கீரை சமையல் ஸ்பெஷல்!

வெங்காயத்தாளைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிப்பருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தாள் கூட்டு

தேவையானவை:
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
பாசிபருப்பு - கால் கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - தேவைக்கேற்ப 
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப 
செய்முறை:  வெங்காயத்தாளைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிப்பருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். இரண்டும் ஒன்றோடொன்று கலந்து வரும்வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கவும். வெங்காயத்தாள் கூட்டு தயார்.
மணத்தக்காளி துவையல்

தேவையானவை:
மணத்தக்காளிக் கீரை - அரை கட்டு
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
புளி - சிறு நெல்லிக்காயளவு (நீரில் ஊறவைக்கவும்)
உப்பு - ருசிக்கேற்ப
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :  முதலில் கீரையை நன்றாகக் கழுவி சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மூன்றையும் சிறிது நல்லெண்ணெய்யில் வறுத்து கொள்ளவும். வறுத்த பொருள்களுடன் வதக்கிய கீரை, ஊறவைத்த புளி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். சுவையான மணத்தக்காளி துவையல் தயார்.
குறிப்பு: சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டுக் கொண்டு இத்துவையலைக் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் இவற்றிற்கு நல்லது.
வெந்தயக் கீரை தோசை

தேவையானவை :
வெந்தயக் கீரை - 2 கிண்ணம்
தோசை மாவு - தேவையான அளவு 
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
 செய்முறை : வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும், வெந்தயக் கீரையைப் போட்டு வதக்க வேண்டும். பின் வதக்கிய வெந்தயக் கீரை மற்றும் துருவிய தேங்காயை தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும்.  வெந்தயக் கீரை தோசை ரெடி. 
குறிப்பு: வெந்தயக் கீரை தோசையை கார சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சிறுகீரை பொரியல்

தேவையானவை:
சிறுகீரை - 1 கட்டு (நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
துருவிய தேங்காய் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய்வற்றல் சேர்த்து தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர், அதில் நறுக்கிய கீரையைப் போட்டு நன்கு வதக்கி, பின் உப்பு தூவி, சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி, மூடி வைத்து கீரையை வேக வைக்க வேண்டும். கீரை வெந்ததும், துருவிய தேங்காயை அதில் சேர்த்து பிரட்டி, இறக்கினால் சிறுகீரை பொரியல் ரெடி.
பருப்புக் கீரை மசியல்

தேவையானவை:
பருப்புக்கீரை - அரை கட்டு
பச்சைப் பயறு - கால் கிண்ணம்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
அரைக்க:
தேங்காய் பத்தை - 3
மிளகாய் வற்றல் - 1(காரத்திற்கேற்ப)
சீரகம் - கொஞ்சம்
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1ஈர்க்கு
செய்முறை: கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும். பின்னர், பச்சைப் பயறில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். அதில் பூண்டு பல், பெருங்காயம், மஞ்சள்தூள், இரு துளி விளக்கெண்ணெய், வெங்காயம், தக்காளி சேர்த்து குழைய வேக வைக்கவும்.  அடுத்து - தேங்காயுடன், சீரகம், மிளகாய் வற்றல் இவற்றை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.  வெந்த பாசி பருப்புடன் அரைத்த விழுது மற்றும் கீரையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.  கீரை வெந்து எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்து கீரையில் கொட்டிக் கிளறி இறக்கவும். சுவையான பருப்புக் கீரை மசியல் ரெடி.
ஆராக் கீரை சூப்

தேவையானவை:
ஆராக் கீரை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 5
பூண்டுப் பல் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
மிளகு - 5
செய்முறை:  மிளகைத் தவிர மற்ற அனைத்து பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து  இறக்கி அதில் மிளகைத் தூள் செய்து சேர்க்கவும். ஆராக் கீரை சூப் தயார்.
குறிப்பு: நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாரம் இருமுறை ஆராக் கீரை சூப் அருந்தி வந்தால், அவர்களின் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம்  நீங்கும்.  அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதும் குறையும்.  மலச்சிக்கல் தீரும்.  அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
சரும நோய்கள் அணுகாது.  பித்தத்தைத் தணிக்கும். கண்பார்வை நரம்புகள் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத்  தடுக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.
அகத்திக் கீரை சாம்பார்

தேவையானவை:
துவரம் பருப்பு - 100
அகத்திக் கீரை - அரை கிண்ணம்
வெங்காயம்- 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
பூண்டு - 8 பல்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
 செய்முறை: பருப்பை அலசி அத்துடன் பூண்டு, 
தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், பாதி வெங்காயம் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து இறக்கி பருப்பை மசித்துக்  கொள்ளவும்.  அகத்திக் கீரையை சிறிது தண்ணீரில் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர், வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும். மீதி உள்ள  வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அவற்றுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய்த் தூள், வெந்த பருப்பைச் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு கிளறி கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், அத்துடன் வேக வைத்த அகத்திக் கீரையைச் சேர்த்து  கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான சத்தான அகத்திக் கீரை சாம்பார் தயார். 
 - தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com