கிறிஸ்துமஸ் கேக் ஸ்பெஷல்

மில்லட் சாக்லெட் கப் கேக், பைனாப்பிள் அப்சைட் டவுண் கேக், முட்டையில்லா கேக், பிளாக் ஃபாரஸ்ட் கேக்

மில்லட் சாக்லெட் கப் கேக்

தேவையானவை:
மில்லட் மாவு (கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சாமை இவற்றில் ஏதாவது ஒன்று) - 2 கிண்ணம்
கோதுமை மாவு - 1/2 கிண்ணம்
கோகோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
பேகிங் பவுடர் - 1 மேசைக்கரண்டி
பேகிங் சோடா - 1/4 மேசைக்கரண்டி
சர்க்கரை - 2 கிண்ணம்
எண்ணெய் - 1/2 கிண்ணம்
தயிர் - 1/2 கிண்ணம்
பால் - 1/2 கிண்ணம்
எசன்ஸ் - சில துளிகள்
செய்முறை: மில்லட் மாவு, கோதுமை மாவு, கோகோ பவுடர், பேகிங் சோடா, பேகிங் பவுடர் ஆகியவைச் சேர்த்து மூன்று முறை சலிக்கவும். சர்க்கரையைப் பொடி செய்து எண்ணெய், பால், தயிர் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். கலந்து வைத்துள்ள மாவுடன் எசன்ஸ் சேர்த்து சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி பேக் செய்யவும். கேக் வெந்ததும் மேலே ஜெம்ஸ் மிட்டாய் வைத்து அலங்கரிக்கவும்.

பைனாப்பிள் அப்சைட் டவுண் கேக்

தேவையானவை:
மைதா - 200 கிராம்
சர்க்கரை (பொடித்தது)- 200 கிராம்
வெண்ணெய் - 150 கிராம்
முட்டை - 4
பேகிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி
அன்னாசிபழ எசன்ஸ் - 2 மேசைக்கரண்டி
அன்னாசிப் பழச்சாறு - 1/2 கிண்ணம்
அன்னாசிப் பழத் துண்டுகள் - 8
செர்ரி பழங்கள் - 10
கேரமல் சிரப் - 1 மேசைக்கரண்டி
செய்முறை: மைதா, பேகிங் பவுடர் சேர்த்து சலிக்கவும். சர்க்கரையைப் பொடி செய்து அதனுடன் வெண்ணெய், முட்டை ஆகியவற்றைத் தனித்தனியாக ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும். மாவு கலந்ததும் கேரமல் சிரப், அன்னாசிப் பழச்சாறு, எசன்ஸ் சேர்த்து கலக்கவும். கேக் பேக் செய்யும் தட்டில் அன்னாசிப் பழத் துண்டுகளைப் பரப்பி அதன் மீது மாவை ஊற்றி அவனில் பேக் செய்யவும். பின்பு கேக்கை மேலிருந்து கீழாகத் திருப்பி மேல் புறத்தில் செர்ரி பழங்களை வைத்து அலங்கரிக்கவும்.

முட்டையில்லா கேக்

தேவையானவை:
மைதா - 200 கிராம்
சர்க்கரை (பொடித்தது) - 200 கிராம்
வெண்ணெய், பால், தயிர் - தலா 70 கிராம்
பேகிங் பவுடர் - 1 மேசைக்கரண்டி
பேகிங் சோடா - 1 சிட்டிகை
எசன்ஸ் - சில துளிகள்
செய்முறை: மைதாவுடன், பேகிங் பவுடர், பேகிங் சோடா சேர்த்து மூன்று முறை சலிக்கவும். வெண்ணெய், பொடித்த சர்க்கரைச் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். பின்பு தயிர், பால் சேர்த்து அடித்துக் கலக்கவும். இந்தக் கலவையுடன் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். ஒரே பக்கமாக கலக்க வேண்டும். இறுதியாக எசன்ஸ் சேர்த்து அவனில் 180 டிகிரி வெப்பத்தில் 40 நிமிடம் பேக் செய்யவும்.

பிளாக் ஃபாரஸ்ட் கேக்

தேவையானவை:
மைதா - 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
வெண்ணெய் - 200 கிராம்
முட்டை - 5
பேகிங் பவுடர் - 3 மேசைக்கரண்டி
கோகோ பவுடர் - 50 கிராம்
வெனிலா எசன்ஸ் - 2 மேசைக் கரண்டி
சர்க்கரைப் பாகு - 2 மேசைக் கரண்டி
ஐசிங் சுகர் - 100 கிராம்
க்ரீம் - 50 கிராம்
சாக்கோ ஸ்டிக்ஸ் - சிறிதளவு
செர்ரி பழம் - 10
செய்முறை: மைதா மாவுடன் கோகோ பவுடர், பேகிங் சோடா சேர்த்து மூன்று முறை சலிக்கவும். பொடி செய்த சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். முட்டையின் வெள்ளை மஞ்சள் கருவை தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். முதலில் வெள்ளைக் கருவை கலவையுடன் சேர்த்து அடித்துக் கலக்கவும். பின்பு சர்க்கரைப் பாகு, மஞ்சள் கரு, எசன்ஸ் சேர்க்கவும். கேக் தயாரிக்கும் தட்டில் கலவையை ஊற்றி அவனில் 45 நிமிடம் பேக் செய்யவும்.
க்ரீம் செய்ய: ஐசிங் சுகர், க்ரீம் சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனுடன் எசன்ஸ் சேர்க்கவும். கேக் வெந்த பின்பு ஆர வைத்து 3 பாகங்களாக வெட்டி நடுவில் க்ரீம் வைத்து மேலே சாக்லெட் ஸ்டிக்ஸ், செர்ரியால் அலங்கரிக்கவும்.

பாஸ்கட் கேக்

தேவையானவை:
மைதா - 250 கிராம்
பொடித்த சர்க்கரை - 250 கிராம்
வெண்ணெய் - 200 கிராம்
முட்டை - 5
பேகிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி
எசன்ஸ் - சில துளிகள்
ஐசிங் செய்ய:
வெண்ணெய் - 50 கிராம்
ஐசிங் சுகர் - 200 கிராம்
ஜெலட்டின் - 2 மேசைக்கரண்டி
பஞ்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண ஃபுட் கலர் - சில துளிகள்
செய்முறை: கொடுக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி ஏற்கெனவே கூறப்பட்டுள்ள முறையில் மாவைத் தயாரித்து தட்டில் ஊற்றி கேக்கைப் பேக் செய்யவும். ஆறியதும் கூடை போன்ற வட்ட வடிவத்தில் வெட்டவும். வெண்ணெய், 50 கிராம் ஐசிங் சுகர், எசன்ஸ் ஆகியவைக் கலந்து ஐசிங் தயாரித்து கேக்கின் மீது தடவவும்.
ஜெலட்டினை 1/4 கிண்ணம் நீர் விட்டு கரைத்து அதனுடன் 150 கிராம் ஐசிங் சுகர், எசன்ஸ் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். இந்த மாவை மூன்று பகுதிகளாகப் பிரித்து வண்ணங்களைச் சேர்த்து பிசைந்து, பூக்கள், பறவைகள் என விருப்பப்பட்ட உருவங்களைச் செய்து அலங்கரிக்கவும். கூடையின் கைப்பிடிக்கு நீளமாக உருட்டி, சுருட்டி நடுவில் பொருத்தவும். அழகான கூடை கேக் தயார்.

இந்த வாரம் சமையல் குறிப்புகளை வழங்கியவர் எல்.உஷா குமாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com