாரணமானது என்பதை கண்கூடாகக் கண்டோம்.

உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவு கிடைக்கும் வசதியைச் செய்யவே "உணவு வங்கி'யை ஆரம்பித்தோம். திருப்பூர் நகரின் முக்கிய பகுதிகளில் நான்கு குளிர்சாதனப் பெட்டியை வைத்துள்ளோம். வீட்டில் மிஞ்சிய உணவு வகைகளை இந்தப் பெட்டியில் வைக்கலாம். உணவு தேவைப்படுபவர்கள் யாரிடமும் பிச்சை கேட்காமல், ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

ஆந்திராவில் பரவி வரும் "அன்புச் சுவர்' பற்றி தெரிந்ததும் தமிழகத்தில் இரண்டாவதாக அன்புச் சுவரை குமாரபாளையத்தில் தொடங்கியுள்ளேன். தேவையில்லாத எந்தப் பொருளையும் அன்புச் சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் தட்டுகளில் வைத்து விட்டால், அந்தப் பொருளைத் தேவைப்படுபவர்கள் இலவசமாக எடுத்துச் சென்றுபயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் திருப்பூரில், கோவையிலும் அன்புச் சுவர்களைத் தொடங்க உள்ளோம்.

திருப்பூர் மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் ஏழை நோயாளிகளுக்கு பழங்கள், ரொட்டிகள் தந்து உதவுகிறோம். ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு எங்கள் அமைப்பின் மூலம் உணவு தரப்படுகிறது. கோவையில் இருக்கும் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு பொழுது போக வரைப்படம் வரையும் புத்தகங்கள், பொம்மை வாங்கிக் கொடுக்கும் ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

வாழ்க்கையில் வசதியில்லாமல் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் சிறுமிகள் குறித்த விபரங்கள் சேகரித்து படிப்பினைத் தொடர பண உதவிகள் செய்து வருகிறோம். பெற்றோரிடம் குழந்தைகளின் படிப்பை நிறுத்தாதீர்கள் என்று விளங்க வைக்கிறோம். எங்களது சேவைகளைக் கண்டு திருப்தி அடைந்த பலர் நாங்கள் கேட்காமலேயே பண உதவி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். எனது வருவாய், கணவர், அவர் வீட்டார் செய்யும் பண உதவிகளை வைத்துத்தான் இந்த சேவைகளை செய்ய முடிகிறது.

"கை காசு போட்டு.. சமூக சேவை செய்வதினால் காசு விரயம் ஆகிறதே... எப்படி இந்த சேவைகளுக்கு நேரம் ஒதுக்குகிறாய்...' என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். பலனை எதிர்பார்த்து செய்தால் அது சேவையல்ல... நம்மைக் கடவுள் நல்லபடியாக வைத்திருக்கிறார். அதற்கு நன்றி சொல்லும் விதத்தில் நம்மை கஷ்டப்படுத்திக் கொள்ளாமல் நலிந்தவர்களுக்காக நாலு காசு செலவழிப்பதில் நமக்கு பெரிதாக நஷ்டம் வந்துவிடாது. ஆனால் மன நிறைவு ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஒதுக்கிவிடுவதால் எத்தனை பேர் வீதிக்கு வந்துவிடுகிறார்கள். உபரியாக இருப்பதில் கொஞ்சம் பிறருக்கு ஒதுக்குவதால் நலிந்தவர்களின் துயரம் குறைக்கப்படுகிறதே..' என்று விளக்கம் சொல்கிறேன். இந்த சேவையைச் செய்ய திருப்பூர், கோவை குமாரபாளையத்தில் ஒரு இளைஞர் கூட்டமே இருக்கிறது. அவர்கள் தந்து வரும் ஆர்வப் பங்களிப்பு, உடல் உழைப்புதான் இந்த சேவைகளை முழு நேர வேலையாகச் செய்யத் தூண்டி செயல்படவைக்கிறது'' என்கிறார் கவிதா.
- பனிமலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com