டென்னிஸ் உலகின் முடிசூடா ராணி!

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 209 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தவர்.
டென்னிஸ் உலகின் முடிசூடா ராணி!

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 209 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தவர். ஒற்றையர் பிரிவில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 13, கலப்பு இரட்டையர் பிரிவில் 7 என மொத்தம் 25 கிராண்ட்ஸ்லாம்களை வென்றவர்.

அத்துடன், ஆண்டுதோறும் தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டிபிள்யூடிஏ உலக டூர் பைனல்ஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் 2 முறையும், இரட்டையர் பிரிவில் 3 முறையும் சாம்பியன் பட்டங்களையும், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியவர்.

இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ்.

இளமைக் காலம்: மத்திய ஐரோப்பாவில் உள்ள செக்கோஸ்லோவியாவில் கரோல் ஹிங்கில், மெலானி மோலிட்ரோவாவுக்கு  கடந்த 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி பிறந்தார் மார்டினா ஹிங்கிஸ். தாய், தந்தை இருவருமே டென்னிஸில் வீரர்கள். இதனால், குழந்தைப் பருவத்திலேயே டென்னிஸ் மீதான காதல் மார்டினாவுக்குள் துளிர்ந்தது.

அவரை உலகம் போற்றும் டென்னிஸ் வீராங்கனையாக்க வேண்டும் என்று அவரது தாயும் கனவு கண்டார். தனது 2 வயதில் டென்னிஸ் பந்தையும், மட்டையையும் வைத்து விளையாடத் தொடங்கினார் மார்டினா. 4 வயதில் பல பேர்களை எதிர்கொள்ள வேண்டிய போட்டியில் முதன்முதலில் விளையாடினார். இவர் 6 வயதை எட்டும்போது பெற்றோர் விவாகரத்து பெற்றனர். அதைத் தொடர்ந்து தாயாருடன் 7 வயதில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றார். அங்கு, இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமைப் பெற்றார்.

12 வயதில் பட்டம்: கடந்த 1993-ஆம் ஆண்டில் நடைபெற்ற ப்ரெஞ்ச் ஓபன் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் மார்டினா. அப்போது அவருக்கு வயது 12. அதைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டில் தனது 14 வயதில் மதிப்புமிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று மீண்டும் சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் முன்னாள் சாம்பியன் மேரி பியர்ûஸ வீழ்த்தி 16 வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

இதன்மூலம், இருபதாம் நூற்றாண்டில் மிக இளம் வயதில் ஒற்றையர் மகளிர் பிரிவில் கிராண்டஸ்லாம் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்தார். 

ஓராண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்: ஆஸ்திரேலியா ஓபன், அமெரிக்கா ஓபன், பிரெஞ்ச் ஓபன் (களிமண் தரைத்தளம்), விம்பிள்டன் ஓபன் ஆகியவற்றில் கடந்த 1998-ஆம் ஆண்டில் மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகைத் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

ஓய்வை அறிவித்த பிறகும் டென்னிஸ் மீதான தீராத காதலால் மீண்டும் 2005-ஆம் ஆண்டில் டென்னிஸ் உலகுக்குள் நுழைந்தார். சில தோல்விகளைச் சந்தித்தாலும் வெற்றிகளை மீண்டும் ருசிக்கத் தொடங்கினார்.

இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியுடன் கூட்டணி அமைத்து கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் வெற்றியைப் பதிவு செய்தார் மார்டினா.

ஊக்க மருந்து சர்ச்சை: மார்டினாவை ஊக்கமருந்து பயன்பாட்டுக்காக இரண்டாண்டுகள் தடை செய்தது சர்வதேச டென்னிஸ் சங்கம். அதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக ஓய்வை அறிவித்தார் மார்டினா. ஊக்க மருந்து சர்ச்சையில் டென்னிஸ் ரசிகர்களும், சில சக வீரர், வீராங்கனைகளும் இவருக்கு ஆதரவாக இருந்தனர். இதுபோன்ற சவால்களைக் கடந்து, 2013-ஆம் ஆண்டு மீண்டும் பல்வேறு போட்டிகளில் களம் கண்டார்.

2015-ஆம் ஆண்டில், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளிலும், 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இந்தியாவின் சானியா மிர்ஸôவுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். அதேபோன்று, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம்களை வென்ற இவர் மீது மீண்டும் புகழ் வெளிச்சம் பரவத் தொடங்கியது.

நிரந்தர ஓய்வு: இரண்டு முறை ஓய்வு பெறுவதாக அறிவித்து டென்னிஸ் ரசிகர்களை சோகக் கடலில் தள்ளியவர், சிங்கப்பூரில் நடந்துமுடிந்த டிபிள்யூடிஏ பைனல்ஸ் போட்டியுடன் நிரந்தர ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.

இத்தனைச் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான 37 வயது மார்டினா, டென்னிஸ் ரசிகர்களின் உள்ளத்தில் என்றும் நினைவில் இருப்பார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com