கடவுளைப் பக்கத்தில் பார்க்கிற அனுபவம்!

உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்குமான உழைப்பு என் எல்லா படங்களுக்கும் இருக்கும். அப்படித்தான் "வாகா'வும்.
கடவுளைப் பக்கத்தில் பார்க்கிற அனுபவம்!

அன்னை இல்லத்தில் காத்திருக்கிறேன்... சிவாஜி வாழ்ந்த வீடு. பிரம்மாண்டமும், சிலிர்ப்புமாக பரபரக்கிறது மனசு. சில மாடிப்  படிகள் ஏறி கதவை திறந்தால்... "வாங்க...'  மென் புன்னகையில் வரவேற்கிறார் விக்ரம் பிரபு.

நிதானமான கதை தேடல்கள் இருந்தும், சின்ன சின்ன சரிவுகள்... இந்த கணம் எப்படி   எடை போடுறீங்க...?

உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்குமான உழைப்பு என் எல்லா படங்களுக்கும் இருக்கும். அப்படித்தான் "வாகா'வும். அந்தப் படத்துக்காக நான் பட்ட கஷ்டங்களை சொன்னால் உங்களுக்கு மிகையாகக் கூட தெரியலாம். உள்ளே போய் அலசி, ஆராய்ந்து இதுவெல்லாம் நடந்தது.... இப்படியெல்லாம் இருந்ததென... என்னால் சொல்ல முடியாது. நல்ல கதை, எல்லை தாண்டிய நேசம், தேசப் பற்று என கதைக் களம் அமைந்ததும் சாதிக்க வேண்டும் என்கிற வெறிதான் இருந்தது. அதனால் கதையின் எண்ணங்களில் நுழைந்து உண்மையாக வெளியே வந்தேன். கதையும், கதாபாத்திரமும் தந்த சவால்களை சரியாகவே கையாண்டேன். "வீர சிவாஜி'யும் அப்படியான ஒரு தாண்டல்தான். எந்தப் படமாக இருந்தாலும் இரண்டு வகையான விமர்சனங்கள் உண்டு. இந்தப் படங்களுக்கும் அது மாதிரிதான் வந்திருக்கின்றன. எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி நடிக்கத்தான் ஆசை. அது "மிஸ்' ஆகும் போது கவலைதான். ஒரு நடிகனுக்கு எல்லாம் சரியாக அமைந்து விட்டால், கடவுளைப் பக்கத்தில் பார்க்கிற அனுபவம் கிடைத்தும் விடும். அது எனக்கும் வாய்க்கும். 

அடுத்து வருகிற "சத்ரியன்' எப்படியிருக்கும்... ஏற்கெனவே ஹிட் அடித்த தலைப்பு என்பதால் எதிர்பார்ப்புகள் இருக்கு...? 

சமீபமாக தமிழில் இப்படியொரு கதைக் களம் தாங்கி ஒரு சினிமா வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு ஓர் அருமையான களம். அற்புதமான கதை. கனவுகளைத் துரத்திப் பிடிக்கிற ஒரு இளைஞனின் யதார்த்த வாழ்க்கைதான் இது. திருச்சி மாநகரம்தான் பின்னணியில் ஒரு உண்மை சம்பவத்தின் தழுவலில் நேர்த்தியாக படமாகியிருக்கிறது. கதைக்கு அப்படியே ஒளி உருவம் கொடுத்து விடாமல், இன்னும் என்னவெல்லாம் சுவாரஸ்யம் சேர்க்க முடியுமோ, அதை செய்து முடித்திருக்கிறோம். யாராக இருந்தாலும் வாழ்க்கையை காதலிக்க வேண்டும். அப்போதுதான் துன்பம் ஓடி ஒளிகிற விஷயமாக இல்லாமல், கடந்து வர வேண்டிய அனுபவமாக இருக்கும். இப்படியான பல செய்திகள் படத்தில் இருக்கின்றன. "சுந்தரபாண்டியன்' எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குநர். நல்ல கதைச் சொல்லி. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. மஞ்சிமா மோகன் ஜோடி. உற்சாக வேகத்தில் வந்திருக்கிறது படம்.

எதிர்பார்ப்பே இல்லாமல் வருகிற படங்கள் ஜெயிப்பதும், பல விளம்பர நுணுக்கங்களோடு வருகிற படங்கள் தோற்பதும் தொடர்கிறது... இந்த நிலையில் படம் தயாரிக்க வர்றீங்க...?

ஆமாம், அடுத்து "நெருப்புடா...' நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறேன். பெரிய கணக்குப் போட்டு இறங்குகிறேன். நல்லது நடக்க வேண்டும்.  நல்லப் படங்களுக்கு  ரசிகர்களின் ஆதரவு உண்டு. "கும்கி', "இவன் வேற மாதிரி' படங்களுக்கு அந்த வகையில்தான் வெற்றி கிட்டியது. இந்த நடிகரின் படத்தை போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை மட்டும்தான் தலைமுறை தாண்டி நிற்கிற அற்புதம். அது போன்ற வார்த்தைகளுக்காகத்தான் இன்னும் வேகமாக ஓட தயாராகி வருகிறேன். அதற்கு சொந்த தயாரிப்பு நிறுவனம் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அதற்காகத்தான் இந்த தயாரிப்பாளர் அவதாரம்.  

தமிழ் சினிமா பெரிய அளவில் மாறியிருப்பதை கவனிக்கிறீர்களா... "ஜோக்கர்' மாதிரியான படங்கள் பெரிய ஹீரோக்கள் இல்லாமல் வெற்றியடைந்துள்ளது...?

பொதுவாக, சினிமாவில் ஹிட் ஆனவர்கள் ஒரே தளத்தில் பயணிப்பார்கள். மாற்றுச் சிந்தனையை அமுக்கி விடுவார்கள். ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின் ஒரு முறையாவது புதிய சிந்தனைகள் அடித்துக் கொண்டு மேலே வரும். இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்னப் படம் வெற்றி என்று நான் பார்க்கவில்லை. இது புதிய சிந்தனைகளின் வெற்றி. மக்களோட ரசனையைப் புரிந்து, காலத்துக்கு ஏற்ற மாதிரி சினிமா மாற வேண்டும். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதை எதிர்க்கும் விஷயம், தடுக்கும் விஷயமும் தடைபடும். அதையும் தாண்டி இளைஞர்கள் வர வேண்டும். நல்ல சிந்தனைகளும் வர வேண்டும். அதில் என் பங்கும் இருக்க ஆசைப்படுகிறேன்.

ரஜினி, கமல் இருவரையும் சந்தித்து இருப்பீர்கள்....?

அப்பாவின் 60-ஆம் கல்யாணத்துக்கு வீட்டுக்கு வந்து வாழ்த்தினார்கள். இருவருக்கும் பெரிய மனசு. அவர்களுக்கு நன்றி சொல்லி ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் அவர்களும் எங்கள் குடும்ப நபர்கள்தான்.  "என்னென்ன படங்கள்.. எப்படி...' என ஆர்வமாக கேட்டார் ரஜினி சார். எப்போதுமே என்னை கவனித்து வருவார் ரஜினி சார். இப்போது இன்னும் நிறைய விஷயங்கள் பற்றி பேசினார். கமல் சார் எப்போதுமே என் நலம் விரும்பி. எதையேனும் கற்றுக் கொண்டே இரு என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன வார்த்தைகள் எப்போதுமே என் உத்வேகம். இருவரும் என்னை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். சுயநலம் இல்லாத இந்த கவனிப்பு ஒரு கலைஞனுக்கு முக்கியம். அது கிடைத்ததில் மகிழ்ச்சி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com