அம்மா - முன்னணி ஐ.டி. நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹேமா கோபால்

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ஹேமா கோபால். அமெரிக்க பல்கலைக்கழக கெளரவ டாக்டர் பட்டம், முப்பது ஆண்டுகளுக்கும்
அம்மா - முன்னணி ஐ.டி. நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹேமா கோபால்

பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ஹேமா கோபால். அமெரிக்க பல்கலைக்கழக கெளரவ டாக்டர் பட்டம், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐடி துறையில் அனுபவம் பெற்றவர். தனது தாயார் குறித்து பெருமையுடன் சொல்கிறார்:
என்னுடைய அம்மாவிடம் எனக்கு பிடித்த விஷயம் பிறரின் தவறைச் சுட்டிக் காட்டாமல் இருப்பது, எளிமை, உழைப்பு, பரோபகாரம் அபரிமிதமான தைரியம் இவைதான்.என் தந்தை இறந்து ஒரு பட்டம் வாங்கியது என்னை மிக எளிதாக வேலைக்கு அனுப்பியிருக்கலாம். என் படிப்பார்வத்தையும் பள்ளி இறுதி வகுப்பில் வாங்கிய மாநில அளவிலான ரேங்க்கையும் பார்த்து B.Sc, B.Tech (MIT கல்லூரியில்), பிறகு M.S.(I.I.T-யில்) எனப் படிக்க வைத்து சிகரத்துக்கு கொண்டு சென்றவர் அவர்.
நான் கணிதத்தில் 100-க்கு 98 மதிப்பெண் எடுத்தால்,"மீதம் 2 மார்க் எங்கே போச்சு?'' என்று கேட்கும் அம்மா. "ஏன் 100-க்கு 120 வாங்கவில்லை'' எனும் அப்பா. எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இவர்களே எங்களுக்கு பெற்றோராக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அம்மாவின் ஒரு பார்வையில் எங்கள் அனைவரின் சப்த நாடியும் ஒடுங்கும் என்றால், அம்மாவைப் போன்ற ՙLeader՚-ஐ பார்க்க முடியுமா இவ்வுலகத்தில்!
என் அம்மாவை நினைத்தால் எனக்கு நினைவுக்கு வருவது இந்த நாலடியார் செய்யுள் தான்:
"கண்ணிற் சிறந்த உறுப்பில்லை
கொண்டானின் துன்னிய கேளிர் பிறவில்லை
மக்களின் ஒண்மையவாய்ச் சார்ந்த பொருளில்லை
ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்''
அம்மா! எத்தனை அற்புதமான வார்த்தை அம்மா! 
ஆம்! என்னுடைய அம்மா பாலம்மாள் எனும் பட்டு (எல்லா விதத்திலும் பட்டாக இருந்தார்) திருவாரூரில் ஒரு பணக்கார குடும்பத்தில் ரங்கநாயகி - நடேசன் தம்பதியருக்கு பதிமூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். "கப்பல் வீட்டு பேத்தி' என்று அம்மாவை அனைவரும் போற்றினார்கள் திருவாரூரில். பல குழந்தைகள் இறந்து அம்மா தவிட்டுக்கு வாங்கப்பட்டதால் என்னமோ மிகவும் ஒளிர்ந்து சிறந்து விளங்கினார். லேடி வெலிங்கடன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். தனது 14-ஆவது வயதில் உறவினர் மகாதேவனைத் திருமணம் புரிந்து மதுரை சென்று, அங்கே மிக உயர்ந்த வாழ்க்கையை நடத்தினார் அம்மா. 
முதல் குழந்தை உமா, அடுத்து இரண்டு மகன்களை இழந்து, மதுரையை விட்டு சென்னையை அடுத்தத் தாம்பரத்தில் தன் பெற்றோர் வீட்டுக்கு அருகாமையில் குடியேறினார். தன் வாழ்க்கையில் வேதனைகளையும் பலவித சோதனைகளையும் தாங்கினார். பிறகு ரமா, பிரேமா என்ற இரு மகள்களும் ஹேமாவாகிய நானும் பிறந்தோம். அதற்குப் பிறகு ஸ்ரீனிவாசன், மீரா என்ற அன்பு செல்வங்கள் பிறந்தனர்.
என் அம்மா தனது சொந்த முயற்சியால் தந்தைக்குப் பொறுப்பைக் கொடுக்காமல் பெரிய வீட்டைக் கட்டி எங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். சிறு வயதில் நான் அம்மாவை ஒரு சிறந்த தொலைநோக்காளராகத்தான் (Visionary)பார்த்திருக்கிறேன். எதற்கும் அஞ்சாதவர், தைரியசாலி. எங்களுக்கு சிறு வயதிலேயே படிப்பைத் தவிர ஸ்லோகம், ஹிந்தி, விளையாட்டு என பல துறைகளில் திறமையை வளர்த்தார். பெரியவர்களிடம் மரியாதை, படிப்பு, நற்பண்புகள் ஆகியவை தான் வாழ்க்கைக்கு ஆதாரம் என்று ஊட்டி வளர்த்தார்.
நாங்கள் ஒரு கூட்டுக் குடும்பமாக எங்களின் மூன்று மாமா அவர்களுடைய குழந்தைகளோடு வளர்ந்ததால், இப்போது ஐ.டி. துறையில் சொல்கிறோமே team work, collaboration, understanding, expectation ஆகியவற்றில் பல ஆண்டுகளுக்கு முன்பே அனுபவம் பெற்றுவிட்டோம். பெரிய வீடு, குழந்தைகள், கறவை மாடுகள், வீட்டுத் தோட்டம், வீட்டு நிர்வாகம், எங்களுக்கு உறுதுணையாக, அப்பாவின் கெடுபிடிகளுக்கு ஈடு கொடுத்து, தன் தாயார் வீட்டிலுள்ளவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து ஒரு பெரிய Programme Manager-ஆகவே ஆகினார் என் அம்மா. என்னுடைய தம்பி தங்கைகளுக்கும் வேண்டியதைச் செய்தார்.
ஆதித்ய ஹ்ருதயம், திருப்புகழ், கந்தர் சஷ்டி கவசம் இவை அனைத்தையும் எங்களுக்கு சிறுவயதிலேயே ஊட்டி வளர்த்தார். என்னுடைய 14-ஆவது வயதில் அப்பா திடீரென்று உயிரிழந்தார். அதற்கு பிறகு ஒரு பெரிய தலைவராக உருவெடுத்து என் தம்பி, தங்கைகளையும் தன் சொத்துக்களைக் கொண்டு படிக்க வைத்தார். நாங்கள் உயர்நிலையில் வருவதைப் பார்த்து பெருமைக் கொண்டவர் அம்மா! அழகு, அறிவின் பிரதிபிம்பம் என் அம்மா!
எனக்கு மணம் ஆன பின், தாம்பரத்தில் அம்மாவின் வீட்டுக்குச் சென்றபோது, என் அம்மா சொன்ன அறிவுரை இப்போதும் நம் அனைவருக்கும் பொருந்தும்! "நீ இங்கு வரும்போது உன் மாமியார் வீட்டைப் பற்றி சொல்வதாக இருந்தால் அதற்கு நான் அம்பயராக இருக்க முடியாது. நீ உன் குடும்பத்தைக் குறைத்துப் பேசக் கூடாது'' என்பதுதான். இது எனக்கு மட்டுமல்ல; எல்லாப் பெண்களும் எடுத்துக் கொள்ள வேண்டிய அறிவுரை தானே!
அம்மாவுக்கு சோம்பேறித்தனம் என்றாலே என்னவென்று தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் உழைப்பு, சாதனை. பிறகு மற்றவர்க்கு உதவி செய்யும் நற்குணம். நான் பெரிய விளையாட்டு வீராங்கனையாக வருவதையும், என் அக்கா பெரிய நடனக் கலைஞராக வருவதையும் அம்மா பெரிதும் ஊக்குவித்தார். மூன்றாவது அக்கா அம்மாவுக்கு செய்த சேவை (அவர் கால் முறிந்தபோது), அல்லது நான்காவது அக்கா எல்லா நற்பணிகளையும் அம்மாவுக்கு செய்தது எங்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தியது. அதில் பெரும் பங்கு என் தம்பியையும் தங்கையையும் சாரும்.
என் அம்மாவிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். சினிமாவைப் பற்றியோ, நிலம் சாகுபடி செய்வதைப் பற்றியோ, சமையற் கலையைப் பற்றியோ, மற்றவர்க்கு உதவுவதைப் பற்றியோ, பாட்டு பரதநாட்டியத்தைப் பற்றியோ, எதை விடுவது இந்த Multi tasking woman personality-யைப் பற்றி. தன்னுடைய பொருளாதார சவால்களை எங்களுக்கு காட்டாமல் பொருளாதார மேலாளராக இருந்த அம்மா, விருப்பப்பட்டதெல்லாம் தன் பிள்ளைகளின் நலவாழ்வு ஒன்றைத்தான்! 
அம்மாவின் தைரியத்துக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு. அம்மா தன் அண்ணன் மனைவியுடன் ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடும்போது, பேரலையில் நடுக்கடலில் தன் அண்ணன் மனைவி தத்தளிப்பதைப் பார்த்து தன் உயிரைப் பொருட்டாக மதியாது, அவரை இழுத்து கரை சேர்த்தவர் என் அம்மா. இது போன்று பல நிகழ்ச்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் ஐ.டி. துறையில் பல நாடுகளுக்கு சென்றபோது பெருமைப்பட்டவர் என் அம்மா! பல விருதுகள் வாங்கிய போதும், "நீ இன்னும் நன்றாக உழைத்து மென்மேலும் பல விருதுகள் வாங்கலாம்'' என்று ஊக்கம் அளித்தவர் அவர். எங்கள் அம்மா என்றென்றும் எங்களை வாழ்த்தி உறுதுணையாக இருப்பார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com