கற்பனைக்கு அப்பாற்பட்டவர்!

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரான சுதா மூர்த்தி, ஆதரவற்றவர்களுக்கு கருணை இல்லங்களையும், வாசக சாலைகளையும் அமைத்து வருகிறார்
கற்பனைக்கு அப்பாற்பட்டவர்!

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரான சுதா மூர்த்தி, ஆதரவற்றவர்களுக்கு கருணை இல்லங்களையும், வாசக சாலைகளையும் அமைத்து வருகிறார். இந்த பரோபகார சிந்தனை அவருக்கு எப்படித் தோன்றியது என்பதற்கு அவர் அளித்த பதில்:
"வசதியற்றவர்கள் எனக் கருதி யாரை என்னிடம் அனுப்பினாலும் எனக்குள் உள்ள நம்பிக்கை, திறமைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவி செய்வேன். என்னைப் பொறுத்தவரை அனைத்துமே என்னுடைய பணிகள் தான். இவை கடவுள் எனக்காக அளித்தவை. இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
என்னைச் சுற்றியுள்ளவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு சேவை செய்யவும் உதவி புரியவும், கடவுள் என்னை அனுப்பியதாகவே கருதுகிறேன். அவர்களுக்கு செலவு செய்யவே கடவுள் எனக்கு இத்தனை செல்வங்களையும் கொடுத்துள்ளதாக நினைத்துக் கொள்வேன். மக்களுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே அவர்களைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் அவர்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவோ, சேவை செய்யவோ முடியாது. 
"எப்படி உங்களுடைய வாழ்க்கையில் மட்டும் சுவையான சம்பவங்கள் நடக்கின்றன?'' என்று என்னைச் சந்திப்பவர்கள் கேட்பதுண்டு. வாழ்க்கை என்பது தொடர் பயணம். இதில் வித்தியாசமான பல மனிதர்களை நாம் சந்திக்க வேண்டி வரும். இது எதிர்மறையான அனுபவங்களைத் தரலாம். இவை உங்கள் மனதைத் தொடுமானால் சில நேரங்களில் உங்களை மாற்றவும் கூடும்.
நீங்கள் உணர்ச்சி வசப்படுபவராக இருப்பின் அவர்களது வித்தியாசங்களை உங்களால் கவனிக்க இயலும். உங்களுடைய சொந்த வாழ்க்கையே எடுத்துக் கொண்டால் அதில் கூட நிறைய கதைகள் இருக்கலாம். என்னுடைய அனுபவங்களை வைத்தே "வயோதிகனும் அவனது கடவுளும்' என்ற நாவலை எழுதினேன். எனக்குள் இருந்த சிந்தனைகள், மோதல்கள், அவ்வப்போது தோன்றிய கருத்துகள் அனைத்துமே அதில் இடம்பெற்றுள்ளன.
இன்றைய உலகம் துரித கதியில் சுழன்று கொண்டிருக்கிறது. இதில் எதிர்மறையான மகிழ்ச்சிகளுக்காக ஆசைப்படுபவர்களும் உள்ளனர். இது எப்போதுமே மகிழ்ச்சியைத் தராது என்பது என்னுடைய கருத்து. தவறான முறையில் சம்பாதிக்கும் செல்வம் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கக் கூடியதல்ல, விரைவில் அழிந்துவிடும். மகிழ்ச்சி என்பது திடமான மனதிலிருந்து வெளிப்படுவது என்றே கருதுகிறேன். அதைக் கடனாகப் பெற முடியாது. உங்களுடைய சக்திகேற்ப எதைச் சம்பாதிக்கிறீர்களோ அதை வைத்து மகிழ்ச்சியடையுங்கள். 
ஆன்மிகமும், எதிர்மறையான எண்ணங்களும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக் கொண்டதோ என்ற கேள்விதான் இப்போது என்னுடைய மனதில் எழுகிறது. அல்லது மகிழ்ச்சியை வெளியில் தேடுவதற்காக நம் தினசரி வாழ்க்கையிலிருந்து விலகுகிறோமோ? இது அவரவர் தனிப்பட்ட விஷயமாகும். அவரவர் நம்பிக்கை. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. தினமும் ஐந்து நிமிடங்கள் பிரார்த்தனை செய்கிறேன். ஆனால், "கடவுள் என்ன விரும்புகிறார் என்பதை உன்னால் கேட்க முடியுமா?' என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லத் தெரியாது. கடவுள் எல்லாருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டவர் என்பதுதான் என்னுடைய கருத்து'' என்கிறார் சுதா மூர்த்தி.
- பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com