அதே "கரண்ட்' இங்கேயும் இருக்கும்!

விஜய் சாரிடமிருந்து அழைப்பு வந்த நிமிடத்திலிருந்து மனசு முழுக்கச் சந்தோஷம் என்றாலும், அந்த நம்பிக்கையைக் கடைசி வரை காப்பாற்ற வேண்டும்
அதே "கரண்ட்' இங்கேயும் இருக்கும்!

பரபரப்பாக இயங்குகிறது "பைரவா' அலுவலகம். இயக்குநர் பரதனிடம் இன்னும் பரபரப்பு.  ஃபிலிம் மேக்கிங் வேலைகள் முடிந்து, இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறது படம். பொங்கலுக்கு தேதி குறிக்கப்பட்டு "அசைன்மென்ட்' வேலைகள் நடக்கின்றன. அதையும் சமாளித்துக் கொண்டே பேசத் தொடங்குகிறார் சந்தோஷமாக...!

பெரிய இடைவெளிக்குப் பின் விஜய்யை இயக்கும் வாய்ப்பு... எப்படி நடந்தது இது...?
நம்பிக்கையைச் சம்பாதிப்பதுதான் சினிமாவில் ரொம்ப முக்கியம். பணத்தையும் கடனையும் சினிமா சீக்கிரமே கொடுத்து விடும். ஆனால், நம்பிக்கையை அவ்வளவு சீக்கிரம் இங்கே சம்பாதிக்க முடியாது. விஜய் சாரிடமிருந்து அழைப்பு வந்த நிமிடத்திலிருந்து மனசு முழுக்கச் சந்தோஷம் என்றாலும், அந்த நம்பிக்கையைக் கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்பு எனக்கு முன்னே நின்றது. பல சமயம் விமர்சனத்தைவிட பாராட்டுகள் தான் நம் பதற்றத்தையும் பயத்தையும் அதிகமாக்கி விடுகிறது. எழுத்தும், வாசிப்பும்தான் என் இயல்பு.  இதற்கு முன்பு விஜய் சார் "அழகிய தமிழ்மகன்' படத்தை இயக்கும் வாய்ப்பு தந்தார். பெரிய நம்பிக்கை வைத்து உழைத்த படம். ஆனாலும் சரியான இடத்துக்கு போகவில்லை. இப்படி ஒரு வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லையே என்று மனசுக்குள் எப்போதும் ஒரு குறுகுறுப்பு. அதனால் விஜய் சாரை சந்திப்பதையே தவிர்த்து வந்தேன்.   இப்படி ஒரு பயணத்தின் போதுதான் விஜய் சாரிடமிருந்து அழைப்பு. அதை ஏற்படுத்திக் கொடுத்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. 

பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் போது விஜய் என்ன சொன்னார்...?

விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் "விஜய்க்கு கதை சொல்லுங்கள்..' என அனுப்பி வைத்தது. பெரிய இடைவெளிக்குப் பின் அப்போதுதான் விஜய் சாரை சந்தித்தேன். எப்போதும் பழகுவது போல், நட்பு பாராட்டினார். "வீரம்' படம் பார்த்தேன். வசனங்கள் சூப்பர்... என புன்னகைத்தார். கதை சொன்னேன். நானும் அவரும்தான் இருந்தோம். இடைவேளை வரை கேட்டு விட்டு காபி குடித்து விட்டு பேசலாமா? என்றார். சிறிது அமைதி காத்து தேநீர் வரவழைத்து கொடுத்தார். அதன் பின் மீதி கதையை சொன்னேன். சூப்பரா இருக்கு... நிச்சயமாக இதை பண்றோம்... மற்ற விவரங்கள் உங்களைத் தேடி வரும் என்று சொல்லி அனுப்பி வைத்தார். இதுதான் நடந்தது. சொன்னது போலவே மற்ற விவரங்கள் தேடி வந்தன.

டைட்டில் ரொம்ப கனமா இருக்கே... என்ன கதை...?

டைட்டிலுக்கே இப்படி சொன்னீங்கனா... கதையும் அப்படித்தான் இருக்கும். இதுவரை தொடாத ஒரு ஏரியா இதன் சிறப்பு. சமூகப் பிரச்னை என்று சொல்லலாம். சென்னை பெருநகரமும், திருநெல்வேலியும் கதைக்குப் பின்னணியாக இருக்கும். தரமான படங்கள் எடுத்தால் யார் பார்ப்பார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டு கொண்டுதான் இருக்கிறோம். சினிமா வெறும் பொழுதுபோக்குக் கலை இல்லை. சமூக நன்மைக்கான ஆயுதம் என இந்த படத்தில் தமிழ் ரசிகர்கள் உணர்வார்கள். அந்தளவுக்கு கதை எல்லாரையும் அழுத்தும். பொருள்களை முதன்மைப்படுத்தாமல், வாழ்க்கையை முதன்மைப்படுத்துகிற கதை. கடந்து போகிற ஒரு பத்திரிகை செய்தியின் பயங்கரம்தான் கதை. பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரம்தானே இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்..

கீர்த்தி சுரேஷ்தான் உங்கள் முதல் சாய்ஸôக இருந்தாரா...?

ஆமாம், அச்சு அசல் தமிழ் முகம் கீர்த்திக்கு... அதுதான் அவரை தேர்வு செய்ய முதற்காரணம். இது போலவே தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிகர்களின் பட்டியலையும் நான்தான் தயாரித்தேன். விஜய் சாரிடம் காட்டியதும் ஒவ்வொன்றாக "டிக்' அடித்தார். அதைப் போல் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் தொடங்கி, அனல் அரசு வரை என் சாய்ஸ்தான். அனல் அரசு பெயரை பார்த்து விட்டு, "இவரை அழைத்து வந்து விட முடியுமா?' என்று கேட்டார். அப்போதுதான் அவர் பாலிவுட்டில் பயங்கர பிஸி என்று தெரிந்து கொண்டேன். "மாஸ்டர் நீங்கதான் வரணும்' என கேட்டுக் கொண்டதால், படத்துக்குள் வந்தார் அனல். அது போலவே வைரமுத்து - சந்தோஷ் நாராயணன் கூட்டணி. இதுதான் முதல் முறை. பாடல் வரிகளில் அவ்வளவு நேர்த்தி. ரூபாய் நோட்டு விவகார அறிவிப்புக்கு முன்னரே வைரமுத்து சார் எழுதித் தந்த பாடல் ஒன்று.... ஆனால், இப்போதும் அப்படியே பொருந்தும். கவிஞர்கள் தீர்க்கதரிசிகள் என்பார்கள் அதை கண்கூடாக பார்த்த அனுபவம் எனக்கு.    

பளீச் பஞ்ச் வசனங்கள் உங்களின் பலம்... விஜய் என்பதால் இன்னும் தனித்துவம் இருக்க வேண்டுமே...?

தரணி சாரிடம் "தில்', "தூள்', "கில்லி', "ஒஸ்தி', தெலுங்கில் "பங்காரம்' என்று ஐந்து படங்களில் பணியாற்றினேன். நாம் சந்திக்கிற மனிதர்கள், படிக்கிற விஷயங்கள் என்று தினமும் ஏதோ ஒரு புது விஷயத்தைக் கிரகிச்சுக்கிட்டே இருப்பேன். வழக்கமாக நமக்கு கீழே வேலை பார்க்கிறவன் கல்யாணத்துக்குப் போனால், ஏதாவது அன்பளிப்பு கொடுப்போம் என்று வழக்கமாக யோசிக்காமல், அவனை முதலாளியாக்கிப் பார்த்தால் எப்படியிருக்கும் என யோசித்ததுதான் "வீரம்' படத்தின் களம். அங்கேதான் ""நமக்குக் கீழே இருக்கிறவனை நாம எப்படிப் பார்த்துக் கொள்கிறோமோ, அதை வெச்சுதான்டா நமக்கு மேல இருக்கிறவன் நம்மளைப் பார்த்துக்குவான்...'' என்று எழுதினேன். இப்படி பல இடங்கள் இருக்கிறது. அதே கரண்ட் இந்தப் படத்திலும் இருக்கும்.

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com