சமையல்.... சமையல்.... சமையல்....

பேரீச்சம்பழ கேக், குடைமிளகாய் ஃப்ரைட் ரைஸ், வெந்தயக்கீரை கட்லெட், கோபி மஞ்சூரியன்

பேரீச்சம்பழ கேக்

தேவையானவை:
பேரீச்சம் பழத் துண்டுகள் - கால்கிலோ
சீனி - 200 கிராம்
முட்டை - 6
வெண்ணெய் - 100 கிராம்
பால் - 100 மி.லி
மைதா மாவு - கால் கிலோ
 பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
விரும்பிய எசன்ஸ் - தேவையான அளவு.
செய்முறை:  முதலில் முட்டைகளை உடைத்து மஞ்சள், வெள்ளைக் கருவை தனியே பிரித்துக் கொள்ளவும். பேரீச்சம் பழத்துண்டுகளை வெந்நீரில் ஊறவைத்து, சிறிது நேரம் கழித்து தனியே எடுக்கவும். பின்னர் முட்டை  மஞ்சள்  கருவுடன் சீனி,  வெண்ணெய்,  எசன்ஸ், மைதா, பால் கலந்து  அதன் பிறகு முட்டை வெள்ளைக் கருவை சேர்க்கவும். ஓவன் டிரேயில் சிறிது வெண்ணெய் தடவி அதில் மைதாமாவை தூவவும்.  இப்போது கலவையை ஓவனில் வைத்து சுமார் அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பரிமாறலாம். பேரீச்சம்பழ கேக் தயார்.

குடைமிளகாய் ஃப்ரைட் ரைஸ்

தேவையானவை:
பாசுமதி அரிசி - கால்கிலோ
குடைமிளகாய் - 3
 பட்டை, ஏலம், கிராம்பு - சிறிதளவு
கடலைபருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
பூண்டு - 2 பல்
 மல்லி - 1 தேக்கரண்டி
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 50 மி.லி
செய்முறை:  பாசுமதி அரிசியை  நீரில்  ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, ஏலம், கிராம்பு, மல்லி, கடலைபருப்பு ஆகியவற்றை நன்கு வறுத்து பொடியாக்கவும். துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதில் நறுக்கிய குடைமிளகாய், பூண்டு சேர்க்கவும்.  பின்னர்,  வேகவைத்த துவரம் பருப்பு, ஊறவைத்த அரிசி ஆகியவற்றை சேர்த்து இருமடங்கு நீர், சிறிது உப்பு கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும். அதன்பிறகு இறக்கி அதில் மல்லி இலை போட்டு பரிமாறவும். குடைமிளகாய் ஃப்ரைட் ரைஸ் தயார்.

வெந்தயக்கீரை கட்லெட்

தேவையானவை:
 கடலைப்பருப்பு - கால் கிலோ
 வெந்தயக்கீரை - 1 கிண்ணம்
 பிரட் துண்டுகள் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
 சிறிய வெங்காயம் - 100 கிராம்
முட்டை - 2
கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
 மல்லி இலை - சிறிது
 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
 செய்முறை: கடலைப்பருப்பை நன்கு வேகவைக்கவும். நறுக்கிய வெந்தயக்கீரையை வேக வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது, பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும். கடலைப்பருப்பு, வெந்தயக்கீரையை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதை வதக்கிய கலவையில் சேர்த்து கரம் மசாலாவையும், உப்பையும் சேர்க்கவும். வேக வைத்த கலவையை ஆற வைத்து கட்லெட் போல துண்டுகளாக்கவும்.  பின்னர் முட்டையை உடைத்துக் கொள்ளவும். கட்லெட் துண்டை பிரட்தூளில் புரட்டி முட்டையில்  தோய்த்து எடுத்து தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். வெந்தயக்கீரை கட்லெட் ரெடி.

கோபி மஞ்சூரியன்

தேவையானவை: 
காலிஃப்ளவர்  - 1
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
கார்ன்ஃபிளவர் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
 இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
உப்பு , மல்லி இலை, எண்ணெய் - தேவைக்கேற்ப
மைதா - கால் கிலோ
செய்முறை:  காலிஃப்ளவரை  சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கவும்.  பின்னர், நீரில் உப்பு கலந்து நறுக்கிய பூக்களைப்  போட்டு அரைப்பதமாக வேகவைக்கவும். ஒரு கோப்பையில் கார்ன்ஃப்ளவர், மைதா உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் சேர்த்து வடைபதத்தில் மாவை பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையில்  வேகவைத்த காலிஃப்ளவர் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும்  காலி
ஃப்ளவர் கலவையை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்.  சீரகம்,  மிளகாய் வற்றல்  ஆகியவற்றை லேசாக எண்ணெய்யில் வதக்கி கலவையில் சேர்த்து மல்லி இலையை தூவி பரிமாறவும். சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.

பப்பாளி - கேழ்வரகு அப்பம்

தேவையானவை:
 கேழ்வரகு மாவு - 1 கிண்ணம்
வெல்லம்  (அ) கருப்பட்டி - கால் கிலோ
பப்பாளிக்காய்  துண்டுகள் - 100 கிராம்
துருவிய தேங்காய் - கால் கிண்ணம்
 ஏலக்காய் , நெய் - தேவைக்கேற்ப
எண்ணெய் - 250 மி.லி
உப்பு - சிறிதளவு
செய்முறை:  வாணலியில் நெய்விட்டு பப்பாளி துண்டுகளை வதக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, தேங்காய் துருவலை சேர்க்கவும். வெல்லத்தை நீர்விட்டு காய்ச்சி அதில் ஏலக்காய், மாவு கலவை, உப்பு கலந்து நீர்விட்டு கரைக்கவும். தோசை மாவு பதம் வந்ததும் பப்பாளி வதக்கலைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
 வாணலியில் எண்ணெய்விட்டு அப்பம் மாவை கரண்டியில் எடுத்து எண்ணெய்யில் போட்டு சிவக்கவிட்டு எடுக்கவும். சுவை மிகு  பப்பாளி - கேழ்வரகு அப்பம் தயார்.

மாங்காய் - முட்டைப் பொரியல் 

தேவையானவை:
 புளிப்பு இல்லாத மாங்காய் - 1
 பச்சைமிளகாய் - 5
முட்டை - 5
 நெய் - 1 மேசைக்கரண்டி
 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
 கொத்துமல்லி -  சிறிது
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை: முதலில் மாங்காயை  தோல் சீவிவிட்டு துருவிக் கொள்ளவும். பச்சைமிளகாய், கொத்துமல்லி, உப்பு கலந்து மிக்ஸியில்  விழுதாக அரைக்கவும்.  இந்த கலவையை  மாங்காயுடன் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய்விட்டு காயவிடவும். பின்னர் முட்டைகளை  உடைத்து ஊற்றி நன்கு கிளறி அதில் 1 தேக்கரண்டி நெய் சேர்க்க வேண்டும்.  பொரியல்  பதம் வந்ததும் மாங்காய்  கலவையில் மிளகாய்த்தூள் கலந்து முட்டையுடன் சேர்த்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிறிது நேரத்தில் பொரியலை கிளறி இறக்கவும்.  மாங்காய் முட்டைப் பொரியல் தயார்.  இதை சாதத்தில் பிசைந்தும்  சாப்பிடலாம்.

இந்தவார சமையல் குறிப்புகளை வழங்குபவர் டி.ஞானமாலா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com