சுஷ்மிதா சென்னும் பெண் குழந்தைகளும்!

1994-ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
சுஷ்மிதா சென்னும் பெண் குழந்தைகளும்!

1994-ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்ட விவரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
சுஷ்மிதா சென்னுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். தன் 18-ஆவது வயதிலேயே ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து கொள்ள விரும்பினார். ஆனால் அது அவ்வளவு சுலபமாக நடைபெறவில்லை.
இந்தியாவில் திருமணமான தம்பதியருக்கே குழந்தைகளைத் தத்துக் கொடுப்பதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே, சுஷ்மிதா சென் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்க நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு திருமணமாகாத தனி நபரான சுஷ்மிதா சென்னுக்குத் தத்து எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 2000-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து, அதற்கு ரீனீ என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார். HAMA(Hindu Adoption & Maintanance Act) என்ற சட்டத்தின் கீழ் சுஷ்மிதா சென் முதல் குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ள விரும்பினார். ஆனால் HAMA சட்டப்படி மீண்டும் பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது. இப்போதும் மனம் தளரவில்லை சுஷ்மிதா. நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். 
அவருடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 2000-ஆம் ஆண்டில் புதிய தத்துச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு JJ Act 2000 (Juvenille & Justice Act) என்று பெயர். செப்டம்பர் 2009-ஆம் ஆண்டில் மும்பை நீதிமன்றம் கொண்டு வந்த இந்தச் சட்டம் HAMA சட்டத்தை விட முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனென்றால் இது முந்தைய சட்டத்தைவிட மதச்சார்பற்றதாக இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் புதிய சட்டத்தின் அடிப்படையில் 2010-ஆம் ஆண்டில் சுஷ்மிதா மூன்று மாத பெண் குழந்தையை இரண்டாவதாகத் தத்தெடுத்தார். அந்தக் குழந்தைக்கு அலிஷா என்று பெயரிட்டுள்ளார்.
சுஷ்மிதா சென் கூறுகையில், "நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். தத்து எடுத்துக் கொள்ளுதல் என்பது விவரிக்க இயலாத உணர்வாகவே உள்ளது. அது ஏதோ நன்கொடை வழங்குவது போன்று அல்ல; நாமாக ஒரு நல்லதை செய்துவிட்டோமோ என்ற பெருமிதமும் அல்ல; அவற்றையெல்லாம் கடந்த ஒரு தூய தாய்மை உணர்வை ஏற்படுத்துகிறது.
என்னால் இயன்ற அளவு குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளவே விரும்புகிறேன்'' என்கிறார். 
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நானே பெற்றெடுத்து ஒரு குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்'' என்றும் கூறியிருக்கிறார்.
("தத்து' - அறிந்ததும் அறியாததும்' நூலிலிருந்து)
- தங்க சங்கர பாண்டியன்
தத்தெடுத்த பிரபலங்கள்!
தமிழகத்தில் நடிகர் பார்த்திபன் - சீதா தம்பதியர் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். ஓர் ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். இத்தம்பதியர் பிரிந்துவிட்ட போதிலும் தத்தெடுக்கப்பட்ட பையன் நடிகர் பார்த்திபனுடன் இருந்து வருகிறான்.
நடிகர் கமல்ஹாசன் 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினத்தன்று அந்த நோயால் பாதிக்கப்பட்ட 1,000 குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "குழந்தைகள் தான் நமது எதிர்காலம். ஆனால் அவர்களில் சிலர் நம்பிக்கையின்மையின் பிடியில் சிக்கியிருப்பது கவலையளிக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிப்பது நம் கடமை. என்னைவிட சிறந்தவர்களும் வசதியானவர்களும் இருக்கிறார்கள். நான் ஓர் இயக்கத்தை மட்டுமே தொடங்கி இருக்கிறேன். மற்றவர்கள் இதனை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.
நடிகைகள் ஷோபனா, லட்சுமி ஆகியோரும் குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளனர். சுஷ்மிதா சென் போலவே ஷோபனாவும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர், ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து அனந்த நாராயணி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்.
நடிகை லட்சுமிக்கு ஐஸ்வர்யா என்ற மகள் இருக்கிறார். இரண்டாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளார் லட்சுமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com