ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்தான் முக்கியம்!

மலையாளம், தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளும் கலந்து பேசுகிறார் நந்திதா.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்தான் முக்கியம்!

மலையாளம், தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளும் கலந்து பேசுகிறார் நந்திதா. "அட்டகத்தி', "எதிர் நீச்சல்', "அஞ்சல', "உப்புக் கருவாடு' என படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் கதாநாயகி. செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் "நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கான கால்ஷீட் முடித்து காத்திருக்கிறார். செல்வராகவனுக்காக எதிர்மறை கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நந்திதாவிடம் பேசினால்,

""இதுதான் என் ரோல் என வெளிப்படையாக நான் பேசி விட முடியாது. 
செல்வராகவன் தான் இது பற்றி பேச வேண்டும்'' என புன்னகைக்கிறார் நந்திதா. 

 "நெஞ்சம் மறப்பதில்லை', "உள்குத்து' என அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் வேறு மாதிரியான களங்களை தேடுவது போல் தெரிகிறதே...?

"உள்குத்து' நானே எதிர்பார்க்கிற படம். அடுத்த மாதம் ரிலீஸ். "உள்குத்து' படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜு நல்ல நண்பர்.  நான் இந்தப் படத்தில் நடித்து முடிப்பேனா என்று எதிர்பார்ப்பே இல்லாமல் நடித்து முடித்த படம்.  நாகர்
கோயில் பகுதியில் டெக்ஸ்டைல் கடையில வேலை பார்க்கிற பெண் கேரக்டர்.  "அட்டகத்தி' படத்துக்குப் பின் வரும் எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு ஊரின் பின்னணி கதையில் வந்து விடுகிறது. நாகர்கோயில் ஊர் மட்டும் அதில் மிச்சம் இருந்தது. அதுவும் இப்போது அமைந்து விட்டது. "அட்டகத்தி' படத்துக்கு பிறகு நானும், தினேஷும் சேர்ந்து நடிக்கிறோம். நல்ல படம். எதை செய்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்தான் முக்கியம்.  
 

செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா என ஒவ்வொருத்தரும் ஒரு விதம்... இருவரின் அனுபவங்களும் ஒன்று சேருகிற "நெஞ்சம் மறப்பதில்லை' அனுபவம் எப்படி...? 

தமிழில் எட்டு படங்களுக்கு மேல் நடித்தாகி விட்டது.  செல்வராகவன் சார் வேலை வேறு மாதிரி. அவரை ஏன் எல்லோரும் "செல்வராகவன்...' "செல்வராகவன்...' என்று கொண்டாடுகிறார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது. அதற்கு அவரின் தனித்துவம்தான் காரணம். நடிகர்களிடமிருந்து வேலை வாங்குகிற விதமே வித்தியாசமாக இருந்தது. படத்தில் ஒப்பந்தம் ஆன போது எல்லாரும் பயமுறுத்தினார்கள். நிச்சயம் அந்த படத்தை தவற விட்டிருந்தால் வருத்தப்பட்டிருப்பேன்.  முதல் நாளிலிருந்து கடைசி நாள் ஷூட்டிங் வரைக்கும் ஏதாவது விஷயத்தை கற்றுக் கொண்டே இருந்தேன். அதேமாதிரிதான் எஸ்.ஜே.சூர்யாவும். அடிப்படையில் அவரும் ஓர் இயக்குநர். ஆனால், இந்தப் படத்தில் நடிகர் என்ற பரிணாமத்தை மட்டுமே வெளிக்காட்டினார். அவரின் அனுபவம்தான் காரணம். நான், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மூன்று பேரின் காம்பினேஷன் காட்சிகள் ரொம்பவே பேசப்படும். டீசருக்கு பெரும் வரவேற்பு உருவாகி இருப்பது போல், படத்துக்கும் எதிர்பார்ப்புகள் உருவாகும்.  

"அட்டகத்தி', "எதிர்நீச்சல்', "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'... எனத் தொடர்ந்து இப்போது "நெஞ்சம் மறப்பதில்லை' வரைக்கும் இரண்டு ஹீரோயின்கள் கதையிலேயே நடிக்கிறீர்கள்...? 

ஏன் இந்த அளவுக்கு உள் நோக்கி பார்க்கிறீர்கள். படம் ஹிட் ஆகிறதே அதை மட்டும் பேசுங்கள். வேண்டாத சர்ச்சைகள் வேண்டாம். கதையை மட்டும்தான் நான் எதிர்பார்க்கிறேன். வேறு எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதில்லை. இன்னொரு ஹீரோயின் இருக்கிறாரே என்று வருத்தம் எனக்கு இருந்ததில்லை. நான் நடிக்கும் படங்களை என் படமாகத்தான் பார்க்கிறேன். எதற்கும் தனி அர்த்தம் தேட வேண்டாம். என் ரோல் என்ன சொல்ல வருகிறது. அதை எப்படி கவனமாக செய்வது அது மட்டும்தான் என் இலக்கு. 

தெலுங்கு பெண்ணாக இருந்தும், தமிழ் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த காரணம்...? 

தமிழ் சினிமா பிடிக்கும் என்பது மட்டுமேதான் காரணம்.  நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் எந்த சினிமாவிலும் நடிப்பேன். இப்போது ஆனந்த் இயக்கத்தில் நிகில் சித்தார்த் ஹீரோ. கடந்த 2 வருஷத்துக்கு மேல் தெலுங்கில் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். நல்ல கதை வந்தது. இனிமேல் தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாக்களிலும் கவனம் செலுத்த வேண்டியதுதான்.  

ஹன்சிகா, சமந்தா பாணியில் விலங்குகள் பாதுகாப்பு... குழந்தைகள் வளர்ப்பு என சமூக ஆர்வலராக இருக்கிறீர்களே...? 

சேவைகள் பிடிக்கும். அதை ஒருபோதும் விளம்பரமாக்க விரும்பியதில்லை. அது எனக்கு துளியும் பிடிக்காது. அது தேவையில்லை என்று நினைக்கிறேன். இதில் விளம்பரம் தேட ஆசையில்லை.    

- ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com