சமையல்...சமையல்...

முள்ளங்கியை தோல் நீக்கிவிட்டு துருவிக் கொள்ளவும். பிறகு, முள்ளங்கி மூழ்கும் அளவு மோர் விட்டு

முள்ளங்கி பொரியல்

தேவையானவை:
முள்ளங்கி - 2
துருவிய தேங்காய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
கடுகு, உளுந்து - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
நீர் மோர் - தேவைக்கேற்ப
செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கிவிட்டு துருவிக் கொள்ளவும். பிறகு, முள்ளங்கி மூழ்கும் அளவு மோர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். 
இதனால் வாடையும், சிறுகசப்பு தன்மையும் நீங்கி, நிறம் மாறாமல் இருக்கும். பிறகு, வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய்ச் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து  பிறகு முள்ளங்கியை நீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து எடுத்து சேர்த்து வதக்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 10-12 நிமிடம் வேகவிடவும். பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். முள்ளங்கி பொரியல் தயார். 

பைனாப்பிள் ரசம்

தேவையானவை:
தோல் நீக்கிய பைனாப்பிள் - 3 துண்டுகள்
பழுத்த நாட்டுத் தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ரசப் பொடி - 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 4 தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
எண்ணெய் - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
புளி - 1 நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - முக்கால் தேக்கரண்டி
தாளிக்க: 
நெய் - அரை தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி - சிறிது
செய்முறை:  தோல் நீக்கிய 2 பைனாப்பிள் துண்டுகளை மைய அரைத்துக் கொள்ளவும். 1 பைனாப்பிள் துண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  துவரம் பருப்பை தனியாக வேகவைத்து மசித்து வைத்துக் 
கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு வறுக்க கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கி வைத்த பைனாப்பிள்,   தக்காளி இரண்டையும் சேர்த்து வதக்கவும்.  அத்துடன்  வறுத்துப் பொடித்ததை சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும். அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், ரசப் பொடி சேர்த்து நுரை வரும் அளவு கொதிக்க விட வேண்டும். பிறகு பெருங்காயம், கொத்துமல்லி சேர்த்து இறக்கிவிடவும். பின்னர், நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்த்து பரிமாறவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.

கைக்குத்தல் அரிசி அடை

தேவையானவை:
கைக் குத்தல் அரிசி - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
பச்சை அரிசி - அரை கிண்ணம்
பயத்தம் பருப்பு - அரை கிண்ணம்
உளுத்தம் பருப்பு - அரை கிண்ணம்
மிளகாய் வற்றல் - 15
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 1 கிண்ணம்
கொத்துமல்லித் தழை - சிறிது
இஞ்சி - 1 சிறிய துண்டு 
செய்முறை: அரிசி பருப்பு வகைகளை தனித்தனியாக ஊறவைக்கவும்.  பின்னர் ஊற வைத்த அரிசி பருப்புகளை தேவையான அளவு நீர்விட்டு அரைக்கவும். (மாவு கெட்டியாக இருக்க வேண்டும்). பின்னர், தோசை மாவை விட்டு தோசைக்கல்லில் தேய்த்து  அதன் மேலே பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், கொத்துமல்லித் தழை, பொடியாக நறுக்கிய இஞ்சி தூவி  இரண்டு பக்கமும் நன்றாக எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். கைக்குத்தல் அரிசி அடை தயார்.

வாழைக்காய் கொத்துக்கடலை புளிக் கூட்டு

(பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காதது)
தேவையானவை:
வாழைக்காய் - 1
கெட்டியாக கரைத்த 
புளி கரைசல் - ஒன்றரை கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
கொத்துமல்லித் தழை - ஒரு பிடி
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கறுப்பு கொத்துக்கடலை - 2 கைப்பிடி
(முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து 5 விசில்விட்டு வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.)
வறுத்துப் பொடிக்க:
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தனியா - 3 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தேங்காய் - தேவைப்பட்டால் சேர்க்கலாம்.
செய்முறை: வாழைக்காயைப் பொடியாக நறுக்கி 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து அத்துடன் சிறிது மோர் சேர்த்து அரைப்பதமாக வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.  கறுப்பு கொத்துக் கடலையையும் குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து பிறகு வேகவைத்த வாழைக்காய் மற்றும் கொத்துக் கடலையை அதனுடன் சேர்த்து வதக்கி புளிக் கரைசல் சேர்க்கவும். பச்சை வாசனை போக 5-7 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக, வறுத்து அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர், 1 தேக்கரண்டி தனியாத் தூள், 1 தேக்கரண்டி தேங்காய் 
எண்ணெய், மல்லித் தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

நார்த்தங்காய் இனிப்பு பச்சடி

தேவையானவை:
நார்த்தங்காய் - 1
வெல்லம் - அரை கிண்ணம் 
(தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 1
மிளகாய் வற்றல் - 1
உப்பு - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
செய்முறை: நார்த்தங்காயைச் சுத்தம் செய்து, விதைகளை நீக்கிவிட்டு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய நார்த்தங்காயைச் சேர்த்து வதக்கி அதில் சிறிது உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போகவிடவும். பின்னர், கரைத்த வெல்லத்தை வடிக்கட்டி பின்னர் வாணலியில் விட்டு பாகு பதத்திற்கு காய்ச்சவும். பின்னர், வெல்லப் பாகை நார்ந்தங்காயுடன் சேர்த்து கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து ஜாம் பதம் வந்தவுடன் இறக்கவும். சுவையான நார்த்தங்காய் இனிப்பு பச்சடி தயார். சப்பாத்தி, தோசை தகுந்த சைடிஷ். 

கறிவேப்பிலை, எள்ளு சாதப் பொடி

தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கிண்ணம்
கறுப்பு எள் - கால் கிண்ணம்
உளுத்தம் பருப்பு - கால் கிண்ணம்
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
நல்ல எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை: கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி பின் காற்றில் நன்றாக உலர்த்தவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயம் சேர்த்து மிளகாய் வற்றல் தாளித்து அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, எள் சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும். அடுத்து கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ( அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்).  பிறகு, வறுத்த கலவைகள் சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, எள்ளு சாதப் பொடி தயார். சூடான சாதத்தில் போட்டு சிறிது நல்லெண்ணெய்விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். சத்து நிறைந்தது.
இந்தவார 
சமையல் குறிப்புகளை 
வழங்குபவர் 
லஷ்மி ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com