அல்வா ஸ்பெஷல்

ராகி அல்வா, கேரட் அல்வா, பூசணிக்காய் அல்வா, பாலக் பார்லி அல்வா, அசோகா அல்வா, தேங்காய் அல்வா

ராகி அல்வா

தேவையானவை:
முளை கட்டிய ராகி (கேழ்வரகு) - 200 கிராம்
சர்க்கரை - 1/2 கிலோ
நெய் - 1/2 கிலோ
பால் - 500 மி.லி.
முந்திரி, காய்ந்த திராட்சை - சிறிதளவு
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
செய்முறை: முளை கட்டிய ராகியைத் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பாலெடுக்கவும். டீ வடிகட்டியில் பாலைப் பிழிந்து வடிகட்டவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதனுடன் ராகி பாலையும் சேர்த்து கை விடாமல் கிளறவும். நன்கு வெந்து சுருண்டு வரும்போது, சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு கிளற வேண்டும். அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் மற்றும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போட்டு இறக்கவும். செயற்கை வண்ணம் சேர்க்காத இளம் சிவப்பு நிற, சத்தான ராகி அல்வா தயார்.

கேரட் அல்வா

தேவையானவை:
துருவிய கேரட் - 1/4 கிலோ
சர்க்கரை - 1/4 கிலோ
நெய் - 1/4 கிலோ
கன்டன்ஸ்டு மில்க் - 100 மி.லி.
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சை - சிறிதளவு
செய்முறை: துருவிய கேரட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து பாதி நெய் விட்டு கேரட் விழுதைச் சேர்த்து, நன்கு வேக விடவும். பின் சர்க்கரையைப் போடவும். அதன் பின்பு கன்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்து சுருள கிளறவும். பின்னர் முந்திரி, பாதாமை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும். இறுதியாக ஏலக்காய்த் தூள் தூவி, மீதமுள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பூசணிக்காய் அல்வா

தேவையானவை:
துருவிய வெள்ளைப் பூசணிக்காய் - 1/4 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
நெய் - 1/2 கிலோ
கன்டன்ஸ்டு மில்க் - 200 மி.லி.
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
முந்திரி, பாதம், காய்ந்த திராட்சை - சிறிதளவு
செய்முறை: வாணலியில் நெய்விட்டு பூசணித் துருவலை வதக்கி நன்கு மசிக்கவும். பின்னர் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். அதனுடன் கன்டன்ஸ்டு மில்க்கைச் சேர்க்கவும். சுருள வெந்ததும் முந்திரி, காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு சேர்த்து மீதமுள்ள நெய்விட்டு கிளறி இறக்கவும்.

பாலக் பார்லி அல்வா

தேவையானவை: 
பாலக் கீரை - 1 கிண்ணம்
பார்லி - 1 கிண்ணம்
ஜவ்வரிசி - 1 கிண்ணம்
சர்க்கரை - 5 கிண்ணம்
நெய் - 2 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 2 சிட்டிகை
பாதாம், முந்திரி - சிறிதளவு
செய்முறை: பாலக் கீரையை வேக வைத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பார்லி மற்றும் ஜவ்வரிசியை வாசனை வரும் வரை வறுத்துப் பொடிக்கவும். பாலக் விழுது, பொடித்த பார்லி, ஜவ்வரிசி ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு அதில் அரைத்த பாலக் விழுது, பொடித்த பார்லி, ஜவ்வரிசியை சேர்த்து, கட்டிபடாமல் கிளறவும். சுருண்டு வெந்து வந்ததும் சர்க்கரைச் சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த் தூள், பாதாம், காய்ந்த முந்திரி சேர்த்து இறக்கவும். செயற்கை வண்ணமில்லாத பச்சை நிற அல்வா.

அசோகா அல்வா
தேவையானவை:
பாசிப்பருப்பு - 1/4 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
நெய் - 1/2 கிலோ
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
முந்திரி, பாதாம் - சிறிதளவு
செய்முறை: பாசிப்பருப்பை இளம்சிவப்பாக வறுத்து, குக்கரில் குழைய வேக வைக்கவும். ஆறியதும் அதனை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும் (விழுதாக அரைக்கக் கூடாது). வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த பாசிப்பருப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறவும். அல்வா பதம் வந்ததும் நெய், ஏலக்காய்த் தூள், முந்திரி, பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும்.

தேங்காய் அல்வா

தேவையானவை:
துருவிய தேங்காய் - 3 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
ரவை - 1 கிண்ணம்
நெய் - 1 கிண்ணம்
பால் - 1 கிண்ணம்
கன்டன்ஸ்டு மில்க் - 200 மி.லி.
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சை - சிறிதளவு
செய்முறை: துருவிய தேங்காயைச் சிவக்க வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். ரவையைச் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டு சர்க்கரையை இளம்பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும். சர்க்கரைப் பாகில் தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்த ரவை, கன்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்ததும் நெய், ஏலக்காய்த் தூள், பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.

இந்த வாரம் சமையல் குறிப்புகளை வழங்குபவர் ராஜேஸ்வரி ரவிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com