முடியாதது எதுவும் இல்லை! -தீயணைப்பு வீராங்கனை: ஹர்ஷினி

கொழுந்து விட்டு எரியும் தீயுடன் போராடி அணைப்புதும் உயிர்களைக் காப்பதும் ஒரு தீரச்செயல்தான். அந்த வகையில்
முடியாதது எதுவும் இல்லை! -தீயணைப்பு வீராங்கனை: ஹர்ஷினி

கொழுந்து விட்டு எரியும் தீயுடன் போராடி அணைப்புதும் உயிர்களைக் காப்பதும் ஒரு தீரச்செயல்தான். அந்த வகையில், தீயணைப்பு துறையைப் பொருத்தவரை இதுவரை ஆண்கள்தான் இருந்து வந்தார்கள்... இப்போது அந்தத் துறையில் பெண்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீயணைப்பு வீரர்களை நாட்டிற்காகத் தயார் செய்யும் தேசிய பயிற்சிக் கல்லூரி நாக்பூரில் உள்ளது. அதன் நாற்பத்தாறு ஆண்டு சரித்திரத்தில் பெண்கள் யாரும் தீயணைக்கும் நுட்பம் குறித்து படிக்க வரவில்லை. ஹர்ஷினி நாக்பூரிலுள்ள அந்தக் கல்லூரியில் படிக்க கால் எடுத்து வைத்த முதல் பெண். இது நடந்தது 2002 }இல். ஹர்ஷினி படித்து முடித்ததும் ஓர் ஆண்டு டில்லியில் பணி புரிந்து, பிறகு எரிபொருள் மற்றும் இயற்கை வாயு குழுமத்தில் 2006}இல் பணியில் சேர்ந்தார். ஹர்ஷினி தனது அனுபவங்களை விவரிக்கிறார்:

"தீயணைப்பு கல்லூரியில் படிக்க என்னைத் தேர்நதெடுத்தபோது அந்தப் படிப்பைப் படிக்கும் முதல் பெண் நான்தான் என்று எனக்குத் தெரியாது. முதல்நாள் கல்லூரியில் எங்கு பார்த்தாலும்.. ஆண்கள். ஆண்களைத்தவிர வேறு யாரும் இல்லை. நான் ஒருத்திதான் பெண். ஆனால் எனக்கு எந்தவித பயமும் தோன்றவில்லை. அந்தக் கல்லூரியின் சிவப்பு வண்ண கட்டடத்தின் மீது என் கண், கவனம் பதிந்திருந்தது. அது சவால்கள் நிறைந்த களமாக எனக்குத் தோன்றியது. முதல் நாளே கல்லூரியில் நேர்முகத் தேர்வுக்கு சென்ற போது, "நீங்கள் ராணுவத்திலோ, விமானப்படையிலோ சேர பாருங்கள்... அங்கே பெண்கள் பயிற்சி பெறுகிறார்கள்.. இங்கு முழுக்க முழுக்க நூறு சதவீதம் ஆண்கள் மட்டும்தான்'' என்று வெளிப்படையாகச் சொன்னார்கள். அப்படி சொன்னது என்னை அந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற உறுதியை அதிகரித்தது. 2002 வரையில், அந்த கல்லூரி வளாகத்தில் எந்தப் பெண்ணும் நுழையவில்லை. அப்படி வந்த முதல் பெண்ணான நான் மூன்று ஆண்டுகள் படிப்பைத் தொடர்ந்தேன். எனது சொந்த ஊர் நாக்பூர் என்பதாலும், கல்லூரி நாக்பூரில் இருந்ததாலும் அந்தக் கல்லூரியின் சேர்ந்தேன்.

நேர்முகத் தேர்வு நடக்கும் நாளில், ஒரே ஒரு பெண் வந்திருக்கிறாள் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவ... யார் அந்தப் பெண்? என்று என்னைப் பார்க்க மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து போனார்கள். கல்லூரி நாட்களிலும் எனக்குத் தெரியாமலே என்னைப் பல கண்கள் நோட்டம் விட்டு கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

கல்லூரியில் சேர்ந்தது ஒரு சாதனை என்றால் அந்தப் படிப்பிற்கு என்னைத் தகுதியுள்ளவளாக மாற்றிக் கொண்டது இன்னொரு சவாலாக அமைந்தது. படிப்பின் ஒரு பகுதியாக உடல் பயிற்சி, அணிவகுப்பு, அடிக்கடி நடக்கும். அவற்றிற்கு சரியான நேரத்திற்குச் சென்றுவிடுவேன். தாமதமாகி சென்றால், "இந்தப் பெண்களே இப்படித்தான்' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல ஆரம்பிப்பார்கள். எனக்கு அடுத்தபடியாக படிக்க வேறு எந்தப் பெண்ணும் வந்தால் அந்தப் பெண்ணையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். பேசுவார்கள் என்பதனால், மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன்.

தீயணைப்பிற்குப் பயன்படுத்தும் ரப்பர் குழாய்கள் நல்ல பாரம் உள்ளவை. அதில் தண்ணீர் நிரப்பப்பட்டால் அதன் எடை இன்னும் அதிகமாகும். அதைக் கையாளும் போது நம் கைகள் அந்தப் பாரத்தைத் தாங்க வேண்டும். மாதிரி தீயணைப்பு பயிற்சிகளை செய்யும் போதும் மிகவும் சிரமப் படவேண்டும். ஆனால் ஏனைய ஆண் பயிற்சியாளர்களுக்கு இணையாக பயிற்சிகளை செய்து முடித்தேன். தேவை வரும் போது பெண்ணும் ஆணுக்கு சமமாகப் பணி புரிவாள் என்பதை நிரூபிக்கவே மன உறுதியுடன் பயிற்சியில் கலந்து கொண்டேன்.

அந்தக் கல்லூரியில் படிப்பவர்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும். அதுதான் அந்தக் கல்லூரியின் விதிமுறை. அங்கே படிக்கும் ஒரே ஒரு பெண் நான் என்பதால், கல்லூரி முடிந்ததும் வீட்டிற்குப் போக மத்திய அரசின் உள்துறையிடம் ஸ்பெஷல் அனுமதி வாங்க வேண்டியிருந்தது. பள்ளிக் காலத்தில் தேசிய சாரணர் படையில் இருந்த போது, இந்தியாவின் விமானப்படையில் முதல் பெண் விமான ஓட்டியான ஷிவானி குல்கர்னி பற்றி நான் வாசித்திருக்கிறேன். அவர்தான் என் ரோல் மாடலாக லட்சியப் பெண்மணியாக இருந்தார். ராணுவ சீருடையில் அவர் கம்பீரமாக காட்சி தந்தது என்னுள் பதிந்திருந்தது. நானும் சீருடை அணிய வேண்டும் என்ற தாகத்தை என்னிடம் தோற்றுவித்தது.

தீயணைப்புத் துறையில் தீரத்திற்கும் சவால்களுக்கும் எந்தக் குறையுமில்லை. என்னால் 2005 -இல் டில்லியில் நடந்த அசுர தீ விபத்தை மறக்க முடியாது.

தீபாவளி நேரம். டில்லி சாஸ்திரி நகரில் இருந்த மிகப் பெரிய காலனி ஷோரூமில், யாரோ பற்ற வைத்த ராக்கெட் போய் விழ... கடையில் தீ பற்றி பரவியது. தகவல் வந்ததும் உடனே விரைந்தோம். அந்த ஷோரூம் அமைந்திருந்த கட்டடம் தீயின் வெப்பம் தாளாமல் விரிசல் விட ஆரம்பித்தது. நாங்கள் எதிரில் இருக்கும் கட்டடத்தில் ஏறி அங்கிருந்து தண்ணீர் பாய்ச்சி தீயைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால் தீயை மட்டுப்படுத்த முடியவில்லை. தீயும் கட்டடம் முழுவதும் பரவத் தொடங்கியது. உயிரைப் பணயம் வைத்து தீ எரிந்து கொண்டிருக்கும் கட்டடத்தில் ஒரு சுவரை இடித்துத் தள்ளி உள்ளே நுழைந்தோம். ஆறு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து படிப்படியாக தீயை முழுமையாக அணைத்தோம்.

தீயணைப்பு கல்லூரியில் படிக்கும் போது ஆசிரியர்கள் பெண் என்பதற்காக எந்த சலுகைகளும் தரவில்லை. ஆண் மாணவர்களுக்குச் சமமாக எல்லா நடைமுறை பயிற்சிகளும் எனக்குத் தரப்பட்டது. மூன்று ஆண்டு கல்லூரி நாட்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. "முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' என்பதுதான் என்னை இயக்கிக் கொண்டிருந்தது'' என்னும் ஹர்ஷினி, தனது நண்பரான உரங்கர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com