எல்லாருக்கும் பொதுவானவர்!

"இனம், மொழி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அதிபராகப் பணியாற்றுவேன்'' என்று தனது முதல் உரையிலேயே கவனம் ஈர்த்துள்ளார்
எல்லாருக்கும் பொதுவானவர்!

"இனம், மொழி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அதிபராகப் பணியாற்றுவேன்'' என்று தனது முதல் உரையிலேயே கவனம் ஈர்த்துள்ளார் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹாலிமா யாக்கோப். சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட எந்த வேட்பாளரும் தகுதி பெறாத நிலையில் ஹாலிமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹாலிமா மலாய் இஸ்லாமியர்கள் என்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு சிங்கப்பூர் விடுதலை பெற்ற சமயத்தில் 1965 முதல் 1970 வரை யூசுஃப் இஷ்ஹாக் என்ற மலாய் இஸ்லாமியர் அதிபராக பணியாற்றினார். 47 ஆண்டுகளுக்கு பிறகு அதே இனத்தைச் சேர்ந்த ஹாலிமா அதிபராகப் பதவியேற்றுள்ளார். 
63 வயதாகும் ஹாலிமாவுக்கு இந்த உயரம் எளிதில் கிடைத்துவிடவில்லை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தைக்கும், மலாய் தாய்க்கும் பிறந்தவர் ஹாலிமா. காவலாளியாக பணியாற்றி வந்த ஹாலிமாவின் தந்தை சிறுவயதிலேயே மாரடைப்பால் காலமானார். ஹாலிமாவுடன் சேர்த்து 5 குழந்தைகளையும் அவர் அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்தார். தந்தை காலமானபோது ஹாலிமாவுக்கு 8 வயது. தந்தையின் மறைவுக்குப் பின்னர் வறுமை அவர்களைச் சூழ சிறு வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார் அவரின் அம்மா. ஒரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்பாக சாப்பாட்டு கடை வைத்திருந்தார் ஹாலிமாவின் தாய். பள்ளிக்குச் செல்லும் முன்பு அம்மாவுக்கு தேவையான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு செல்வது ஹாலிமாவின் வழக்கம்.
பள்ளிப் படிப்பை முடித்ததும் சட்டப்படிப்பை முடித்து சிங்கப்பூர் பார் கவுன்சிலில் பதிவு பெற்று பணியாற்றினார். இவருக்கு சட்டப் பல்கலைக்கழகம் கெüரவ டாக்டர் பட்டமும் கடந்த ஆண்டு அளித்துள்ளது. அதன் பின்பு தேசிய தொழிற்சங்க காங்கிரஸில் பணியைத் தொடங்கி, அதன் துணைத் தலைமைச் செயலாளர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளை தொழிற்சங்கத்தில் வகித்தார். சிங்கப்பூர் தொழிலாளர் படிப்புகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டு அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்தார் ஹாலிமா. 2011-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சமூக மேம்பாட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சராகவும், சமுதாய மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறையின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக 2013-ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டதால் சபாநாயகர் பதவியையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அதிபர் தேர்தலில் இவரை எதிர்த்து 4 பேர் போட்டியிட்டனர். ஆனால் இவரைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே, போட்டியின்றி ஹாலிமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சந்தோஷ தருணங்களை குறிப்பிடும் அதே சமயத்தில், ஹாலிமாவுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி ஹாலிமா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. 
50 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட சிங்கப்பூரில், சீன வம்சவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஹாலிமா அதிபராகப் பொறுப்பேற்றுள்ளது சிறுபான்மையினருக்கு குதூகலத்தை அளித்துள்ளது. சிறுபான்மையினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்று அவர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஆனால் தான் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, அனைத்து சிங்கப்பூர் குடிமக்களுக்கும் பொதுவான அதிபராக பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார் ஹாலிமா.
அதிபராக பொறுப்பேற்று அவர் பேசுகையில், "பன்முக கலாசாரத்துக்கும் பல இனவாதங்களும் ஒன்றிணைய உள்ளதால் இது சிங்கப்பூர் மக்களுக்கு பெருமை தரும் தருணம். போட்டியின்றி நான் தேர்வு செய்யப்பட்டாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற அர்பணிப்பு என்னிடம் இருந்து மாறாது.
திறமை, தகுதிக்கு முன்னுரிமை என்ற நமது அமைப்பின் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அது இல்லாமல் இன்று நான் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது!
அதிபர்களை ஜாதி, மத, இன வேறுபாடின்றி  சிங்கப்பூர் குடிமக்கள் தேர்ந்தெடுக்கும் நாளைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்'' என்றார்.
- ஜெனி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com