கழிவில் இருந்து ஒரு கலை! - உலகம் முழுவதும் தடம் பதிக்கும் இளம்பெண்

இன்றைய உலகில் புதிய புதிய தொழில்கள், தொழில் யோசனைகள் நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டே வருகின்றன.
கழிவில் இருந்து ஒரு கலை! - உலகம் முழுவதும் தடம் பதிக்கும் இளம்பெண்

இன்றைய உலகில் புதிய புதிய தொழில்கள், தொழில் யோசனைகள் நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் உபயோகமில்லை என்று கருதி தூக்கி எறியும் கழிவுப் பொருள்களைச் சேகரித்து அவற்றை உபயோகமுள்ள கலைப் பொருள்களாக மாற்றும் பணியை ஓர் இளம்பெண் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.
 உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியைச் சேர்ந்தவர் 27 வயதாகும் ஷிகா ஷா. பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரியில் படிப்பதற்காக தில்லி வந்தார். ஆனால் தில்லி மாநகரமே அவருக்கு படிப்பினையாக மாறிப்போனது. வாழ்வாதாரத்துக்காக வறுமை, மாசுபாடு, சுற்றுபுறச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தாங்கி, அன்றாடம் மக்கள் போராடுவதைக் கண்டார். சிறிய நகரில் பிறந்த அவருக்கு இது ஓர் அதிர்ச்சியாகவே இருந்தது. கல்லூரியிலும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பையை தேர்ந்தெடுத்துப் படித்தார். அதன் பின்பு சென்னை ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
 கல்லூரிப் படிப்பை முடித்த அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் சமூக பங்களிப்புத் துறையில் பணியாற்றினார். அதன் காரணமாக சேவை புரிவதற்காக நாடு முழுவதும் சுற்றி வந்தார். அந்தச் சமயத்தில் பல்வேறு கிராமப்புற சமுதாயத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது ஷிகாவுக்கு. இறுதியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், வேலையில்லாத பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலும் தொழில் தொடங்க முடிவெடுத்தார். தனது வேலையைத் துறந்தார்; சொந்த ஊருக்குத் திரும்பினார்.
 "பல நாள்கள் யோசனைக்குப் பிறகு பயன்பாட்டுக்கு உதவாது என்று மக்கள் தூக்கியெறியும் மக்காத குப்பைகள் அல்லது பொருள்களைச் சேகரித்து, அதிலிருந்து கலைநயமிக்க அழகான பொருள்களை உருவாக்கத் தீர்மானித்தேன். உத்தரப்பிரதேசம் பாரம்பரியத்துக்கும், கலை மற்றும் கைவினைப் பொருள்களுக்கும் பெயர் போன மாநிலம். ஆனால் இயந்திரமயமாக்கலுக்கு பின்னர் என் நகரத்தைச் சேர்ந்த பல்வேறு கைவினைக் கலைஞர்கள் வேலையில்லாமலும், வேலைகளை இழந்தும் கஷ்டப்பட்டும் வந்தனர். எனவே, அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கத் தீர்மானித்தேன்'' என்றார் ஷிகா.
 முதலில் தனது வீட்டில் கிடைக்கும் கழிவுப் பொருள்களைக் கொண்டு உபயோகமான பொருள்களை உருவாக்கியுள்ளார். அதன் பின்பு ஒரு நகராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கு கிடைத்த கழிவுப் பொருள்களைக் கொண்டு கலைப் பொருள்களை உருவாக்கினார். இப்போது பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து பல கண்ணைக் கவரும் வண்ணமயமான பொருள்களை உருவாக்கி வருகிறார்.
 "என்னுடைய நிறுவனத்துக்கு "ஸ்கிராப்சாலா' என்று பெயர் வைத்தேன் (ஆங்கிலத்தில் ஸ்கிராப் என்றால் கழிவுப் பொருள்கள் என்று பொருள்). கழிவுப் பொருள்களில் இருந்து கலைப் பொருள்களை உருவாக்கும் கைவினைஞர்களைக் கண்டறிந்து வேலைக்கு அமர்த்துவதில் எனக்கு சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் அவர்களைத் தொடர்ந்து பணியாற்ற வைப்பது தான் சவாலாக இருந்தது. பணியாற்றும் கைவினைஞர்களிடம் அவர்கள் இத்தனை ஆண்டுகளாக எதை உருவாக்கினார்களோ அதையே இங்கும் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தேன். எதையோ உருவாக்குகிறோம் என்று அந்தக் கைவினைஞர்களுக்குத் தெரியும். ஆனால் அது விற்பனையாகுமா, யார் அதனை வாங்குவார்கள், தங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு வழி கிடைக்குமா என்ற குழப்பம் அவர்களைப் பீடித்தது. இதனால் சில மாதங்களிலேயே பல கைவினைஞர்கள் வேலையை விட்டு விட்டுப் போய்விட்டனர்.
 மேலும் ஒரு மூலப்பொருளில் இருந்து கலைப் பொருள்களை உருவாக்குவதிலும், கழிவுப் பொருள்களில் இருந்து கலைப் பொருள்களை உருவாக்குவதிலும் வித்தியாசம் இருந்தது. முதலில் அந்தக் கழிவுப் பொருள்களை சுத்தம் செய்து, நுண்கிருமிகள் நீக்கப்பட வேண்டும். அதன் பின்பே அதனை வேறு ஒன்றாக மாற்ற முடியும். இந்த செய்முறைகள் சில கைவினைஞர்களுக்கு ஒத்துவரவில்லை.
 மேலும் ஒரு பாரம்பரிய நிறுவனம் என்றால் அவர்களுக்கென்று ஒரு பிரத்யேக வடிவமைப்பு அல்லது டிசைன் இருக்கும். அதனைப் பின்பற்றி பொருள்களை ஒவ்வொரு மாதமும் உற்பத்தி செய்துவிட முடியும். ஆனால் கழிவுப் பொருள்களைக் கொண்டு வேலை செய்யும்போது அதனை எவ்வாறு தரமான பொருள்களாக உருவாக்குவது என்று திட்டமிடுதல் பெரும் சவாலாக இருந்தது.
 இந்தத் தொழிலை ஏற்றுக்கொள்ள எனது குடும்பத்தினரை சம்மதிக்க வைக்கவும் கடினமாக இருந்தது. மேலும் தொழிற்சாலைத் தொடங்குவதற்காக கழிவுப் பொருள்களைக் கொண்டு பொருள்கள் தயாரிக்கும் தொழில் என்பதைப் புரிந்து கொள்ளும் நில உரிமையாளரைக் கண்டறியவும் சிரமப்பட்டோம்'' என்றார் ஷிகா.
 பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி என மக்காத கழிவுப் பொருள்கள், மரம் உள்ளிட்டவற்றைச் சேகரித்து கலைப் பொருள்களைச் செய்யத் தொடங்கினர். சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் வகையிலும், வீசப்பட்டிருந்த பல்வேறு பொருள்களை கிலோ கணக்கில் சேகரித்து வந்து, அவற்றைக் கலைப் பொருள்களாக மாற்றியுள்ளனர்.
 ஷிகாவும், கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் இருவர் ஆகிய மூவர் கூட்டணி இணைந்து என்னென்ன கலைப் பொருள்களை உருவாக்கலாம் என்ற திட்டமிடுதல் பணிகளைச் செய்கின்றனர். அதனை கைவினைஞர்கள் செயல்படுத்துகின்றனர்.
 பிளாஸ்டிக் குடுவைகள் பூத்தொட்டியாகவும், வாகனங்களில் டயர் உட்காரும் நாற்காலியாகவும், கிராமபோனில் பயன்படுத்தும் ரெக்கார்டுகள் சுவர் கடிகாரமாகவும், பழைய மரக்கதவு வண்ணமயமான நீண்ட இருக்கையாகவும் மாறிப்போயுள்ளது. இந்தக் கலைப்பொருள்களில் தீட்டப்பட்டுள்ள வண்ணங்கள், ஓவியங்கள் அவற்றுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது.
 இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது ஸ்கிராப்சாலாவின் பொருள்கள் உலகமெங்கிலும் விற்பனையாகத் தொடங்கியுள்ளது. ஃபிளிப்கார்ட், அமேசான், கிராஃப்ட்லி, ஸ்னாப்டீல், என்கிரேவ், கல்ச்சர் டிரக் போன்ற விற்பனை இணையதளங்களின் மூலமாகவும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் இந்தப் பொருள்களை விரும்பி வாங்குகின்றனர். மேலும் கண்காட்சி, சமூக பங்களிப்பு தொடர்பான பயிலரங்குகளிலும் ஸ்கிராப்சாலாவின் பொருள்களுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.
 அதன் காரணமாக தற்போது வீடுகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிலும் கழிவுப் பொருள்களை கலைப் பொருள்களாக மாற்றும் பணிகளைச் செய்து வருகின்றனர்.
 "தற்போது 15-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மாத சம்பளத்துக்கு பணிபுரிந்து வருகின்றனர். பயிற்சி பெற விரும்புவோருக்கும் ரூ. 20 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி அளிக்கிறோம். சுற்றுலாப் பயணிகளும் எங்கள் இடத்துக்கே வந்து கலைப் பொருள்கள் உருவாவதைப் பார்த்துச் செல்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில்முனைவோர், குடும்பப் பெண்கள் அழைத்து, கழிவுப் பொருள்களில் இருந்து கலைப் பொருள்களை உருவாக்குவதை கற்றுக் கொடுக்குமாறு கேட்கின்றனர். எங்கள் நிறுவனம் இன்னும் நீண்ட உயரத்துக்கு தன் கிளைகளைப் பரப்பும் என்று நம்புகிறேன்!'' என்கிறார் ஷிகா.
 - ஜெனி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com